ஒற்றையாட்சி அரசியல் யாப்பை மேலும் உறுதிப்படுத்த

இலங்கை நாடாளுமன்றத்தில் புதிய அரசியலமைப்புச் சபை- சபாநாயகர் அறிவித்தார்

ஏற்கனவே நியமிக்கப்பட்ட வழிகாட்டல் குழுவுக்கு நடந்தது என்ன? மஹிந்த அணி மௌனம்
பதிப்பு: 2018 ஜூன் 22 23:14
புதுப்பிப்பு: ஜூன் 23 14:59
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையட்சி அரசாங்கம், தற்போது நடைமுறையில் உள்ள 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பை மாற்றி புதிய அரசியல் யாப்பை உருவாக்க. அரசியலமைப்புச் சபை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த அரசியலமைப்புச் சபை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று வெள்ளிக்கிழமை திடீரென அறிவித்தார். ஏற்கனவே 225 பேர் கொண்ட இலங்கை நாடாளுமன்றம், புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்துக்கான, அரசியலமைப்பு நிர்ணய சபையாக 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய அரசியலமைப்புச் சபை குறித்து சபாநாயகர் அறிவித்துள்ளார்.
 
2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருந்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் கீழ், ஆறு உப குழுக்களும் நியமிக்கப்பட்டிருந்தன. அதனைவிட ஜனாதிபதி. பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை உள்ளடக்கிய வழிகாட்டல் குழு ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில், மேலதிகமாக அரசியலமைப்புச் சபை உருவாக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் திடீரென அறிவித்துள்ளதாகவும், அந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் நாடாளுமன்றச் செய்தியாளர்கள் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இந்த அரசியலமைப்புச் சபையில், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர். சபை முதல்வர் உள்ளிட்ட ஏழுபேர் அங்கம் வகிப்பர் எனவும் இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் இந்தத் திடீர் அறிவிப்பை வெளியிட்டபோது, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் எவரும் கேள்வி எழுப்பவில்லை. குறிப்பாக மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி. ஜே.பி.வி. போன்ற கட்சிகள் அமைதிகாத்தன.

அதேவேளை, இந்த அரசியலமைப்புச் சபை உருவாக்கப்படுகின்றமை குறித்து, கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூட கலந்துரையாடப்படவில்லை என ஜே.பி.வி. உறுப்பினர் ஹந்துன் நெத்தி கூறினார்.

அடுத்த சபை நடவடிக்கையின்போது கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சபையாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாற்றப்பட்ட பின்னர், முதலாவது அமர்வு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி கூடியது.

அதன்படி புதிய அரசியல் யாப்புத் தொடர்பான நகல் சட்ட வரைபை தயாரிப்பதற்கு உதவியாக யோசனைகளை முன்வைப்பதற்கு உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆறு உப குழுக்களில் அரசதரப்பு எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் உள்ளடங்கியிருந்தனர்.

வெவ்வேறுபட்ட தலைப்புக்களில், இந்த ஆறு உப குழுக்களும் யோசனைகளை தயாரித்து, 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி, மார்ச் மாதங்களில் வழிகாட்டல் குழுவிடம் கையளித்துமிருந்தன.

இந்த யோசனையின் பிரகாரம் வழிகாட்டல் குழு சில திருத்தங்களை செய்தது. அதன் அடிப்படையில் புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசியலமைப்புச் சபையில் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் 2017 செப்ரெம்பர் மாதம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

வழிகாட்டல் குழுவுக்கு ஆலோசனைகளை முன்வைப்பதற்கும் புதிய யாப்புக்கான நகல் சட்ட மூலத்தை வரைந்து முழுமைப்படுத்த நிபுணர்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டிருந்த,

அந்த நிபுணர்குழு தனது முதலாவது வரைபை கடந்த மே மாதம் 24 ஆம் திகதி சமர்ப்பிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. ஆனால், மே மாதம் 24 ஆம் திகதி வழிகாட்டல் குழு முன்னிலையில் கூடிய நிபுணர்குழு நகல் சட்ட மூலத்திற்கான வரைபை முழுமையாக முடிப்பதற்கு மேலும் கால அவகாசம் கோரியிருந்தது.

அதன்படி மூன்று மாதகால அவகாசம் வழிகாட்டல் குழுவினால் வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்று புதிய அரசியலமைப்புச் சபை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள் நின்றுகொண்டு ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீரவு காண முடியாதென அரசியல் ஆய்வாளர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 2007ஆம் ஆண்டு. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்வு யோசனை ஒன்றை இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்து.

அது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஒற்றையாட்சி அரசியலமைப்பை மையப்படுத்தி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்வு யோசனையை தயாரித்துள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அந்தத் தீர்வு யோசனை தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த பெரும் அடி என்றும் சம்பந்தன் ஆவேசமாகக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.