அமெரிக்கப் பேச்சு- யாழ் திண்ணைச் சந்திப்பு-

புவிசார் அரசியல் போட்டியைப் பயன்படுத்தத் தவறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

அமெரிக்க- இந்திய அரசுகளை நோக்கிக் கேள்வி எழுப்பத் தயங்கியதன் பின்னணி
பதிப்பு: 2021 நவ. 23 00:54
புதுப்பிப்பு: நவ. 30 17:26
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் செயற்திட்டங்களில் அமெரிக்க- இந்திய அரசுகள் எவ்வாறு ஈடுபடுகின்றன. இந்த வல்லாதிக்க நாடுகளுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு எவ்வாறான நிபந்தனைகளை விதிக்கின்றது என்பது பற்றியெல்லாம் எமது கூர்மை செய்தி இணையத்தளத்தில் பல செய்திக் கட்டுரைகளும் விளக்கக் கட்டுரைகளும் எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ரணில் மைத்திரி அரசாங்கத்தில் இருந்து 2020 ஆம் ஆண்டு ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்ற பின்னரான சூழலிலும் பூகோள மற்றும் புவிசார் அரசியல் நிலமைகள் தொடர்பாக கூர்மைத் தளத்தில் செய்திக் கட்டுரைகள் வெளியாகியிருந்தன. பசில் ராஜபக்ச அமைச்சராகப் பதவியேற்பதற்கு முன்னர் கடந்த யூன் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.
 
ஒருங்கிணைந்த குரலாகத் தமிழர் தரப்பு தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென அமெரிக்க- இந்திய அரசுகள் விடுத்த கோரிக்கைக்குப் பதிலாக, ஈழத் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அகிம்சை வழியில் ஒரு தேசமாகக் காண்பித்திருந்தால், அமொிக்கப் பேச்சுகளும் யாழ் திண்ணைச் சந்திப்பும் மாறியிருக்கும்

அப்போது அங்கிருந்தவாறு இணையவழியூடாக தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பிரித்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை அமைப்பின் பேச்சாளரான சுரேன் சுரேந்திரன் ஆகியோருடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியிருந்ததாகவும் கடந்த யூன் மாதம் 20 ஆம் திகதி செய்திக் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

அதன் பின்னர் அமெரிக்கத் தூதுவர் முன்னிலையில் அமைச்சர் பீரிஸ் (அப்போது கல்வி அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்) சுமந்திரனுடன் கலந்துரையாடியிருந்தார். இந்தச் செய்தியைக் கடந்த ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி நாளிதழில் வெளியிட்டிருந்தது. ஆனால் கொழும்பில் எந்த இடத்தில் சந்திப்பு நடந்தது என்ற விபரம் அந்தச் செய்தியில் இருக்கவில்லை.

இருந்தாலும் அன்றைய தினமே கூர்மைச் செய்தித் தளத்தில் வீரகேசரிப் பத்திரிகையை மேற்கோள் காண்பித்து வெளியான செய்திக் கட்டுரையில் குறித்த சந்திப்பு கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரின் இல்லத்தில் தூதுவருக்கு முன்பாகவே இடம்பெற்றிருந்தாக கூறப்பட்டிருந்தது.

ஆனால் வீரகேசரி நாளிதழில் வெளியான அமைச்சர் பீரிஸ்- சுமந்திரன் சந்திப்புத் தொடர்பாகக் காலைக்கதிர் பத்திரிகையின் இனி அது இரகசியமல்ல என்ற பத்தியில் இந்தச் சந்திப்புக்கள் எல்லாம் ஒரு செய்தியே அல்ல என்ற தொனியில் கிண்டல் செய்யப்பட்டிருந்தது.

எனினும் கூர்மைச் செய்தித் தளத்தில் அமெரிக்கத் தூதுவரின் இல்லத்திலேயே சந்திப்பு இடம்பெற்றதாகத் தகவல் வெளியான பின்னர், மறுநாள் தூதுவரின் இல்லத்தில் நடந்த சந்திப்புத் தொடர்பான முழு விபரங்களையும் காலைக்கதிர் பத்திரிகை வெளியிட்டிருந்தது.

