விஜயகலா மகேஸ்வரன் தட்டுத்தடுமாறிக் கூறியதையடுத்து

ஒற்றையாட்சிக்கும் பௌத்த சமயத்துக்கும் முன்னுரிமை- இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் மீண்டும் உறுதியளித்தார்

உண்மையைச் சொன்னால் பயங்கரவாதமா என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கேள்வி
பதிப்பு: 2018 ஜூலை 05 10:53
புதுப்பிப்பு: ஜூலை 05 16:22
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய உரையின் பின்னர், ஒற்றையாட்சியின் உறுதிப்பாட்டையும் பௌத்த சமயத்துக்கான முன்னுரிமை குறித்தும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் பேச ஆரம்பித்துவிட்டன. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்து கொண்டு, விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கம் குறித்து விஜயகலா மகேஸ்வரன் கூறியமை இலங்கையின் இறைமைக்கு ஆபத்து என ஜே.வி.பி உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
 
இதற்குப் பதலளித்துப் பேசிய அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, இது சிங்கள பௌத்த நாடு என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய அரசியல் யாப்பு மேலும் உறுதிப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.

விஜயகலாவின் உரை இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானதா இல்லையா என்பது குறித்து இலங்கைச் சட்டமா அதிபர் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஸ்மன் கரியெல்ல கூறியுள்ளார்.

ஒற்றையாட்சி அரசு என்பதுடன் பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை உள்ள நாடுதான் இலங்கை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரன் விவகாரம் குறித்து கூட்டு எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தபோது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ் மக்களின் தற்போதைய நிலைமை தொடர்பாக கூறினால் பயங்கரவாதியாக காண்பிக்க இல்ங்கையின் தென்பகுதியில் உள்ள சிங்கள அரசியல் கட்சிகள் முற்படுவதாக வடமாகாண முதலமைச்சர் விக்ஸே்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில், தமிழர் தாயகத்தில் வன்முறைகள், குற்றச் செயல்கள் இருக்கவில்லை. அதனையே விஜயகலா மகேஸ்வரன் கூறியிருக்கின்றார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்தாலும் தமிழர் தாயகத்தின் தற்போதைய நிலையைக் கூறியமை தவறு அல்ல என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தங்கள் உரிமை தொடர்பாக பேசினால், அதனை பயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம் என்று சிங்கள அரசியல் கட்சிகள் கூறுவது நியாயமல்ல எனவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செலயாளர் கோட்டபய ராஜபக்ஷவை ஹிட்லராக சித்தரித்து இராணுவ ஆட்சியைக் கொண்டு வாருங்கள் என்று கூறியபோது அமைதிகாத்தவர்கள், விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்துக்காக ஏன் பொங்கி எழுகின்றனர் என அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் நேற்று புதன்கிழமை செய்தியாளர்கள் முன்னிலையில் கேள்வி எழுப்பினார்.

அதேவேளை, விஜயகலா மகேஸ்வரன் போன்றவர்கள் சிங்கள அரசியல் கட்சிகளில் உறுப்பினராக இருந்து, எவ்வளவுதான் விசுவாசமாக செயற்பட்டாலும், தமிழ் மக்கள் தொடர்பான உண்மை நிலையைப் பற்றி பேசினால், பயங்கரவாதியாகவே வர்ணிக்கப்படுவார்கள் என்பதை இனியாவது உணர்ந்து கொள்ள வேண்டும் என கொழும்பை மையப்படுத்தி அரசியலில் ஈடுபடும் கலாநிதி குமரகுருபரன் கூறியுள்ளார்.

நேற்று புதன்கிழமை இலங்கை நாடாளுமன்றத்தில் அளும் தரப்பு எதிர்ப்புத் தரப்பு என்ற வேறுபாடுகள் இன்றி விஜயகலா மகேஸ்வரன் கூறிய கருத்துக்கு எதிராகவும் இலங்கையின் ஒற்றையாட்சிக் கோட்பாட்டை மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செய்தியாளர் ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார்.