மஹிந்த பிரதமராகத் தெரிவான பின்னர் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி

துப்பாக்கிகளையும் யுத்த டாங்கிகளையும் பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி - தூதுவர்களுக்கு சபாநாயகர் கடிதம்

மைத்திரி அரசியல் யாப்புக்கு முரணாகச் செயற்பட்டுள்ளதாகவும் கடிதத்தில் கூறியுள்ளார்
பதிப்பு: 2018 நவ. 07 13:34
புதுப்பிப்பு: நவ. 07 18:46
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பிரதமராக நியமிக்கப்பட்டமை ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என இலங்கைச் சபாநாயகர் கருஜெயசூரிய, கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, மஹிந்த ராஜபக்சவை நியமித்தமை அரசியல் யாப்புக்கு முரணானது எனவும் சபாநாயகர் சென்ற ஐந்தாம் திகதி அனுப்பிய அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. வெளிப்படைத்தன்மை, ஒழுக்கம், ஜனநாயகம் ஆகியவற்றிற்கு மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்டதாகவும் சபாநாயகர் கூறியுள்ளார். தான் சத்தியப்பிரமானம் செய்த யாப்பையே மைத்திரி மீறிவிட்டார் என்றும் சபாநாயகர் கூறினார்.
 
இலங்கையில் கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவம் சதிப்புரட்சி என்றே கூற முடியும் எனவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிகளையும் யுத்த டாங்கிகளையும் பயன்படுத்தாமல் இடம்பெற்ற சதிப்புரட்சி என்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய அந்தக் கடிதத்தில் விபரித்துள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தொிவித்துள்ளது.

மஹிந்தவை பிரதமராக்குவது என்ற செயற்பாடுகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டிருந்ததாகவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

அதேவேளை, பிரதமராகப் பதவியேற்குமாறு மைத்திரிபால சிறிசேன தன்னைக் கேட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தொிவித்துள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பிரதமராகப் பதவியேற்குமாறு மைத்திரிபால சிறிசேன தன்னையும் கேட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் சபாநாயகருமான கருஜயசூரியவும் கூறியுள்ளார்.

பிரதமர் பதவியை ஏற்குமாறு இருவரையும் தான் கேட்டதாக மைத்திரிபால சிறிசேன கடந்த திங்கட்கிழமை கொழும்பு பத்தரமுல்லையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போது கூறியிருந்தார்.

இதற்கு சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோர் பதிலளிக்கும்போது இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பயந்தே இருவரும் பிரதமர் பதவியை இருவரும் ஏற்கவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

இதற்குப் பதலளித்த சஜித் பிரேமதாச ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பயந்து பிரதமர் பதவியை ஏற்காமல் விடவில்லை என்றும் கொள்கை அடிப்படையிலேயே பிரதமர் பதவியை ஏற்க மறுத்ததாகவும் கூறினார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவும் அவ்வாறே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.