அவ்வாறு இனி அது இரகசியமல்ல என்ற பந்தி எழுத்தில் முழு விபரங்களும் வெளியானதால், கடந்த யூன் மாதம் 20 ஆம் திகதி கூர்மைச் செய்தித் தளத்தில் வெளியான செய்திக் கட்டுரையின் தகவல்கள் அனைத்தும் மேலும் உறுதிப்படுத்தப்பட்டன.

ஆகவே இந்த ஊடாட்டங்களின் பின்னணியிலேயே சுமந்திரன் தலைமையிலான குழு கடந்த சனிக்கிழமை அமெரிக்காவுக்குச் சென்றிருக்கின்றது.

எனவே உள்ளூர் மற்றும் புவிசார் அரசியல் நகர்வுகள் எப்படி அமைகின்றன எந்த அடிப்படையில் ஈழத்தமிழர்களின் விவகாரங்கள் கையாளப்பட்டு வருகின்றன, கையாளப்படவுள்ளன என்ற விபரங்கள் அனைத்தும் வெளியாகியதொரு சூழலில், மாற்று அரசியல் என்று கூறிக் கொண்டு, தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் விமர்சித்துக் கொண்டு இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் இரண்டு ஆசனங்களைப் பெற்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பங்களிப்புக் குறித்த கேள்வி எழுவது இயல்பானதே.

ஜெனீவா அமர்வுக்கு முன்னர், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகப் பொருத்தமான இராஜதந்திரி ஒருவரை நியமிக்கும் ஏற்பாடுகளும் தீவிரமாக இடம்பெறுகின்றன

நாடாளுமன்றத்தில் ஆசனம் இருந்தால் மாத்திரமே சர்வதேசம் அங்கீகரிக்கின்றது அதனாலேயே தேர்தல் அரசியலில் ஈடுபடவேண்டிய நிலைமையென வியாக்கியானம் செய்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட சர்வதேசத் தொடர்புகள்தான் என்ன?

சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழு அமெரிக்காவுக்குப் பயணம் செய்திருந்தது. அங்கு பல சந்திப்புக்களை நடத்தியுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் மற்றும் கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் ஆகியோர் அடங்கிய சட்டநிபுணர் குழுவே அமெரிக்காவுக்குச் சென்றிருந்தது.

அமெரிக்க காங்கிரசில் வட கரோலினா மாநிலத்தின் இரண்டாவது மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினரும் சட்டத்தரணியுமான டெபோரா கே.ரோஸிற்கும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு சென்ற சனிக்கிழமை இடம்பெற்றது. இச்சந்திப்பில் உலகத்தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

அது மாத்திரமன்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவிச்செயலாளர் லிஸா பீட்டர்ஸன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழு உரையாடியுள்ளது.

இலங்கையில் நீடித்துவரும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக அமெரிக்கா மற்றும் பிராந்திய சக்தியான இந்தியா ஆகியவற்றின் கூட்டிணைவில் புதிய கொள்கையொன்று வகுக்கப்படவுள்ளதாகவும் அதுபற்றி ஆழமாக ஆராய்வதற்காகவே இலங்கைத் தமிழ் மக்களின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் புலம்பெயர் தமிழ் மக்களின் சார்பில் உலகத் தமிழர் பேரவையையும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அழைத்து கலந்துரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரி நாளிதழுக்குத் தெரிவித்திருக்கிறார்.

2009 ஆம் ஆண்டு போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அதில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்டமீறல்கள் சம்பந்தமாக விசாரணைகளை முன்னெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ராஜபக்ச அரசாங்கம் எதுவுமே செய்யவில்லையெனவும் அங்கு பேசியதாகவும் சுமந்திரன் கூறியிருக்கிறார்.

2012 பெப்ரவரி 12 ஆம் திகதியில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்த ரெபேர்ட் ஓ பிளேக் மற்றும் மரியா ஒட்டோரா ஆகியோர் இலங்கை அரசாங்கத்துக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்தித் தீர்மானத்தை அமெரிக்கா தலைமையேற்று கொண்டுவரப் போவதாக அறிவித்தனர். அதுவே தமது அமெரிக்கப் பயணத்திற்கு கிடைத்த பிரதிபலிப்பாக இருந்ததாகவும் சுமந்திரன் அந்த நேர்காணலில் கூறுகிறார்.

