மேற்குலக நாடுகளும் சீனாவும் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு நிதியுதவி புரிவதில் போட்டா போட்டி

சர்வதேச நாணய நிதியம் 252 மில்லியன் டொலர் வழங்க தீர்மானம், சீனாவும் உதவி என்கிறார் இலங்கை அமைச்சர்

அரசியல் தீர்வுத் திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில் இராணுவ ஒத்துழைப்பும் நிதியுதவியும்
பதிப்பு: 2018 ஜூன் 03 02:45
புதுப்பிப்பு: ஜூன் 03 16:03
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை அரசுக்கு நிதிவழங்கிவரும் சர்வதேச நாணய நிதியம் தற்போது மேலும் 252 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளது. வெள்ளிக்கிழமை கூடிய சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு இவ்வாறு தீர்மானம் எடுத்துள்ளதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஆட்சிமாற்றத்துக்கான தேர்ததல் ஒன்றுக்குத் தயாராக இருப்பதாக ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்த இலங்கை அமைச்சர் அகிலவிராஜ் காரியவன்ச கொழும்பில் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இராணுவ ஒத்துழைப்புகளும் நிதியுதவிகளும் யாரை நோக்கி யாருக்காக வழங்கப்படுகின்றன என்று தமிழ் அரசியல் அவதானிகள் வினவுகின்றனர்.
 
இலங்கை அரசுக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் வழங்குவதென 2016 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 3 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு கூடியபோது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நீடிக்கப்பட்ட மூன்று ஆண்டுகால திட்டத்திற்கு அமைவாக, 252 மில்லியன் வழங்க தீர்மானித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

அடுத்த நிதியாண்டில் 4.3 பில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக இலங்கை நிதியமைச்சர் மங்கள சமரவீர இரண்டு கடந்த வாரத்திற்கு முதல் கொழும்பில் செய்தியாளாளர்களிடம் கூறியிருந்தார்.

சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஒரு பில்லியன் டொலர் கடனைப் பெறவுள்ளதாகவும் அவர் கடந்த 25ஆம் திகதி செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே 252 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதான புதிய அறிவிப்பு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வந்திருக்கிறது.

அதேவேளை, 2001ஆம் ஆண்டில் இருந்து 2017ஆம் ஆண்டு வரையான கடந்த 17 ஆண்டுகளில், சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் (Exim Bank) இருந்து, இலங்கை அரசு 7.2 பில்லியன் கடன்களைப் பெற்றுள்ளதாக இலங்கையின் வெளியக வளங்கள் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அரசாங்கத்தின் இலங்கைக்கான கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,907 மில்லியன் டொலர் சலுகைக் கடன் பெறப்பட்டுள்ளது எனவும் இலங்கையின் வெளியக வளங்கள் திணைக்களத்தின் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை சீனா தொடர்ச்சியாக உதவி வழங்கும் என இலங்கை அமைச்சர் ராஜித சேனரட்ன, கொழும்பில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் விற்பனை பெறுமதி, 159.61 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே 17 ஆம் திகதி ரூபாவின் பெறுமதி 159.55 என்ற நிலைக்கு வீழ்ச்சியடைந்திருந்தது.

ஆனால் வெள்ளிக்கிழமை முதல் ரூபாவின் பெறுமதி, 159.61 ஆக மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, மேற்குலக நாடுகளின் ஒத்துழைப்புடன் செயற்படும் நிதிநிறுவனங்களும் மற்றும் சீன அரசும், இலங்கை அரசாங்கத்துக்கு ஏட்டிக்குப் போட்டியாக இராணுவ உதவிகளையும் நிதியுதவிகளையும் வழங்கி வருவதாக கொழும்பில் உள்ள மூத்த அரசியல் பத்தி எழுத்தாளர் ஒருவர் தெரிவித்தார்.

இன அழிப்புப் போர் என்று தமிழர்களால் வர்ணிக்கப்படும் இறுதி யுத்தத்தில் இலங்கை ஒற்றையாட்சி அரசுக்கு உதவி புரிந்த இந்த நாடுகள், 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான அரசியற் சூழலில் ஈழத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வுக்கான எந்தவொரு திட்டங்களும் இலங்கை அரசிடம் இல்லாத நிலையில், வெறுமனே நிதியுதவிகளையும், இராணுவத்திற்கான ஒத்துழைப்புகளையும் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றமை எந்த அடிப்படையில் என்று தமிழ் அரசியல் எழுத்தாளர் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.

அரசியற் தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்கான குறைந்த பட்சப் பொறிமுறை ஒன்றைக்கூட இந்த நாடுகள் இலங்கை ஒற்றை ஆட்சி அரசிடம் அறிமுகப்படுத்தவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.