கிழக்கு மாகாணம்

திருகோணமலை சீனக்குடாவில் உள்ள எண்ணெய்த் தாங்கிகள் இந்திய அரசின் உதவியுடன் அபிவிருத்தி

இலங்கை அமைச்சரவை அங்கீகாரம்
பதிப்பு: 2018 செப். 23 10:37
புதுப்பிப்பு: செப். 24 00:15
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
கிழக்கு மாகாணம் திருகோணமலை- சீனக்குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்திய அரசின் உதவியோடு அபிவிருத்தி செய்வதற்கான யோசனை ஒன்றுக்கு மைத்தி-ரணில் அரசாங்கத்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான யோசனையை இலங்கை பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். அதனை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பரிசீலித்து அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இந்தியன் எண்ணெய் கம்பனியும் இணைந்து கூட்டு முயற்சியாக அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளன.
 
85 எணணெய்த் தாங்கிகளில் 16 தாங்கிகள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்காக கையளிக்கப்படும் எனவும் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. ஏனைய 69 எண்ணெய்த் தாங்கிகளையும், இலங்கையில் உள்ள இந்தியன் எண்ணெய்க் கம்பனி பயன்படுத்தவுள்ளது.

ஆனால், இலங்கை அமைச்சரவையின் தீர்மானத்துக்கு ஏற்ப பயன்பாட்டுக்காலம் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனரட்ன கூறியுள்ளார்.

இந்தியன் எண்ணெய்க் கம்பனி தற்போது பயன்படுத்தி வரும் 15 கீழ் நிலை எண்ணெய்த் தாங்கிகளின் உரிமை தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அதற்கான உடனபடிக்கையும் விரைவில் கைச்சாத்தாகும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை நகரில் இருந்து ஏழு கிலோ மீற்றர் துாதரத்தில் அமைந்துள்ள சீன்க்குடா பிரதேசத்தில் இலங்கைக் கடற்படையின் விமான நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த மாதம் ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.

அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த ஓகஸ்ட் மாதம் இதேபோன்ற இணைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் திருமலையில் மேற்கொண்டிருந்தன.

திருகோணமலையின் கடல் பகுதியை மையப்படுத்திய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் பற்றிய ஆய்வு நடவடிக்கைகள் இந்த மாதம் இரண்டாம் திகதி ஆரம்பமாகியுள்ளன. பனாமா நாட்டுக் கொடியுடன் இயங்கும் BGP Pioneer என்ற ஆய்வுக் கப்பல் ஒன்றும் திருகோணமலைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் திருகோணமலை சீனக்குடாவில் உள்ள எண்ணெய்த் தாங்கிகள் இந்திய அரசின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதிப் போருக்கு உதவியளித்த இந்தியா, அமெரிக்கா. ஜப்பான் ஆகிய நாடுகள் 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கையில் சீன அரசின் அதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு ஈழத் தமிழர்களின் கடற்பிரதேசங்களில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றது.

அதுவும் மைத்திரி- ரணில் ஆட்சியின்போதுதான் அதிகளவு செல்வாக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

இந்த நிலைமையானது ஈழத் தமிழர்களின் இறைமைக்கு மாத்திரமல்ல இலங்கைத் தீவின் இறைமைக்கே ஆபத்து எனவும் அவதானிகள் கூறுகின்றனர்.