உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலையில்

புதிய தேசிய பாதுகாப்புச் சபை - பரிந்துரைகள் மகாநாயக்க தேரர்களிடம்

சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியக் கூடாதெனவும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது
பதிப்பு: 2019 மே 29 14:57
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: மே 31 01:32
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Eastersundayattack
#lka
#NationalSecurityCouncil
#Nationalway
#Terroristattack
இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றை சர்வதேசத்துக்கும் மக்களுக்கும் காண்பிப்பதற்காக மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரை உள்ளடக்கிய புதிய பாதுகாப்புச் சபையொன்றை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் தேசிய வழி என்ற தலைப்பில் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஒன்று மகாநாயக தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மல்வத்து, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களிடம் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேற்றுச் செவ்வாய்க்கிழமை இந்த ஆவணத்தைக் கையளித்தார். ஜாதிக ஹெல உறுமயவின் பௌத்த தேரர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
தேசிய வழி' என்ற தலைப்பில் யோசனைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் உள்ள இஸ்லாமியப் பயங்கரவாதத் தாக்குதல்கள் இலங்கையிலும் பரவியுள்ளதால், அதனைத் தடுக்க பிரதான அரசியல் தலைவர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும் தேசிய பாதுகாப்புச் சபையில் மகாநாயக்கத் தேரர்களும் அங்கம் வகிக்க வேண்டும் எனவும் குறித்த பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.

தேசிய வழி என்ற என்ற இந்த யோசனைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடி இந்த யோசனைகள் தயாரிக்கப்பட்டதாகவும் இது இலங்கையின் இறைமையைப் பாதுகாக்கும் ஆவணம் என்றும் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இதேவேளை, ஒற்றையாட்சியையும் இலங்கையின் இறைமையையும் பாதுகாக்கும் வகையில் புதிய தேசியப் பாதுகாப்புச் சபை ஒன்றை உருவாக்க வேண்டுமென மகாநாயக்க தேரர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளனர்.

வேறு துறையினரையும் உள்ளடக்கிய தேசிய பாதுகாப்புச் சபை ஒன்று விரைவில் புதிதாக உருவாக்கப்படுமென மைத்திரிபால சிறிசேனவும் கடந்த வாரம் கூறியிருந்தார்.

இந்த நிலையில் தேசிய வழி என்ற தொனியில் தேசிய பாதுகாப்புச் சபை ஒன்றை உருவாக்குவதற்கான முன்மொழிகள் மகாநாயக தேரர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா ஜப்பான் போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமலும் இலங்கை இராணுவத்தை சர்வதேச அரங்கில் காட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமென்ற பரிந்துரைகளும் இந்தத் தேசிய வழி என்ற ஆவணத்தில் கூறப்பட்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் எதுவுமே ஊடகங்களுக்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.