இலங்கை ஒற்றையாட்சியின் வர்த்தமானி அறிவித்தல் மூலம்

முல்லைத்தீவில் இலங்கை அரச திணைக்களங்களினால் 80 ஆயிரம் ஹெக்டயர் காணிகள் அபகரிப்பு

வடமாகாண சபையுடன் கலந்துரையாடல்கள் எதுவுமின்றிக் காணி அளவீடுகள்- ரவிகரன்
பதிப்பு: 2018 ஜூலை 06 23:26
புதுப்பிப்பு: ஜூலை 07 00:27
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவில், இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன், இலங்கை அரச திணைக்களங்களினால் இதுவரை 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டயர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அபகரிக்கப்பட்ட காணிகள் இன்னும் அதிகமாக இருக்கலாம் எனவும் வடமாகாண சபையினால் அதிகாரபூர்வமாக நில அளவீடுகளைச் செய்ய முடியவில்லை என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர். இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரசியல் யாப்புக்கு அமைவாகவே, இலங்கை அரச வர்த்தமானி அறிவித்தல் மூலம் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டயர் காணிகளும் முல்லைத்தீவில் அபகரிக்கப்பட்டுள்ளன. வடமாகாண சபையுடன் எந்தவொரு கலந்துரையாடல்களும் இன்றிக் காணிகள் அபகரிக்கக்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
 
இலங்கையின் அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவினால், இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அரசியல் யாப்பில் கூறப்பட்டுள்ள விதிகளுக்கு அமைவாக இலங்கை வர்த்தமானி அறிவித்தல் மூலம் 80 ஆயிரத்திற்கும் அதிகமான ஹெக்டயர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கூறியுள்ளார்.

இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் காணிகளை அளவீடு செய்யும் அதிகாரம் கூட மாகாண சபைகளுக்கு இல்லை- சட்டத்தரணி ஜோதிலிங்கம்.

நந்திக்கடல் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளையும் சேர்த்து 4141.67 ஹெக்டயர் காணிகள் மற்றும் நீர்ப்பரப்புக்களையும், நாயாறு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலுமாக 4464.35 ஹெக்டயர் காணிகள் மற்றும் நீர்ப்பரப்புக்களையும் 469ஆம் அத்தியாயமான தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டம் 2ஆம் பிரிவின் 01ம் உட்பிரிவின் கீழான கட்டளை என்ற தலைப்பினுள் இலங்கை அரச வர்த்தமானி மூலம் நந்திக்கடல் இயற்கை ஒதுக்கிடம், நாயாறு இயற்கை ஒதுக்கிடம் என இலங்கை வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்தம் 8606.02 ஹெக்டயர்கள் இதற்குள் அடங்குவதாக ரவிகரன் குறிப்பிட்டுள்ளார்.

மணலாறு குடியேற்றம், மகாவலி எல் வலய போர்வையில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள், இலங்கை இராணுவ முகாம் விஸ்த்தரிப்புகள், பௌத்த பிக்குகளின் மதத் திணிப்புக்கள், இலங்கைத் தொல்பொருள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள், இலங்கை வனவள துறையின் காணி பறிப்புக்கள், இலங்கை வன ஜீவராசிகள் திணைக்களத்தின் காணி பறிப்புக்கள் என 80ஆயிரம் ஹெக்டயர்களுக்கு மேல் காணிகள், நீர்நிலைகள் அபகரிக்கப்பட்டுள்ளதாக ரவிகரன் கூறுகின்றார்.

இந்தப் பிரதேசங்களில் ஒன்பதாயிரம் குடும்பங்களுக்கு மேல் தமது வாழ்வாதாரத்தை ஓரளவுக்கேனும் கொண்டு நடத்தக்கூடிய வகையில் நீர்நிலைகளை நம்பி வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆனால், அந்த நீர் நிலைகள் தற்போது அபகரிக்கப்பட்டுள்ளன.

இறால், மீன்கள் என வீச்சுவலைகள் மற்றும் நன்னீர் மீன்பிடி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட வலைகள் மூலமாகவும் தொழில் செய்து தமது ஜீவனோபாயத்தை காக்கும் இடமாகக் காணப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு வட்டுவாகல் மட்டுமல்லாமல் வற்றாப்பளை அருகாக அமைந்துள்ள வயல் நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் குறித்த இலங்கை அரசின் வரைபடத்தில் காண்பிக்கக்பட்டுள்ளதாக ரவிகரன் கூறியுள்ளார்.

அதேவேளை, வடமாகாண சபையுடன் உரையாடி காணிகளைப் பெறுவது அதற்கான அனுமதியைக் கோருவது போன்ற எந்தவொரு செயற்பாடுகளும் இல்லை என ரவிகரன் குறிப்பிட்டார்.

இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் காணிகளை அளவீடு செய்யும் அதிகாரம் கூட மாகாண சபைகளுக்கு இல்லையென அரசியல் ஆய்வாளர், சட்டத்தரணி ஜோதிலிங்கம் தனது அரசியல் பத்தி எழுத்தில் கூறியுள்ளார்.

இதேவேளை, அனுராதபுரம் மாவட்டச் செயலகத்தில் இயங்குகின்ற விசேட நிழல் செயலணி ஒன்று தமிழர் தாயகத்தில் காணிகளை அபகரிக்கும் விடயங்கள் குறித்து, இலங்கை இராணுவத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.