46.1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டுத் தற்போது பொறுப்புக் கூறலுக்கான சாட்சியங்களை திரட்டும் பொறிமுறையொன்று உருவாக்கப்பட்டு நகர்ந்து கொண்டு இருக்கின்றது. அத்துடன் பொறுப்புக்கூறலுக்கு அப்பால் மீள நிகழாமையை உறுதிசெய்து நிரந்தரமான தீர்வொன்றைக் காண்பதிலும் அமெரிக்கா கரிசனை கொண்டிருக்கின்றது.

இந்த விடயம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 46.1தீர்மானத்திலும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகக் கூறிய சுமந்திரன், புதிய அரசியல் யாப்புத் தொடர்பாக வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனாலும் அது இதயசுத்தியோடு இருக்குமா என்ற சந்தேகம் உள்ளது. இதன் பின்னணியில் தான் சம்பந்தனை அமெரிக்காவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்தச் சந்திப்புகளும் அதன் பின்னர் இலங்கையில் நடைபெறவுள்ள பேச்சுக்களும் இலங்கை அரசாங்கம்- தமிழ்த்தேசியக் கட்சிகள் என்ற இருதரப்புப் பேச்சுக்கான அழுத்தங்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அறவேயில்லை. ஏனெனில் புதிய அரசியல் யாப்பு என்பதே இலங்கையின் நிலைப்பாடு. அதுவும் மாற்றமடையாத ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்ளேதான். (Sri Lankan Unitary State Constitution)

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விலக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியைக் கூடத் தமிழ் மக்களுக்கு வாய்திறந்து சொல்லாமல் அமைதி காப்பதன் அர்த்தம்? ஒருங்கிணைந்த குரலாகத் தமிழர்கள் தமது கோரிக்கையை முன்வைக்க வேண்டுமெனக் கோரிவிட்டு ஏன் குறிப்பிட்ட நபர்களை மாத்திரம் அழைத்திருக்கிறீர்கள் என்று அமெரிக்க இந்திய அரசுகளைப் பார்த்துக் கேட்கவில்லை?

வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்பை உருவாக்கும் (North East Combined Autonomous Structure) அரசியல் தீர்வுக்கான பேச்சுக்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது குறித்து சுமந்திரன் குழுவுக்கும் புரியும். அப்படியொரு தீர்வுக்கு சுமந்திரன் குழு அழுத்தம் கொடுக்கப் போவதுமில்லை.

ஆகவே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்ன சொன்னது? ஈழத்தமிழ் மக்களுக்கென்று வெளியுறவுக் கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டுமெனக் கூறியது. ஆனால் இதுவரையும் அதற்கான முயற்சிகள் இல்லை. ஏனைய கட்சிகள் ஒன்று சேரவில்லை என்று குற்றம் சுமத்தலாம். இருந்தாலும் வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை தனித்த ஒரு கட்சியாக உருவாக்கியிருக்கலாம்.

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் பதிவு செய்யப்பட்டுத் தேர்தல் அரசியலில் மாத்திரமே ஈடுபடுமெனவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு தேசிய இயக்கமாகச் செயற்படுமென்றும் அப்போது விளக்கம் கூறப்பட்டிருந்தது.

ஆனால் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தேசிய இயக்கமாக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் நடந்ததா? அல்லது முன்னணி ஒரு தேசிய இயக்கமா? அப்படியானால் முன்னணியை மையமாகக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கென வெளியுறவுக் கொள்கை ஒன்றை தயாரித்திருக்கலாம். மாறாக அடுத்த தேர்தலை நோக்கிய வேலைத் திட்டங்கள் மாத்திரமே முன்னெடுக்கப்படுகின்றன.

