இலங்கையில் மீண்டும் அரசியல் நெருக்கடி ஏற்படலாம்

மைத்திரி-ரணில் மோதல் மீண்டும் ஆரம்பம்- மாகந்துர மதுஷ் கைது விவகாரத்தில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன

அரசியல் பிரமுகர்களுக்கும் தொடர்புள்ளதாகச் சந்தேகம்- இராஜதந்திரக் கடவுச் சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது
பதிப்பு: 2019 பெப். 07 00:16
புதுப்பிப்பு: பெப். 08 23:10
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் ஆரம்பித்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்றுப் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. அந்தக் கூட்டத்தில விளக்கமளித்த மைத்திரிபால சிறிசேன மாகாண சபைத் தேர்தல்கள் விடயத்தில் ரணில் விக்கிரமசிங்க தன்னைச் சீண்டிப்பார்ப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். மாகாண சபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்துவது என அமைச்சரவைக் கூட்டத்தில் தான் கேட்டதாகவும் ஆனால் ரணில் விக்கிரமசிங்க இழுத்தடிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன ஆவேசமாகக் கூறியுள்ளார்.
 
மாகாண சபைத் தேர்தல்கள் உரிய காலத்திற்குள் நடத்தப்படவில்லையென்றால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் படி நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன அந்தக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேவேளை, டுபாய் நாட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட பாதாளகோஷ்டித் தலைவர் மாகந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களை காப்பாற்றவே ரணில் விக்கிரமசிங்க முற்படுவதாக மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேன, இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைக் கொலை செய்யும் விடயத்தில் மாகந்துர மதுஷ் தொடர்புள்ளவர் என்ற சந்தேகத்தில் ஏற்கனவே கண்காணிக்கப்பட்டவர்.

இதனால் மைத்திரிபால சிறிசேனவின் இரகசிய ஏற்பாட்டிலேயே அவர் டுபாய் நாட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார் என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மாகந்துர மதுஷின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரைக் கைது செய்யும் பொறுப்பு இல்ங்கையின் விசேட அதிரடிப்படைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்பிடம் மைத்திரிபால சிறிசேனவினால் ஏலவே ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கைப் பொலிஸ் மா அதிபர் மற்றும் இலங்கையின் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் எவருக்கும் தெரியாமலேயே இரகசியமாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. டுபாய். அபுதாபி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டு, கைது செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

டுபாய் நாட்டில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டேலில் மகனின் பிறந்த நாள் விழாவை மாகந்துர மதுஷின் மனைவி ஏற்பாடு செய்திருந்தார். பிறந்த நாள் விழாவில் மாகந்துர மதுஷ் கலநது கோணட்டார். இலங்கையில் இருந்தும பலரை டுபாய்க்கு அழைத்திருந்தார்.

விழா நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் அங்கு அதிரடியாக உள்ளே சென்ற இலங்கை, டுபாய் பாதுகாப்பு அதிகாரிகள் மாகந்துர மதுஷ் மற்றும் அவரது சகாக்களைச் சுற்றி வளைத்து ஒரு அறைக்குள் அடைத்தனர்.

இந்த நிலையில், மாகந்துர மதுஷ் மீது டுபாய் நாட்டுச் சட்டம் பாயும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை கூறியிருந்தார்.

அத்துடன் ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் செயற்படும் இலங்கை வெளியுறவு அமைச்சும் மாகந்துர மதுஷ் மற்றும் அவருடைய குழுவினரை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை, மாகந்துர மதுஷிடம் இருந்து இராஜதந்திரக் கடவுச் சீட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கையில் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு வைத்திருந்தமைக்கான தொலைபேசி ஆதரங்களும் டுபாய் நாட்டில் உள்ள இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளினால் கண்டறியப்பட்டுள்ளன.

மாகந்துர மதுஷ் மற்றும் அவருடைய குழுக்களுடன் தொடர்புடை இலங்கையின் முக்கிய அரசியல் புள்ளிகள் யார் என்பது பற்றிய தகவல்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே மனக் கசப்புகள் மேலும் அதிகரித்துக் கடும் மோதல்கள் ஏற்படலாம் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.