2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர்

வல்லரசுகளின் போட்டிக்களமாக மாறிவரும் இலங்கை- சீனாவுக்கு எதிராக ஜப்பான் அமைச்சர் கொழும்பு பயணம்

தமிழர் தாயக கடற்பிரதேசங்கள் பிரதான இலக்கு- டில்லி கொழும்பு நகரங்களில் சந்திப்பு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 19 14:31
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 19 16:53
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தென்சீனக் கடல் விவகாரம் உள்ளிட்ட அரசியல். பொருளாதார பிரச்சினைகளில் எதிரும் புதிருமான முரண்பாடுகளுடன் செயற்பட்டு வரும் சீனா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் இலங்கையின் அம்பாந்தோட்டையில் தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. இதுவரைகாலமும் சீனா மாத்திரமே இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன், இலங்கைக்கான அபிவிருத்தி, மற்றும் உதவிகள் என பல்வேறு வேலைத்திட்டங்களுடன் செயற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஜப்பான் அரசு தனது பொருளாதார நலன்சார் அடிப்படையில் சீனாவுக்கு எதிராக இலங்கையில் கால்பதிக்கவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.
 
இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள ஐப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) திருகோணமலை, அம்பாந்தோட்டை அகிய துறைமுகங்களை பார்வையிடவுள்ளதாக ஐப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை இராணுவத்திற்கு 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியை வழங்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த 13 ஆம் திகதி திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருந்தது.

இந்த நிலையில் நாளை 20 ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்புக்குச் செல்லவுள்ள ஐப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தங்கியிருப்பார்.

பிராந்தியத்தில் இராணுவ ஒத்துழைப்புக் குறித்து பேச்சு நடத்துவதற்காக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை தனது பயணத்தை ஆரம்பித்துள்ள ஐப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா, சீனாவின் செயற்பாடுகள் குறித்தே கலந்துரையாடவுள்ளார்.

இந்தியப் பெருங்கடலில் சீன அரசின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை மற்றும் இலங்கை மீதான சீ;ன அரசின் ஆதிக்கம் போன்றவற்றின் தாக்கங்களினால் ஜப்பான் அரசு தனது பாதுகாப்பு அமைச்சரை அனுப்பி விபரங்களை அறியவுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்களும் கூறுகின்றன.

முதலில் இந்தியாவுக்கு செல்லவுள்ள ஐப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி, புதுடில்லியில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துப் பேசவுள்ளார்.

ஜப்பான், இந்திய இராணுவத்துக்கான கூட்டுப்பயிற்சியை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து இருதரப்பு இணப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறும் என புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன.

பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கும் அவர், இந்தியப் பாதுகாப்புத் தரப்பின் உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார். இலங்கைப் பயணத்தின்போது இலங்கையின் முப்படைகளின் தளபதியாகவுள்ள ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகாரிகளையும் சந்தித்து தற்போதைய நிலைமைகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

இலங்கைக் கடற்படைக்கு மேலதிக உதவிகளை ஜப்பான் வழங்குவது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேசுவார் என்றும் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகத் தகவல்கள் கூறுகின்றன.

2002 ஆம் ஆண்டு நேர்வேயின் ஏற்பாட்டுடன் இடம்பெற்ற பேச்சின் போது இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவி என்ற அடிப்படையில் சமாதான தூதுவராக யசூசி அகாசியை இலங்கைக்கு அனுப்பிய ஜப்பான், அப்போதைய அனைத்து அரசியல் குழறுபடிகளுக்கும் காரணமாக இருந்ததாக அவதானிகள் கூறுகின்றனர்.

இறுதிப் போருக்கான உதவிகளை மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஜப்பான் வழங்கியிருந்தது. ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினையில் அக்றைகொள்ளாத ஜப்பான், தற்போது, இந்திய மத்திய அரசின் ஆதரவுடன் இலங்கையில் சீனாவுக்கு எதிரான நகர்வுகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

ஆகவே, ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை அழிக்க உதவிய அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போட்டிக்களமாக இலங்கை தற்போது மாறிவிட்டதாகவும் அவதானிகள் கூறுகின்றனர்.

அதேவேளை, தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள கடற்பிரதேசத்தை மையமாக் கொண்டே இந்த இந்த நாடுகளின் போட்டி அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் ஏற்கனவே கூறியிருந்தார்.

தமிழர் தாயகமான திருகோணமலை புல்மோட்டைப் பகுதியில் இல்மனையிட் கனிய வளங்களை பெற்றுக்கொள்ள ஜப்பானுக்கு 2003, 2004 ஆம் ஆண்டுகளில் சந்திரிக்கா அரசு அனுமதி வழங்கியிருந்தது.

ஒரு வருடத்தில் 60 ஆயிரம் தொன்கள் வரையான இல்மனையிட் ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மட்டக்களப்பு நகருக்கு தெற்கேயுள்ள திருக்கோவில் பிரதேசத்திலும் இல்மனையிட் படிவுகள் உள்ளன.

இதேவேளை, அமெரிக்கக் கடற்படையின் விசேட படைப்பிரிவு அதிகாரிகள் குழு ஒன்று இலங்கையின் கடற்படைக்கு திருகோணமலையில் பயிற்சியளித்துள்ளது.

அமெரிக்க இலங்கை கூட்டு ஒருங்கிணைந்த பரிவர்த்தனைப் பயிற்சித் திட்டத்தின் கீழ், Flash Style 2018/01 என்ற பெயரில் இந்தப் பயிற்சிகள் கடந்த யூலை மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இந்த மாதம் 10 ஆம் திகதி வரை நான்கு வாரங்கள் இலங்கைக் கடற்படை முகாமில் இடம்பெற்றிருந்தன.

இந்த நிலையில் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா கொழும்புக்குச் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.