வடக்கு- கிழக்கு தாயகப் பிரதேசங்களில்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு- திட்டமிடப்பட்ட செயற்பாடு என உறவினர்கள் விசனம்

கொழும்பை மையப்படுத்திய அலுவலகத்தில் நம்பிக்கையில்லை எனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2018 ஓகஸ்ட் 24 10:59
புதுப்பிப்பு: ஓகஸ்ட் 27 16:45
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
போர் நடைபெற்றகாலத்தில் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகத்திலும் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் இலங்கைப் படையினரால் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான முழு விபரங்கள் இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும் வடக்கு கிழக்கு பகுதிகளில் இயங்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அமைப்புகள் தம்மால் இயன்றளவு பதிவுகளை செய்துள்ளன. சுமார் 30 ஆயிரம் பேர் வரை கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். ஆனாலும் அதன் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என அந்த அமைப்புகள் இலங்கை அரசாங்கம் அமைத்த விசாரனை ஆணைக் குழுக்களிடம் நேரடியாகக் கூறியுமுள்ளன.
 
இந்த நிலையில், போர் நடைபெற்ற காலத்தில் 21 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கலாம் என கொழும்பை மையமாக் கொண்டு செயற்பட்டு வரும் இல்ங்கை அரசாங்கத்தின் காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகம் கூறியுள்ளது.

ஆனாலும் இந்த எண்ணிக்கை இறுதியான முடிவு அல்ல என்றும் அந்த அலுவலகத்தின் தலைவர் சட்டத்தரணி சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிய இந்த அலுவலகம் முழு ழுச்சாகச் செயற்பட்டு வருவதாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் அலுவலகத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு விளக்கமளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சர்வதேச செஞ்சிலுவை சங்கம் 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட தரவுகளின்படி, 16 ஆயிரம் பேரும் இல்ங்கை ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட பரணகம ஆணைக்குழுவின் தரவுகளின்படி, 21 ஆயிரம்பேரும் இலங்கையின் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சு கிராம சேவகர்களூடாக மேற்கொண்ட தரவுகளின்படி, 13 ஆயிரம் பேரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும், இந்தத் தரவுகளில் கூறப்பட்ட எண்ணிக்கைககள் இறுதியான முடிவுகள் அல்ல. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தொகை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று தமக்குக் கிடைத்த முறைப்பாடுகள் மூலம் அறிய முடிவதாகவும் சாலிய பீரிஸ் கூறினார்.

எவ்வாறாயினும் கொழும்பை மையப்படுத்திச் செயற்பட்டு வரும் இந்த அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கை இல்லையென வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி அறியும் உறவினர்களின் சங்கம் கூறியுள்ளது.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுவோர் வெளிநாடுகளில் வேறு பெயர்களில் வாழ்வதாக இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்க கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கண்கண்ட சாட்சியம்போன்று கூறியிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவருமே இல்லையென இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மிடம் நேரடியாகவே கூறியதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் பகிர்ஙகமாகக் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட இந்த அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை என்றும், ஜெனீவா மனித உரிமைச் சபையைச் சமாளி்க்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டது எனவும் இடதுசாரி முன்னணியின் மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுந்தரம் மகேந்திரன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.