இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்-

ஒற்றையாட்சி இலங்கையை அமெரிக்கா ஆரத் தழுவுகிறது

இலங்கை ஆசியாவின் வயது முதிர்ந்த ஜனநாயகம் என்று மைக் பொம்பியோ புகழாரம்
பதிப்பு: 2020 ஒக். 28 23:18
புதுப்பிப்பு: ஒக். 30 08:39
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஆசிய நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலும், ராஜபக்ச சகோதரர்களுக்கு மிகவும் நெருக்கமான அததெரன தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலும் வரிக்குவரி இலங்கையின் இறைமை என்ற சொல்லாடலை உச்சரித்திருக்கிறார். பலமான இறைமை பொருந்திய இலங்கை உலகத்துக்குத் தேவை என்று அவர் கூறியுள்ளார். ஜனநாயகப் பண்புள்ள முழுமையான சுதந்திரமும் இறைமையுமுள்ள இலங்கையோடு நட்பைப் பலப்படுத்தவே அமெரிக்கா விரும்புகிறது என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.
 
இலங்கையை ஆசியாவின் மிகவும் வயது முதிர்ந்த ஜனநாயகம் என்று வர்ணித்த மைக் பொம்பியோ, அமெரிக்க இலங்கை உறவுக்கு 72 வயதெனவும் அந்த 72 ஆண்டுகள் பூர்த்தியடைவதற்கு இன்னமும் ஒரு நாளே இருப்பதாகவும் அந்த ஒரு நாளுக்கு முன்னர் இலங்கை வந்ததையிட்டுத் தான் குதூகலிப்பதாகவும் கருத்து வெளியிட்டார்.

ஆனால் மைக் பொம்பியோ எந்தவொரு இடத்திலும் தமிழ் மக்கள் என்றோ, இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றச்சாட்டுக்கள் என்றோ எதுவுமே உச்சரிக்கவில்லை.

மாறாக எல்லோரும் இலங்கையர் என்றும் பௌத்தர்கள், இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் நாடு எனவும் அதனை அமெரிக்கா விரும்புவதாகவும் வர்ணித்திருக்கிறார். அதாவது இனங்கள் என்பதைவிட மதங்களுக்கிடையேயான நல்லிணக்கம் என்பதை வலியுறுத்துவதாகவே மைக் பொம்பியோவினுடைய தொனி இருந்தது.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில், இலங்கையில் மத நல்லிணக்கம் அவசியம் என அவர் கூறியிருக்கிறார். ஆனால் 2009 இற்குப் பின்னரான காலத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த எந்தவொரு வார்த்தைகளையும் அவர் வெளிப்படுத்தவேயில்லை.

அதேவேளை, இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்புத் தொடர்பாகச் செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர், அது ஒரு சிறப்பான உரையாடல் என்று வர்ணித்தார்.

அமைதியான, சுபீட்சமான, இறைமையுள்ள இலங்கையோடு அமெரிக்கா உறவைப் பேணவுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். பாதுகாப்பு மற்றும் இலங்கைப் படையினருடானான கூட்டுப் பயிற்சிகள், ஒத்துழைப்புகள் மற்றும் நீண்டகால அபிருத்திகள் குறித்தும் கோட்டாபய ராஜபக்சவுடன் தான் பேசியதாகவும் மைக் பொம்பியோ விளக்கமளித்துள்ளார்.

கோவிட் 19 வைரஸ் பரவல் காலத்தில் ஆறு மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியிருந்ததென்றும், வைரஸ் பரவல் காலத்தில் அமெரிக்காவுக்குத் தேவைப்பட்ட கொள்வனவு உதவிகளை கொழும்பு செய்ததாகவும் கூறினார். குறிப்பாக உயர் தரம்மிக்க பாதுகாப்பு அணியங்களை இலங்கை தயாரித்து அமெரிக்காவுக்கு அனுப்பியதாகவும் மைக் பொம்பியோ சொன்னார் .

அதேவேளை, சீனக் கமியூனிச கட்சி ஒரு வேட்டையாடும் சக்தி என்றும் ஆனால் அமெரிக்கா நட்புச் சக்தியென்றும் அவர் வாதிட்டார். இந்த வாதம் சீனாவின் இலங்கைக்கான தூதரலாய வட்டாரங்களில் கடும் கோபத்தைத் தோற்றுவித்திருக்கிறது.