இந்தியத் தூதுவர் கஸ்வார்த்தன ஸ்ரிங்லா யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது, இந்தியத் துணைத் தூதரகத்தில் முன்னணி உள்ளிட்ட கட்சிகளையும் பிரமுகர்களையும் சந்தித்திருந்தார். அப்போது விளக்கமளித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமது முன்னணி இந்தியாவுக்கு எதிரானதல்ல என்ற வாதத்தை முன்வைத்திருந்தார்.

அத்துடன் இலங்கை ஒற்றையாட்சிக்கு உட்பட எந்தவொரு அரசியல் தீர்வையும் ஏற்க முடியாதென்றார். அதாவது 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஏற்கவே முடியாதெனவும் கூறியிருந்தார்.

ஆனால் இதனைக் கடந்து நிரந்தர அரசியல் தீர்வுக்காக முன்னணி எடுத்த நடவடிக்கைகள் என்ன? இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளுக்குச் சென்று இன அழிப்பு ஆவணங்கள் மற்றும் விபரங்களைக் கையளித்திருக்கலாம். இந்தியாவுக்கும் சென்றிருக்கலாம். கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களோடு தினமும் தொடர்பு கொண்டு நிலமையை விளக்கியிருக்கலாம்.

அடுத்த ஆண்டு மார்ச் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஐம்பத்து ஓராவது அமர்வில் இலங்கை தொடர்பாகப் புதியதொரு தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. ஆனால் அந்தத் தீர்மானத்தைத் தடுப்பதே இலங்கையின் தற்போதை பிரதான இலக்கு. அதற்கான இராஜதந்திர நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.

இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவராக முன்னாள் அமைச்சர் மிலிந்த மொறகொட அமைச்சர் அந்தஸ்த்துள்ள அதிகாரங்களோடு புதுடில்லியில பணியாற்றுகின்றார். பாலித கோகண்ண சீனாவுக்கான தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் பீரிஸ் வெளியுறவு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஜெனீவா அமர்வுக்கு முன்னர், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகப் பொருத்தமான இராஜதந்திரி ஒருவரை நியமிக்கும் ஏற்பாடுகளும் தீவிரமாக இடம்பெறுகின்றன.

ஆகவே இலங்கை புவிசார் அரசியல் போட்டிகளை நன்கு பயன்படுத்தி ஜெனீவா அமர்வில் இருந்து இலங்கை விவகாரத்தை முற்றாகவே நீக்கம் செய்யும் நோக்குடன் இலங்கை இயங்குகின்றது. மலிந்த கொறகொட 2002 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்காலத்தில் அதனைக் குழப்பும் நகர்வுகளை முன்னெடுத்த ஒருவர் என்பது பட்டவர்த்தனம். அது மாத்திரமல்ல 13 ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட ரத்துச் செய்ய வேண்டுமெனப் பரிந்துரைத்த ஒருவர்.

ஆகவே இதன் பின்னனியில் இலங்கையின் நகர்வுகளை நோக்கினால் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளைப் பயன்படுத்திக் குறிப்பாக இந்தோ- பசபிக் பிராந்தியத்தில் சீனா தொடர்பாக அமெரிக்கா- இந்திய அரசுகளுக்கு இருக்கும் போட்டிகளைச் சாதமாக்கி ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்கள் மற்றும் தமிழ்த்தேசியம் என்பதை முற்றாக நீக்கம் செய்யும் கைங்கரியங்களிலேயே இலங்கை ஈடுபடுகின்றது.

இந்தச் சந்திப்புகளும் அதன் பின்னர் இலங்கையில் நடைபெறவுள்ள பேச்சுக்களும் இலங்கை அரசாங்கம்- தமிழ்த்தேசியக் கட்சிகள் என்ற இருதரப்புப் பேச்சுக்கான அழுத்தங்களாக இருப்பதற்கு வாய்ப்புகள் அறவேயில்லை

அதுவே அமெரிக்கப் பேச்சுக்களும் யாழ்ப்பாணத்தில் சென்ற இரண்டாம் திகதி திண்ணைக் ஹோட்டேலில் நடைபெற்ற சந்திப்புகளும் வெவ்வேறுபட்ட கோணங்களில் முன்னெடுக்கப்பட்டாலும், இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்போடு நின்றுதான் எந்தவொரு அரசியல் தீர்வும் என்ற செய்தி இங்கே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆகவே ஒரு நாடு இரு தேசம் என்று மார்தட்டிக் கொண்டு வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, இலங்கை ஒற்றையாட்சி அரசியல் முறையிலான தேர்தல் செயற்பாடுகளோடு மாத்திரம் முடங்கிவிட்டது என்பதே இதன் வெளிப்பாடே.

