இலங்கைத்தீவின் பொருளாதார நெருக்கடியைச் சாதகமாக்கி

ஈழத்தமிழர் தொடர்பான டில்லியின் கொள்கைக்கு உரமூட்டுகிறாரா தமிழக முதல்வர் ஸ்ராலின்?

மிலிந்த மொறகொடவுடனான சந்திப்பும் கொழும்புப் பயணத்துக்கான அழைப்பும் சொல்லும் செய்தி!
பதிப்பு: 2022 ஜூன் 05 21:33
புதுப்பிப்பு: ஜூன் 06 16:51
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசின் செயற்பாடுகள் போன்றே ஸ்ராலின் தலைமையிலான தமிழக அரசின் செயற்பாடுகளும் அமைவதுபோல், சமீபகாலச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. புதுடில்லியில் உள்ள அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இலங்கைக்கான தூதுவர் மிலிந்த மொறகொட சனிக்கிழமை சென்னையில் தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்ராலினைச் சந்தித்து உரையாடியுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தமிழக அரசு மேலும் வழங்கவுள்ள உதவிகள் குறித்துமே இருவரும் உரையாடியிருக்கின்றனர். அத்துடன் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு மிலிந்த மொறகொட ஸ்ராலினுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள நியூஸ்பெஸ்ட் (newsfirst.lk/tamil) என்ற இலத்திரனியல் ஊடகம் கூறுகின்றது.
 
Milithna
தமிழக முதலமைச்சர் ஸ்ராலினைச் சந்தித்த பின்னர் மிலிந்த மொறொகொட வெளியிட்ட சமூகவலைத்தளப் பதிவு
சென்ற 18 ஆம் திகதி தமிழக அரசு இலங்கைக்கு 45 கோடி ரூபா பெறுமதியான உணவு, மருந்துப் பொருட்களை அனுப்பியிருந்தது. அதற்கு மிலிந்த மொறகொட நன்றி தெரிவித்தார். மேலும் உதவிகளை வழங்குமாறும் தமிழக முதலமைச்சர் ஸ்ராலினிடம் கோரிக்கை விடுத்துமுள்ளார்.

உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை வழங்கவுள்ளதாக ஸ்ராலினும் உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாகச் சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட மிலிந்த மொரகொட 'முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னையில் சந்தித்துப் பேசியதாகவும், தமிழ்நாடு இலங்கைக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை துறைமுகத்திலிருந்து கொழும்புத் துறைமுகத்துக்கு ஒன்பதாயிரம் மெட்ரிக் தொன் அரிசி, 200 மெட்ரிக் தொன் ஆவின் பால் பவுடர், 24 மெட்ரிக் தொன் அத்தியாவசிய மருந்து பொருட்களை தமிழக அரசு கடந்த மாதம் 18-ம் திகதி கப்பல் மூலம் அனுப்பியிருந்தது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னைத் துறைமுகத்தில் நின்று கொடியசைத்துக் கப்பலை அனுப்பிவைத்தார். முதல் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த நிவாரணப் பொருட்களின் மொத்த மதிப்பு 45 கோடி.

அதேவேளை இச் சந்திப்பில் வடக்குக் கிழக்கு மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாகத் தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் இடையில் விடயங்களை பரிமாறிக்கொள்ள உரிய பிரதிநிதியொருவரை நியமிக்குமாறு இதன்போது இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

அத்துடன், திருவள்ளுவரின் சிலையொன்றை இலங்கைப் பல்கலைக்கழகம் ஒன்றில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மிலிந்த மொறகொடவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சருக்கு இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட அழைப்பு விடுத்துள்ளார்.

மிலிந்த மொறகொடவுடனான சந்திப்பில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கான தீர்வு தெரடர்பாக ஸ்ராலின் எதுவுமே பேசவில்லை. மாறாக இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பாக மாத்திரமே பேசியிருக்கிறார்.

கடந்த மாத நடுப்பகுதியில் பிரதமர் நரேந்திரமோடி, சென்னைக்கு வந்து அபிவிருத்தித் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்து வைக்கும் வைபவத்திலும் தலைமை உரையாற்றிய ஸ்ராலின், மோடியின் முன்னிலையில் இலங்கைக்தீவில் உள்ள கச்சதீவை மீட்பது பற்றியே பேசியிருந்தார்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்குச் சென்று உருப்படியாக எந்தவொரு வேலைத்திட்டங்களிலும் ஈடுபடவில்லை என்பதும் தற்போது பட்டவர்த்தனமாகிறது

ஆனால் ஈழத்தமிழர்களின் எழுபது வருட அரசியல் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் இந்திய மத்திய அரசு உரிய முறையில் மேற்கொள்ள வேண்டிய பங்களிப்புப் பற்றி எதுவுமே பேசவில்லை. சுட்டிக்காட்டவுமில்லை.

