இந்தோ- பசுபிக் பிராந்திய பூகோள அரசியல் போட்டிக்குள் சிக்குண்டுள்ள இலங்கை

மகாநாயக்கத் தேரர்களைத் திருப்திப்படுத்தும் வேட்பாளர் தெரிவுகள் - பின்னணியில் அமெரிக்கா!

சோபா ஒப்பந்தம் கைச்சாதிட வேண்டுமென்பதில் தீவிரமாகச் செயற்படும் தூதுவர்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 01 11:05
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 06 02:53
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
பௌத்த மகாநாயக்கத் தேரர்களையும் பௌத்த குருமாரையும் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர்களையே பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் தெரிவு செய்ய முற்படுகின்றன. மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்திருந்த அமெரிக்கா, தற்போது பௌத்த குருமாரின் விருப்பங்களுக்கு மாறாகச் செயற்பட விரும்பாத நிலையில் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் பௌத்தகுருமாரின் விருப்பங்களுக்குரிய ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்வதில் ஆர்வம் காண்பிப்பதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன. மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சி ஏற்கனவே சிங்கள பௌத்தர்களின் வாக்குகளை மாத்திரமே நம்பிச் செயற்படுன்றது.
 
தற்போது ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் பௌத்த சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கிலும் கண்டி மகாநாயக்கத் தேரர்கள், பௌத்த குருமாரின் விருப்பங்களுக்கு ஏற்ற முறையிலும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை அறிமுகப்படுத்தத் தீர்மானித்துள்ளது.

இங்கே பிரதான சிங்களக் கட்சிகள் இரண்டும் அமெரிக்காவுக்கு தற்போது முக்கியமானதாக இல்லை. மாறாக இலங்கை அரசியல் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் பௌத்த குருமாரோடு எதிர்ப்பின்றித் தமது பூகோள அரசியலைக் கொண்டு செல்லக்கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக்கிவிட வேண்டும் என்ற முழுமையான சிந்தனையில் அமெரிக்கா செயற்படுகின்றது

அமைச்சர் சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதித் தலைவராக இருந்தாலும் கண்டி மகாநாயக்கத் தேரர்களின் விருப்பத்துக்குரியவராக இல்லை. அத்துடன் கட்சிக்குள் ஆதரவு இருந்தாலும் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்களின் ஆதரவுத் தளம் அவருக்குக் குறைவாகவே உள்ளது என்ற நோக்கின் அடிப்படையில் கரு ஜயசூரியவை வேட்பாளராக நியமிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கண்டியை மையப்படுத்திய பெளத்த நிக்காயா அமைப்பின் பிரதான செயற்பாட்டாளராக கரு ஜயசூரிய 2016 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றார். ஆகவே பௌத்த குருமாரையும் பௌத்த சிங்கள மக்களையும் திருப்பதிப்படுத்தும் வகையில் கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டுமென்ற கருத்துக்கள் கட்சிக்குள் மேலோங்கியுள்ளன.

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் மூலமாக வடக்கு - கிழக்கு தாயகப் பிரதேசங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆயிரம் விகாரைகள் அமைக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியிருந்தாலும், ராஜபக்ச குடும்பத்தின் பௌத்த சிங்கள மேலாதிக்கத்திற்கு ஈடான வேட்பாளராக சஜித் பிரேமதாச இருக்க முடியாதென கட்சிக்குள் அபிப்பிராயங்கள் இருக்கின்றன.

கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க, லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோர் சஜித் பிரேமதாசாவை விரும்பியிருக்கவுமில்லை. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, ஸ்ரீலங்கா சுதத்திரக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் ராஜபக்ச குடும்பத்தின் அரசியலுக்குச் சமாதிகட்ட வேண்டுமென்ற நோக்கில் அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து செயற்பட்டும் வருகின்றார்.

இதன் பின்னணியிலேயே கரு ஜயசூரியவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது என்ற யோசனை கட்சிக்குள் அதிகரித்துள்ளது. ராஜபக்ச குடும்பத்தில் கோட்டாபய அல்லது அவருக்கு ஈடான ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும் என்பதில் அமெரிக்கா கடந்த ஒரு வருடகாலமாகவே முயற்சி எடுத்திருந்தது.

