வடமாகாணம் முல்லைத்தீவு

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள்- சம்பவ இடத்தைப் பார்வையிட்டார் நீதிபதி

ஊடகவியலாளர்களுக்குத் தடை
பதிப்பு: 2020 பெப். 12 12:53
புதுப்பிப்பு: பெப். 15 03:58
main photo main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகம் வடமாகாணம் முல்லைத்தீவு மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வைத்தியசாலை வளாகத்தில் புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான துப்பரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பணியாளர்கள் கூறுகின்றனர். உடனடியாக மாங்குளம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுச் சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் வருகை தந்து பார்வையிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. வைத்தியசாலை வளாகத்தில் ஏற்கனவே கண்ணிவெடிகள் இருப்பதாகத் தெரிவித்து மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன.
 
இந்த நிலையிலேயே இன்று புதன்கிழமை மனித எச்சங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் காணியில் குறித்த ஒரு பகுதியிலேயே மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியில் படங்கள், வீடியோக் காட்சிகள் எடுப்பதற்கு ஊடகவியலாளர்களுக்குப் பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிபதியின் உத்தரவின் பின்னரே படம் எடுக்க முடியுமெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வடமாகாணம் மன்னார் நகரத்தின் நுழைவாசலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து சுமார் இருநூறுக்கும் அதிகமாக மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டு அமெரிக்காவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தது.

ஆனாலும் அந்த ஆய்வு அறிக்கையில் சந்தேகம் இருப்பதாகக் கூறப்பட்டிருந்தது. அதேபோன்று மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இருந்தும் சுமார் இருநூற்றுக்கும் அதிகமான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு அதன் விசாரணைகள் அப்படியே கைவிடப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் இருந்தும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு மூடி மறைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்கனவே கூறியிருந்தார்.