ஆகவே ஈழத்தமிழர் தொடர்பான புதுடில்லியின் நிகழ்ச்சி நிரலோடு, ஸ்ராலின் தலைமையிலான தமிழக அரசு நகர்ந்து செல்கின்றதா என்ற கேள்வியை ஈழத்தமிழர்கள் முன்வைத்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆகக் குறைந்த பட்ச அதிகாரப் பரவலாக்கமான 13 ஆவது திருத்தச் சட்டத்தை முற்றாக ரத்துச் செய்ய வேண்டுமென மிலிந்த மொறகொட இந்தியாவுக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னரே கொழும்பில் வலியுறுத்தியிருந்தார்.

அதன் பின்னர் தொடர்ச்சியாக சிங்கள அரசியல் தலைவர்கள் பலரும் பௌத்த குருமாரும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தனர்.

இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் அது பற்றிப் பேசப்பட்டுமிருந்தது.

ஆனால் 13 தான் தீர்வு என்ற தொனியிலேயே புதுடில்லியின் நகர்வுகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன. கடந்த ஆண்டு சூம் செயலிமூலம் நடத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் இரண்டு என்ற மாநாடு இராணுவ ரீதியான அச்சுறுத்தல்களை இலங்கைக்குக் கொடுக்கும் நோக்கில் அமைந்திருந்தது என்ற விமர்சனங்களும் உண்டு.

அதன் பின்னா் ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒன்றினைந்து மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரப்பட்டிருந்தது.

மோடிக்குக் கடிதம் அனுப்பப்பட்ட பின்னரான சூழலிலேயே இலங்கைத்தீவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அனைத்தும் முடங்கியது. கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிப் பதவியில் இருந்து விலக வேண்டுமென்ற போராட்டங்கள் ஆரம்பித்தன. மக்கள் வீதிக்கு இறங்கி வன்முறைகளிலும் ஈடுபட்டனர். மகிந்த ராஜபக்சவும் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே தமிழக முதலமைச்சர் ஸ்ராலினும் இலங்கைக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பியிருந்தார்.

ஆரம்பத்தில் தமிழக அரசின் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் வடக்குக் கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களுக்கு என்று மாத்திரமே கூறப்பட்டிருந்தது. பின்னர் அந்த நிவாரணங்கள் முழு இலங்கை மக்களுக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன் பின்னணியிலேயே டில்லியில் உள்ள இலங்கைக்கான தூதுவரா் மிலிந்த மொறகொட தமிழகத்துக்குச் சென்று முதலமைச்சர் ஸ்ராலினைச் சந்தித்தித்து நன்றியும் தெரிவித்திருக்கிறார் போலும்.

சமூகவலைத்தளத்தில் மிலிந்த மொறகொட வெளியிட்ட பதிவின் பிரகாரம், தமிழக அரசுக்கும் இலங்கை அரசுக்குமான உறவு தொடரும் என்ற செய்தியும், புதுடில்லியின் ஈழத்தமிழர்கள் தொடர்பான நிலைப்பாட்டையே தமிழக அரசும் அதாவது தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள் பின்பற்றும் என்ற தொனியும் தென்படுகின்றது.

மறுபுறத்தில், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த்தேசியக் கட்சிகள் கடந்த பதின்மூன்று ஆண்டுகளில் தமிழகத்துக்குச் சென்று உருப்படியாக எந்தவொரு அரசியல் வேலைத்திட்டங்களிலும் ஈடுபடவில்லை என்பதும் தற்போது பட்டவர்த்தனமாகிறது.

செல்வி ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபையில் நிறைவேற்றிய ஈழத்தமிழர்கள் மீதான படுகொலைகள், இன அழிப்புத்தான் என்று நிறைவேற்றிய பிரகடனத்தைத் தூக்கி எறிந்துவிட்டுத் தற்போதைய முதலமைச்சர் ஸ்ராலின் புதுடில்லிக்குத் தோதான அரசியலைச் செய்கிறாரா என்பதும் இங்கே மேற் கிளம்பியிருக்கும் பல கேள்விகளில் இதுவும் ஒன்று.

இலங்கை அமைச்சர்களையோ, புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவரையோ அல்லது இலங்கை ஜனாதிபதி, பிரதமரரைக்கூட இந்திய மாநிலம் ஒன்றின் முதலமைச்சர் சந்திக்கலாம். அது அந்த மாநில அரசுக்குரிய உரிமை - அதிகாரம்.

ஆனால் ஈழத்தமிழர் விவகாரத்தைத் தேர்தல் காலங்களில் உரத்துக் கூறி வாக்குகளைப் பெற்றுப் பதவிக்கு வரும் தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள், புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சியமாக ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாகப் பேச வேண்டிய பெறுப்பு உண்டு.

அந்தப் பொறுப்பில் இருந்து அவர்கள் விலகி நிற்க முடியாது. இந்திய மத்திய அரசுக்கு பேச்சளவில் அழுத்தம் கொடுப்பதோடு மாத்திரம் நின்றுவிடவும் முடியாதென்பதே ஈழத்தமிழர்கள் முன்வைக்கும் வாதம்.