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளில் ஒரு கட்சியை மாத்திரம் நம்பியிருக்காமல் தமது பூகோள அரசியல் நலன்களுக்கு ஏற்ற சாதகமான நிலைமைகளைத் தோற்றுவித்து அதற்கேற்ற நகர்வுகளை அமெரிக்கா 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலேயே கையாள ஆரம்பித்துவிட்டது

ஆனாலும் தமது பூகோள அரசியல் நோக்கம் நிறைவேற வேண்டும். குறிப்பாக சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பௌத்த குருமாரைத் திருப்திப்படுத்தும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் ஐக்கிய தேசியக் கட்சியில் தெரிவு செய்யப்பட்டால் அதனையும் வரவேற்கும் நிலையில் அமெரிக்கா செயற்படுவதாகவே கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

கரு ஜயசூரிவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபடுவதாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கொழும்பில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

எனவே இலங்கையில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பிரச்சினையில்லை. ஆனால் தமது பூகோள அரசியல் தேவைக்கு ஏற்றவாறான ஒருவர் ஜனாதிபதியாகவும், அந்த ஜனாதிபதி பௌத்த பிக்குமாரின் விருப்பத்துக்குரியவராக இருக்க வேண்டுமெனவும் அமெரிக்கா விரும்புவதையே இந்த நகர்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் புதிய அரசியல் மாற்றம் எனக் கூறிக் கொண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்க்க அவரோடு நீண்டகாலமாக இருந்த மைத்திரிபால சிறிசேனவை வெளியில் எடுத்து ஜனாதிபதி வேட்பாளராக நியமித்த பின்னணியில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெரும் பங்களிப்பு உண்டு என்பது வெளிப்படை.

ஈழத் தமிழர் நலனுக்காகவே என்ற வாக்குறுதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூலமாக அப்போது பிரச்சாரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் சொற்ப காலத்தில் மகிந்த ராஜபக்சவின் பௌத்த சிங்களச் செல்வாக்கை உறுதிப்படுத்திக் கொண்ட அமெரிக்கா, 2018 ஆம் ஆண்டு முற்பகுதியில் கோட்டாபய ராஜபக்சவோடு மீண்டும் உறவுகளைப் பேண ஆரம்பித்து.

கரு ஜயசூரிய 2006 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 17 உறுப்பினர்களுடன் பிரிந்து சென்று மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருந்தார். புலிகளைப் போரில் வெற்றி கொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்கவே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருந்ததாக கரு ஜயசூரிய அப்போது கூறியிருந்தார்

அதன் பின்னணியிலேதான் கடந்த ஆண்டு ஒக்ரோபா மாதம் மகிந்த ராஜபக்சவை மைத்திரிபால சிறிசேன பிரதமராக்கியிருந்தார் என்ற கருத்தும் உண்டு. ஆனாலும் இலங்கை அரசியல் சூழலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விமர்சனங்களினால் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் மீண்டும் டிசம்பர் மாதம் நான்காம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை மைத்திரி பிரதமராக்கினார்.

இவ்வாறு இரு பிரதான கட்சிகளுக்குள்ளும் நீடித்த அரசியல் குழப்பங்கள், முரண்பாடுகள் காரணமாகவே மற்றுமொரு நகர்வைக் கையாள அமெரிக்கா முற்பட்டது. அதாவது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தமக்குச் சார்பானவராகவும், பௌத்த குருமாரையும் திருப்பதிப்படுத்தக் கூடியவராகவும் இருக்கக் கூடிய ஒருவரை வேட்பாளராகக் கண்டுபிடிப்பதில் அமெரிக்கா கடந்த சில மாதங்களாகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தது.

இதன் பயனாகவேதான் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவோடு கருஜயசூரியைவை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது என்ற தகவல்கள் தற்போது கசிய ஆரம்பித்துள்ளன.

ஆகவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார் என்ற விவகாரத்தில் அமெரிக்கா இரண்டு பிரதான சிங்கள அரசியல் கட்சிகளோடும் பேச்சில் ஈடுபடுகின்றது எனக் கூறினாலும் இலங்கை அரசியலில் குழப்பங்களையே அமெரிக்கா உருவாக்கி விடுகின்றது என்ற கருத்துக்களும் எழாமலில்லை.

அமெரிக்காவைப் பொறுத்தவரை சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை இலங்கையோடு கைச்சாத்திட்டு அடுத்த கட்ட நகர்வுகளை எப்படி முன்னெடுப்பது என்பதிலேயே கூடுதல் கரிசனை காண்பிக்கின்றது.

இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா என்ற நான்கு நாடுகளின் கூட்டு இராணுவ அணியுடனான செயற்பாட்டில், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை வந்துவிட வேண்டுமென்ற நரேந்திர மோடி அரசின் விருப்பம் ஜனாதிபதித் தேர்தல் மூலமாக ஏற்பட்டு விடக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன

இங்கே பிரதான சிங்களக் கட்சிகள் இரண்டும் அமெரிக்காவுக்கு தற்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. மாறாக இலங்கை அரசியல் அதிகாரத்தில் செல்வாக்குச் செலுத்தும் பௌத்த குருமாரோடு எதிர்ப்பின்றித் தமது பூகோள அரசியலைக் கொண்டு செல்லக்கூடிய ஒருவரையே ஜனாதிபதியாக்கிவிட வேண்டுமென்ற முழுமையான சிந்தனையில் அமெரிக்கா இயங்கு சக்தியாக மாறியுள்ளது.

முக்கியமாக கண்டி மகாநாயக்கத் தேரர்கள் உள்ளிட்ட பௌத்த குருமாரை கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா சந்தித்து விளக்கமளித்து வருகின்றார்.

இலங்கையின் ஒற்றையாட்சி இறைமை போன்றவற்றிற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சோபா ஒப்பந்தம் செய்யப்படும் என்ற உறுதிமொழியையும் அமெரிகத் தூதுவர் மகாநாயக்கத் தேரர்களிற்கு வழங்கியுள்ளார்.

பிரதான சிங்கள அரசியல் கட்சிகளில் ஒரு கட்சியை மாத்திரம் நம்பியிருக்காமல் தமது பூகோள அரசியல் நலன்களுக்கான சாதகமான நிலைமைகளைத் தோற்றுவித்து அதற்கேற்ற முறையிலான நகர்வுகளை அமெரிக்கா 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலேயே கையாள ஆரம்பித்துவிட்டது.

இதற்கு இந்திய மத்திய அரசும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது. இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா என்ற நான்கு நாடுகளின் கூட்டு இராணுவ அணியுடனான செயற்பாட்டில், இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் இலங்கை வந்துவிட வேண்டுமென்ற நரேந்திர மோடி அரசின் விரும்பம் ஜனாதிபதித் தேர்தல் மூலமாக ஏற்பட்டு விடக்கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலேதான் பூகோள அரசியல் என்ற பெயரில், இலங்கைத் தீவுக்கு இப்படியான அடிமை நிலை ஏற்பட்டது என்பதை சிங்கள ஆட்சியாளர்கள் உணருவதாக இல்லை.

கரு ஜயசூரிய 1940 ஆண்டு செப்ரெம்பர் மாதம் கம்பஹா மாவட்டத்தில் பிறந்தார். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்ற அவர் பிரபல தொழில் அதிபர். 1997 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மேயராகப் பதவி வகித்திருந்தார்.

1997 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் மூலமாக இலங்கை அரசியலில் அறிமுகப்படுத்தப்பட்ட கரு ஜயசூரிய, 2006 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து 17 உறுப்பினர்களுடன் பிரிந்து சென்று மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.

பின்னர் 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். தற்போது சபாநாயகராகப் பதவி வகிக்கின்றார். புலிகளைப் போரில் வெற்றிகொள்வதற்காக ஒத்துழைப்பு வழங்கவே மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருந்ததாக கரு ஜயசூரிய அப்போது கூறியிருந்தார்.