இலங்கை ஜனாதிபதித் தேர்தல்-

சர்வதேச உத்தரவாதமின்றி சிங்களப் பேரினவாதத் தலைவர்களோடு பேரம் பேச முடியாது- அனந்தி சசிதரன்

அனுபவித்த பிசாசுக்கும், அனுபவிக்காத பேய்க்கும் இடையேயான போட்டி எனவும் கூறுகிறார்
பதிப்பு: 2019 ஒக். 10 13:48
புதுப்பிப்பு: ஒக். 14 21:59
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத்தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி அரசு தொடுத்திருக்கும் போரின் வடிவம் காலத்துக்குக் காலம் மாறி வருகிறது. புதிய, புதிய வடிவங்களில் அந்தப் போர் தொடர்ந்து கொண்டிருப்பதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள சிவாஜிலிங்கத்தை ஆதரிப்பதற்கான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி, இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத சக்திகளுக்குள்ளே ஒரு சிக்கலான போட்டியை சர்வதேசச் சக்திகள் தோற்றுவித்துள்ளன. எனவே, சிங்களத் தரப்புகளுடன் அல்ல, சர்வதேசத் தரப்புகளிடமே தமிழர்களின் பேரம்பேசும் அரசியலின் குறி இருக்கவேண்டும் என்கிறார் அனந்தி.
 

தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியற் பிரமுகரும் முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினருமான ம.க. சிவாஜிலிங்கமும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் பிராந்திய அரசியற்பொறுப்பாளர்களில் ஒருவரான எழிலன் அவர்களின் துணைவியாரும் பின்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான அனந்தி சசிதரனும் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் சந்திப்பொன்றை நடத்தித் தமது நிலைப்பாட்டை முன்வைத்தனர்.

அனந்தி அவர்கள் எடுத்திருக்கும் நிலைப்பாடும் தந்திருக்கும் விளக்கமும் மதில் மேல் பூனைகளாக அன்றித் துணிவாக ஈழத் தமிழர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவேண்டியதன் அவசியத்தைச் சுட்டி நிற்கின்றன.

அதேவேளை, அவர் வெளிப்படுத்தியிருக்கும் நிலைப்பாட்டை இதய சுத்தியுடன் ஆராய்ந்து வெகுஜனத் தளத்தில் கருத்துநிலைப்பாடு ஒன்று திடமாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதைக் கூர்மை ஆசிரியபீடம் தனது கருத்தாக இங்கு பதிவு செய்கிறது.

அறிக்கையின் முழு விபரம் வருமாறு:

1977 இல் ஒற்றையாட்சி அரசின் நேரடி, மறைமுக அனுசரணையுடன் இலங்கைத் தீவு முழுவதும் இனப் படுகொலை ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

கோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப் பேரினவாதத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை

அதற்குப் பதிலளித்த அப்போதைய பிரதம மந்திரி, ஜே. ஆர் ஜெயவர்த்தனா, போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் என்று பதிலளித்தார்.

இதை அவர் சொல்லி ஒரு வருடத்தில், அதாவது 1978 இல் இலங்கைத் தீவின் ஒற்றையாட்சி அரசின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டின் அரசியலமைப்பையே ஜே. ஆர். ஜெயவர்த்தனா மாற்றியமைத்தார்.

அன்று தொடக்கம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிதான் முப்படைகளின் தளபதியாகவும் இருந்துவருகிறார்.

ஈழத்தமிழர்கள் மீதான சிங்களப் பேரினவாத ஒற்றையாட்சி அரசு தொடுத்திருக்கும் போரின் வடிவம் காலத்துக்குக் காலம் மாறிவந்திருக்கிறது. புதிய, புதிய வடிவங்களில் அந்தப் போர் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தொடருகின்ற இந்தப் போருக்கு ஜனாதிபதியாக ஆட்சிக்கட்டிலில் வீற்றிருப்பவரே தளபதியாக இருந்துவருகிறார்.

1987 இல் இந்தியப் படை இங்கு வந்தபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போரை உருவாக்கினார்.

இந்தியப் படை வெளியேறட்டும் என்று சொல்லிப் பதவிக்கு வந்த பிரேமதாசவும், ஈழம் தவிர எல்லாம் தருவேன் என்று சொல்லி, ஆறாம் சட்டத்திருத்தத்தை மாற்றலாம் என்றும் சொல்லி, பின்னர் அதை மாற்றாது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தார். போரை நோக்கி நகர்ந்தார். பின்னர், சமாதானப் புறாவாகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு வந்த சந்திரிக்கா கொடிய போர் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டார். அவரைத் தொடர்ந்து வந்த மகிந்த ராஜபக்ச இன அழிப்புப் போரின் உச்சிக்கே சென்றார். பின்னர் வந்த மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் மீது ஒரு மரபுரிமை இன அழிப்புப் போரையே தொடுத்திருக்கிறார்

இந்தியப் படை வெளியேறட்டும் என்று சொல்லிப் பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாசவும், ஈழம் தவிர எல்லாம் தருவேன் என்று சொல்லி, ஆறாம் சட்டத்திருத்தத்தை மாற்றலாம் என்றும் சொல்லி, பின்னர் அதை மாற்றாது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தார். போரை நோக்கி நகர்ந்தார்.

