சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளன நிகழ்வில்

சம்பந்தன், கோட்டபய, மஹிந்த கலந்துரையாடல்- மைத்திரி, ரணில் பங்குகொள்ளவில்லை

மூன்றுபேரும் பேசிய விடயங்கள்தான் என்ன?
பதிப்பு: 2018 ஜூலை 23 23:40
புதுப்பிப்பு: ஜூலை 24 11:02
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கைத் தலைநகர் கொழும்பு காலிமுகத்திடலில், சீன அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சங்ரில்லா ஏழு நட்சத்திர ஹோட்டேலில், சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளன நிகழ்வு இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டபய ராஜபக்ச, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பங்குபற்றவில்லை. எனினும் மைத்திரி- ரணில் அரசாங்கத்தரப்பில் இருந்து அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, அர்ச்சுன ரணுதுங்க, ஜோன் அமரதுங்க, ஆகியோரும் ஈபிடிபி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கபல விஜயரட்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
 
சீன- இலங்கை முப்படைகளின் உயர் அதிகாரிகள், கொழும்பில் உள்ள சீனத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்குபற்றினர்.

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், இலங்கையின் எதிர்க்கட்சிகளை அழைப்பதுதான் முக்கிய நோக்கம் என்று சீனத் தூதரக அதிகாரி ஒருவர் கூறினார்.

சம்ப்ந்தன்
சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளன நிகழ்வு, கொழும்பில் இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றபோது இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோர் கலந்துரையாடியபோது எடுக்கப்பட்ட படம்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவத் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் கலந்துரையாடியமைதான் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக செய்தியாளர்களினால் கருதப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அருகே இருந்ததாக நிகழ்வில் பங்குபற்றிய செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவே கலந்துரையாடல் இடம்பொற்றிருக்கலாம் என்றும் அந்த செய்தியாளர் தெரிவித்தார்.

இரவு விருந்துபசாரத்தின்போதும் கோட்டய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் சம்பந்தனுடன் தனியாக இருந்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடபெற்ற இலங்கை ஜனாதிபதி தேர்தலில், மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுகளுக்காக சீன அரசு 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் மேலதிக விசாரனைக்காக நியுயோர்க் ரைம்ஸ் பத்திரிகையிடம் செய்தியின் மூலத்தை கோரியுமிருந்தது.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் கதாநாயகன் மஹிந்த ராஜபக்ச அவரது சகோதரர் கோட்டபய ராஜபக்ச ஆகியோரை அழைத்து சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளன நிகழ்வு என்ற பெயரில், கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இரவு விருந்துபசாரம் ஒன்றை நடத்தியுள்ளது.

அதேவேளை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டபய ராஜபக்சவை கூட்டு எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க அமெரிக்கா இரகசிய நகர்வா என்று கூர்மைச் செய்தித் தளத்தில் செய்திக் கட்டுரை ஒன்றும் வெளியாகியிருந்தது.

இலங்கையில் 70 சதவீதமான கட்டுமானப் பணிகள் சீன அரச நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படுவதாக ஜே.வி.பி. உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கடந்தவாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

கொழும்பு போட்சிற்றித் திட்டம், அம்பாந்தோட்டைத் துறைமுகம் கொழும்பு மருதானையில் அமைக்கப்படும் தாமரைக் கோபுரம் உள்ளிட்ட பிரதான பொருளாதார மையங்கள் சீன அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.