சீன நிறுவனங்களை விட அமெரிக்க நிறுவனங்கள் இந்தப் பூமிப் பந்திலேயே மேலானவையென்றும் அவை வெளிப்படைத் தன்மையில் சிறந்து விளங்குபவை என்றும் தனது நாட்டுக்குத் தானே புகழாரம் சூட்டிக் கொண்டார் பொம்பியோ.

கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயற்பாடுகளை மிகவும் மெச்சிய அவர், இலங்கையுடனான நட்பைத் தனது தூதரகம் அண்மையில் மேம்படுத்தியுள்ளதாகவும் வர்த்தக சமூகத்தோடும் அமெரிக்க உறவை அது பேணி வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் கருத்து வெளியிட்டார்.

ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தின்போது கொழும்பில் நின்று கொண்டு சீனாவை மிரட்டிய மைக் பொம்பியோ, இலங்கையுடன் மிகவும் அன்பாகவும் நிதானமாகவுமே கலந்துரையாடியிருக்கிறார். அவரது கருத்துக்கள் எல்லாம் அமெரிக்காவை இலங்கையில் சந்தைப்படுத்தும் விளம்பரம்போன்று அமைந்திருந்தன.

இதேவேளை, மைக் பொம்பியோவின் வருகை குறித்து விளக்கமளித்த கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிஸ், பலமான, உள்வாங்கும் தன்மையுள்ள, இறைமை கொண்ட நாடு இலங்கை என்று சிலாகித்தார்.

ஆக, இலங்கையை அமெரிக்கா அரவணைத்தது மாத்திரமல்ல, இலங்கை என்ன உதவி கோரினாலும் அதனைச் செய்வதற்கும் தயராகவே இருப்பதை மைக் பொம்பியோ கொழும்பில் வெளியிட்ட கருத்துக்கள் கோடிகாட்டுகின்றன.

இலங்கையோடு மிகவும் பணிவாகவே மைக் பொம்பியோ உரையாடியிருக்கிறாரென்று கொழும்பில் உள்ள அரசியல் அவதானிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

ஆயினும் கொழும்பில் இருந்து இயங்கும் சர்வதேச செய்தி நிறுவனங்களின் நிருபர்கள் அமெரிக்க- சீன ஏகாதிபத்தியப் போட்டியை மையப்படுத்தியே தமது செய்திகளை வெளியிட்டிருக்கின்றனர்.

இதனால் அமெரிக்கா இலங்கை மீது அழுத்தம் ஏற்படுத்தியிருப்பது போன்ற ஒரு மாயை தமிழர்களிடையே தோற்றுவிக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அரசியல் அவதானிகள் கூர்மைச் செய்தித் தளத்திற்கு மேலும் சுட்டிக்காட்டினர்.

புவிசார் அரசியல் தமிழர்களுக்குச் சார்பாக மாறப் போகிறதென்றும் சீனாவுக்கு எதிரான மேற்குலகம், தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கப் போகிறது எனவும் போலியான கருத்துருவாக்கங்களை மேற்கொண்டு வரும் தமிழக, ஈழ அரசியல் ஆலோசகர்களுக்கும் தேர்தல் அரசியல் வாதிகளுக்கும் கன்னத்தில் அறைந்துவிட்டுச் சென்றிருக்கிறார் மைக் பொம்பியோ என்று அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டினர்.

வழமையாக இலங்கைக்கு வரும் மேற்குலக இராஜதந்திரிகள் தமிழர் தரப்பையும் சந்தி்க்கும் நடைமுறை இம்முறை கடைப்பிடிக்கப்படவில்லை என்பதையும் கூர்மையாக ஈழத் தமிழர்கள் அவதானிக்க வேண்டும்.

அமெரிக்காவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னதாக ஆசியாவுக்கான பொம்பியோவின் திக் விஜயம் நடைபெற்றிருக்கிறது.

மைக் பொம்பியோவுடன் இந்தியாவுக்கு உயர்மட்டச் சந்திப்புக்காக வந்திருந்த அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் மார்க் எஸ்பர் இலங்கைக்கு வரவில்லை என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.

இலங்கைக்குப் பின்னர் மாலைதீவுக்குச் சென்று அதன் தொடர்ச்சியாக இந்தோனேசியாவுக்கு மைக் பொம்பியோ பயணமாகவுள்ளார்.