பின்னர், சமாதானப் புறாவாகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கொடிய போர் ஒன்றைக் கட்டவிழ்த்துவிட்டார்.

அவரைத் தொடர்ந்து வந்த மகிந்த ராஜபக்ச இன அழிப்புப் போரின் உச்சிக்கே சென்றார்.

பின்னர் வந்த மைத்திரிபால சிறிசேன நல்லாட்சி என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் மீது ஒரு மரபுரிமை இன அழிப்புப் போரையே தொடுத்திருக்கிறார். அநுராதபுரத்தையும் பொலநறுவையையும் மையமாகக் கொண்டது அவரது சிந்தனை. இது வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக உடைக்கும் திட்டம். நல்லிணக்கம் என்ற பெயரில் நடாத்தப்படும் ஒரு புதுவிதமான போர். இதற்குக் கிழக்கில் கன்னியாவும் வடக்கில் நீராவியடியும் சாட்சி.

இந்தப் போர்கள் எல்லாம் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஒவ்வொரு பரிமாணங்களாக, அடுத்தடுத்த கட்டப் படிமுறைகளாக விரிகின்றன.

தொடரும் இந்தப் போர்களின் அடுத்த வடிவத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற போட்டியே தற்போது தென்னிலங்கையில் நடக்கவிருக்கிறது.

இந்தத் தருணத்தில் ஈழத் தமிழர்களான நாங்கள் மேற்கொள்ளவேண்டிய தெரிவு என்ன? சொல்லவேண்டிய செய்தி தான் என்ன?

கோத்தபாய ராஜபக்ச, சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பியின் அநுரா குமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப் பேரினவாதத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

இவர்களுடன் தமிழர் தரப்பு பேரம் பேசவேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். பேரம் பேசும்போது அவர்கள் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு எந்தவிதச் சர்வதேச உத்தரவாதமும் இல்லாமல் பேரம் பேசுவதில் உண்மையில் ஒரு பலனும் இல்லை.

சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம் பேசுதல் என்பது தற்போதைய நிலையில் செல்லாக்காசு போன்றது.

எழுதிய ஒப்பந்தங்களையே கிழித்துப் போடும் சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம் பேசுவதில் பலன் ஏதும் இல்லை. மாறாக, இவர்களை இயக்கும் சர்வதேச சக்திகளுடன் தான் நாங்கள் பேரம் பேசவேண்டும்.

அமெரிக்காவும் இந்தியாவும் இன்று இறுக்கமாகப் பின்னிப் பிணைந்த ஓர் அணியாகச் செயற்படுகின்றன. இந்து-பசிபிக் கடற் போர்முனையில் சீனாவுக்கெதிரான வியூகம் வகுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் நான்முனைச் சக்திகளாக இணைந்திருக்கின்றன. இந்து சமுத்திரம் போர்ச் சூட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

2009 இல் இருந்த பூகோளப் போட்டா போட்டியை விட தற்போதைய இந்து சமுத்திரக் கேந்திர முக்கியத்துவம் பலமடங்கு வீச்சாகியிருக்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் நினைத்திருந்தால் கோட்டபாய ராஜபக்சவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழலை இலகுவாகத் தோற்றுவித்திருக்கலாம். ஆனால், அதை அவர்கள் செய்யவில்லை.

இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்ட போது அதைக் கண்டித்த சர்வதேசத் தரப்புகள், ஐ.நாவில் சமாதானப் படைக்கான இலங்கையின் பங்களிப்பைக் குறைக்கவுள்ளதாக இலங்கை அரசுக்கு ஒரு செய்தியைச் சொல்லி மிரட்டிய சர்வதேசச் சமூகம், சவேந்திர சில்வாவுக்கே நடைமுறையில் கட்டளைத் தளபதியாக இருந்த கோட்டபாய ராஜபக்சவை ஜனாதிபதித் தேர்தலில் களமாட அனுமதித்தது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்காவிலே கோட்டபாய ராஜபக்சவுக்கு எதிராக வழக்குகள் மனித உரிமை நிறுவனங்களால் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் காரணம் காட்டி அமெரிக்க அரசு அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்யமுடியாது என்று மறுத்திருக்கலாம். அதை வெளிப்படையாகவே ஒரு அறிக்கையிட்டுச் சொல்லியிருக்கலாம். ஏன் செய்யவில்லை?

ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் கொழும்புக்கு வந்து உரையாற்றிய அமெரிக்காவின் முன்னாள் இலங்கைத் தூதுவர் ரொபர்ட் பிளேக், கோட்டபாய ராஜபக்சவைப் மெச்சிப் பேசியதையும் நாங்கள் கவனித்திருக்கிறோம்.

மறுபுறத்தில் சஜித் பிரேமதாச போட்டியாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவரும் அம்பாந்தோட்டையின் பிரதிநிதி.

ஜனாதிபதி ஆட்சியின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்தவேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்கா போன்றவர்கள் விரும்புவது போலத் தெரிந்தாலும், அப்படியெல்லாம் செய்வதாகத் தான் ஒத்துக்கொள்ளவில்லை என்ற தோரணையிலேயே சஜித் பிரேமதாச இயங்குகிறார்.

ஒற்றையாட்சியைக் கைவிடப் போவதில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். ஒற்றையாட்சியை மாற்றாமல் அதிகளவு அதிகாரப் பரவலாக்கம் என்று அவர் சொல்லியிருப்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு வெற்றுக் கோசமே. அவரின் தகப்பன் சொன்ன “எல்லாம் தருவேன் ஈழம் தவிர என்பதை” வரலாற்றில் பார்த்து வந்தவர்கள் தான் நாம் என்பதை மறந்துவிடக் கூடாது.

தென்னிலங்கையைப் பொறுத்தவரை இனவாத அரசியலை யார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களைத் தெரிந்தெடுக்கவேண்டும் என்ற மன நிலை சிங்கள மக்கள் மத்தியில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது.

அது மட்டுமன்றி ஏப்ரல் மாதம் தீவை உலுக்கிய ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, “தேசிய பாதுகாப்பு” மற்றும் “பயங்கரவாதத் தடைச் சட்டம்” என்ற பழைய விடயங்களுக்கெல்லாம் புதிய முலாம் பூசப்பட்டிருக்கிறது.

தென்னிலங்கையைப் பொறுத்தவரை இனவாத அரசியலை யார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களைத் தெரிந்தெடுக்கவேண்டும் என்ற மன நிலை சிங்கள மக்கள் மத்தியில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது

ஆகவே, இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள இனவாத சக்திகளுக்குள்ளே ஒரு சிக்கலான போட்டியை சர்வதேச சக்திகள் தோற்றுவித்திருக்கின்றன.

சீனாவின் பக்கம் போக முடியாத ஒரு சிக்கலான நிலைமையைச் சிங்களப் பேரினவாத சக்திகளிடையே உருவாக்கும் போக்காகவும் இதை நாங்கள் பார்க்கலாம்.

தமிழர்களைப் பொறுத்தவரை “அனுபவித்த பிசாசுக்கும், அனுபவிக்காத பேய்க்கும்” இடையே நடைபெறும் போட்டியாகவே கோட்டபாயவுக்கும் சஜித்துக்கும் இடையே நடைபெற இருக்கும் போட்டி இருக்கப்போகிறது. சிங்களப் பேரினவாத வாக்குகளை உடைக்கும் மூன்றாவது வேட்பாளராக ஜே.வி.பியின் அநுரா திசநாயகவும் விளங்கப்போகிறார்.

இந்தப் பொறிக்குள் தமிழர்களின் வாக்குகள் விழுந்து நாம் அர்த்தமற்ற பலிக்கடாக்களாகப் பயன்படுத்தப்படாது, எமது அணுகு முறை சுய நிர்ணய உரிமையை மையப்படுத்தியாக இருக்கச் செய்வதன் மூலம் சர்வதேச சக்திகளுடன் தமிழர்கள் பேரம்பேசும் நிலையை நாங்கள் வலுப்படுத்தலாம்.

ஆகவே, சர்வதேச சமூகத்துடன் பேரம் பேசாது மௌனமாக இருந்து செல்லப்பிள்ளை அரசியல் செய்வதால் பலன் ஏதும் இல்லை என்ற நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதான தெரிவை மேற்கொள்ள நான் முடிவெடுத்தேன்.

இதே சிந்தனையை சிவாஜிலிங்கம் அண்ணாவும் வலியுறுத்தினார். என்னைப் போட்டியிட வைப்பதற்கு ஒரு கட்சியை நாடினார். ஆனால், அதற்கு அந்தக் கட்சி சம்மதிக்கவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவேண்டுமானால் ஒன்றில் ஒரு பதியப்பட்ட கட்சியின் வேட்பாளராக நான் தெரிவுசெய்யப்படவேண்டும் அல்லது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கவேண்டும். கட்சி கிடைக்காத நிலையில் என்னால் போட்டியிட முடியாத நிலை தோன்றியது.

