இலங்கை ஒற்றை ஆட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல்

ரணில் சம்பந்தன் சந்திப்பு- சஜித் பிரேமதாச மீது அதிருபதி

ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குமாறும் கோரிக்கை
பதிப்பு: 2019 செப். 17 22:41
புதுப்பிப்பு: செப். 18 21:50
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டால் ஆதரவு வழங்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் பத்தரமுல்லயில் உள்ள இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார். இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சஜித் பிரேமதாசவிடம் தெளிவான நிலைப்பாடு இல்லையென்றும் இதனால் அவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பாதென்றும் சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
 
சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதித் தேர்தலில் தற்போது சபாநாயகராகப் பதவி வகிக்கும் கரு ஜயசூரிய போட்டியிட்டால் ஆதரவு வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

சுமார் ஒரு மணி நேரமாக இடம்பெற்ற சந்திப்பில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை நீக்க வேண்டும் என்றும் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க ஆதரவு வழங்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடக் கூடுமெனச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் கூட்டமைப்பு இன்று சந்தித்து உரையாடியுள்ளது.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்க முடியாதென்றும் தமிழ் மக்களை ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றியுள்ளதாகவும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் சிறிதரன், கூறியதாகவும் இது குறித்து சம்பந்தனோடு வாக்குவாதப்பட்டதாகவும் தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை. கரு ஜயசூரிய பௌத்த நிக்காய பீடத்தின நிறைவேற்றுப் பணிப்பாளராக 2016 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகின்றார். 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் போர் நடைபெற்றபோது விடுதலைப் புலிகளை அழிப்பதற்கான ஒத்துழைப்பு என்று கூறி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி 17 உறுப்பினர்களோடு மகிந்த ராஜபக்சவின் அரசாங்கதில் இணைந்து அமைச்சராகவும் பதவி வகித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான சூழலில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் இருந்து விலகி மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். ஆனாலும் அப்போது மகிந்த ராஜபக்ச அரசாங்கம் நடத்திய போர் வெற்றிக் கொண்டாட்டங்களிலும் கலந்துகொண்டார்

அதேவேளை. ஜனாதிபதித் தேர்தலில் கரு ஜயசூரிய போட்டியிட்டால் ஜே.வி.பி ஆதரவு வழங்குமென்றும் அது தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் ராஜித சேனரட்ன தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவாரெனவும் சந்திப்பின்போது ஜே.வி.பி கூறியதாக ராஜித சேனரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளாா்.

ஆனால் அமைச்சர் ராஜித சேனரட்ன கூறிய இந்த விடயம் தொடர்பாக ஜே.வி.பி இதுவரை எதுவுமே கூறவில்லை.