அமெரிக்காவுடன் பேசிப் பயனில்லை. இந்தியாவோடும் பேச முடியாதென்றால் அல்லது அவர்களுக்குச் சொல்லியும் எதுவுமே அரங்கேறாது என்றால், தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை அம்பலப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு நாடாளுமன்றத்துக்கு இரண்டு ஆசனங்களோடு சென்றதன் நோக்கம் என்ன?

கொவிட் -19 மற்றும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம். ஆனால் நிரந்தர அரசியல் தீர்வுக்கான முன்னணியின் விஞஞாபனமும் செயற்பாட்டுத் திட்டங்களும் என்ன? அல்லது ஏற்கனவே முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து அம்சங்களும் கைவிடப்பட்டுள்ளதா? அல்லது தேர்தல் காலத்துக்கு மட்டும்தானா அந்த விஞ்ஞாபனம்?

ஒருங்கிணைந்த குரலாகத் தமிழர் தரப்பு தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென அமெரிக்க- இந்திய அரசுகள் கோரியிருந்த நிலையில், தனியே சுமந்திரன் குழுவை மாத்திரம் அமெரிக்கா அழைத்திருக்கிறது. ரெலோ புளொட், மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மனோ கணேசன் ஆகியோர் ஒன்றுகூடிப் பேசும் ஏற்பாட்டை இந்தியா செய்திருக்கின்றது.

ஆகவே ஏன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விலக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தியைக் கூடத் தமிழ் மக்களுக்கு வாய்திறந்து சொல்லாமல் அமைதி காப்பதன் அர்த்தம் என்ன? ஒருங்கிணைந்த குரலாகத் தமிழர்கள் தமது கோரிக்கையை முன்வைக்க வேண்டுமெனக் கோரிவிட்டு ஏன் குறிப்பிட்ட நபர்களை மாத்திரம் அழைத்திருக்கிறீர்கள் என்று அமெரிக்க இந்திய அரசுகளைப் பார்த்துக் கேட்கவில்லை?

விக்னேஸ்வரனின் அரசியல் கருத்துக்களில் குழப்பம் உண்டு. ஆனாலும் அவர் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் அழைப்படவில்லை. ஆகவே விக்னேஸ்வரனுடனாவது கூட்டுச் சேர்ந்து அமெரிக்கப் பேச்சின் உள் நோக்கங்களை ஏன் வெளிப்படுத்த முடியவில்லை? முன்னர் தமிழ் மக்கள் பேரவையில் கஜேந்திரகுமார் சேர்ந்து இயங்கியவர்தானே?

தேர்தல் அரசியல் மாத்திரமே முன்னணியின் நோக்கம் என்றால் அதனைப் பகிரங்கமாக மக்களிடம் வெளிப்படுத்திவிடலாமே? தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய அரசியலை வைத்துக் குளிா்காய்கிறது என்றால், அந்த அரசியலைச் செய்வதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேவையில்லை.

ஒருங்கிணைந்த குரலாகத் தமிழர் தரப்பு தமது கோரிக்கைகளை முன்வைக்க வேண்டுமென அமெரிக்க- இந்திய அரசுகள் விடுத்த கோரிக்கைக்குப் பதிலாக, வடக்குக் கிழக்கில் ஈழத் தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி அகிம்சை வழியில் ஒரு தேசமாகக் காண்பித்திருந்தால், அமொிக்கப் பேச்சுகளும் யாழ் திண்ணைச் சந்திப்பும் மாறியிருக்கும்.

விரும்பியோ விரும்பாமலே சுயாட்சிக் கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கத்துக்கான வழி பிறந்திருக்கும்.