சிவாஜி அண்ணா முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் போட்டியிடும் வாய்ப்பு இருந்தது. அதை அவர் செய்ய முன்வந்த போது நானும் அவருக்குப் பக்கபலமாக நிற்பதாக முடிவெடுத்தேன்.

ஆகவே, சர்வதேச சக்திகள் தமிழர்களுடன் பேரம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பை நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். அதைச் செய்வதற்கு விரும்பும் சக்திகள் எம்மை அணுகலாம். ஈழத்தமிழர்களின் அபிலாசை குறித்த நலனை மையப்படுத்தியே எமது பேரம் பேசல் அமைந்திருக்கும்.

அதேவேளை, இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கும் எங்கள் நிலைப்பாட்டுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சிவாஜி அண்ணாவுக்கு முதலாவது வாக்கையும், ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிப்பதாகச் சொல்லும் பேரினவாத மனநிலை இல்லாத ஒரு வேட்பாளருக்கு விருப்பு வாக்கையும் செலுத்தும் போது தேர்தல புறக்கணிப்புக்கு ஒப்பான கருத்துநிலையையே ஒரு தமிழ் வாக்களார் வெளிப்படுத்துவார்.

குறிப்பாக, மூன்று பிரதான சிங்களப் போட்டியாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாதத்தையை முன்னெடுப்பார்கள் என்பதாலும், இவர்கள் ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்காத படியாலும், இவர்களுக்கு எமது வாக்குச் செல்லக்கூடாது என்பதே எனது நிலைப்பாடு.

இந்த அடிப்படையிலேயே எமது பேரம் பேசல் சர்வதேசச் சக்திகளுடன் அமையவேண்டும் என்பதே எனது கருத்து.

ஆனால், நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது கருத்துக்கு ஒப்பான கருத்தை சிவாஜி அண்ணா கொண்டிருக்கிறார் என்று நான் பூரணமாக நம்புகிறேன்.

சர்வதேச சக்திகளுடன் தான் பேரம் பேசல், வெற்றுப் பேச்சு வேட்பாளர்களிடம் அல்ல என்ற நிலைப்பாட்டிலும், முழுமையான, எந்தவிதத் தேய்வும் இல்லாத சுயநிர்ணய உரிமை என்ற நிலைப்பாட்டிலும் அவர் உறுதியாக இருப்பார் என்ற நம்பிக்கையிலும் அவரை முன்னிலைப்படுத்திச் செயற்பட நான் களம் இறங்க முடிவெடுத்தேன்.

அடுத்ததாக, பொதுவேட்பாளர் என்ற முயற்சிகளில் இறுதி நாட்களில் கூட்டங்களை நடாத்தியவர்கள் எங்களை அழைத்து முறையாகப் பேசியிருக்கவில்லை.

ஆனால், ஒரு விடயத்தில் நானும் சிவாஜி அண்ணாவும் தெளிவாக இருந்தோம். இது துணிந்து செயற்பட வேண்டிய தருணம். மதில் மேல் பூனையாக இறுதிவரை இருந்துவிட்டு எதுவித பலனும் இல்லாத ஊடக அறிக்கைகளை வெளியிட்டு இயலாமைக்குப் பலியாகாமால், வேட்பாளர் பத்திரத்தை கால வரையறை தாண்டமுதல் தாக்கல் செய்வோம். போட்டியிடுவதா இல்லையா என்பது அடுத்த கட்டம் என்ற முனைப்பிலேயே நாங்கள் களமிறங்கினோம்.

தேர்தலை நிராகரியுங்கள் என்று சொல்பவர்களுக்கும் அர்த்தமுள்ளவகையில் நிராகரிக்கும் வாய்ப்பை உருவாக்கியிருக்கிறோம். பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கருத்துடையவர்களுக்கும் சரியான வாய்ப்பொன்றை உருவாக்கித்தந்திருக்கிறோம்.

பொதுவேட்பாளராக சிவாஜி அண்ணாவைக் கருதி அவரோடு கருத்துப் பரிமாற அனைத்துத் தரப்புகளையும் எதுவித பாரபட்சமும் இன்றி நாங்கள் அழைக்கிறோம்.

அனைத்து ஈழத்தமிழர்களும் நடைமுறையில் ஒரு கருத்துநிலைக்குப் பலம் சேர்க்க முன்வரவேண்டும் என்றும் இத்தால் வேண்டுகோள் விடுக்கிறோம்.

உண்மையான பேரம் பேசல் யாரோடு என்பதில் சிவாஜி அண்ணா தெளிவாக இருக்கும் வரை அவருக்குப் பக்கபலமாக நான் இயங்குவேன்.

ஒற்றுமை, ஒன்றிணைந்த கொள்கை என்பதை மக்கள் முடிவெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமையும் என்று நான் நம்புகிறேன்.