வடக்குக் கிழக்கில் இலங்கைப் படையினரால்

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கச் செயற்பாட்டாளர் விபத்தில் பலி- மனைவி படுகாயம்

ஓகஸ்ட் மாதத்தில் இரண்டு விபத்துகள்
பதிப்பு: 2019 ஓகஸ்ட் 26 16:59
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 26 21:16
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டுத் தமது பிள்ளைகளைத் தேடி அலையும் பெற்றோர் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். சிலர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். வேறு சிலர் நோய்வாய்ப்பட்டு இறக்கின்றனர். இந்த ஓகஸ்ட் மாதத்தில் இரு விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். முவர் படுகாயமடைந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாற்பது பேர் நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர். முல்லைத்தீவு கணுக்கேணியைச் சேர்ந்த 61 வயதான பொன்னுத்துரை திருஷ்னசம்பந்தர் என்ற தந்தை ஒருவர் கடந்த வியாழக்கிழமை விபத்தில் பலியாகியுள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்புக்குச் சென்று திரும்பும்போதே இந்த விபத்து இடம்பெற்றதாக உறவினர்கள் கூறுகின்றனர்.

போர் நடைபெற்றபோது 2009 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 14 ஆம் திகதி அவரது மகன் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

கடந்த பத்து ஆண்டுகளாக தனது மகனைத் தேடிப் பல்வேறு இடங்களிலும் முறையிட்டிருந்தார். மகனை மீட்டுத் தருமாறு கோரி போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் தனது மற்றுமொரு மகளை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்காக கொழும்புக்குச் சென்று வரும் வழியில் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார். மனைவி அனுராதபுரம் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் செயற்பாட்டாளரான அமலநாயகி அமலராஜ் மட்டக்களப்பில் சென்ற நான்காம் திகதி விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய மகளும் காயமடைந்துள்ளார்.

கடந்த 20ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடியலைந்த வவுனியா ஓமந்தை மகிழங்குளத்தைச் சேர்ந்த 56 வயதான வேலாயுதம் செல்வராசா என்ற தந்தையும் உயர் குருதி அழுத்தத்தினால் உயிரிழந்தார்.

வவனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கடந்த தொளாயிரம் நாட்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.