யாழ் மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

நீதிபதியுடன் பொதுமக்கள் தர்க்கம். வன்முறைகளை இலங்கைப் பொலிஸார் துாண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டு

தமது பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு வேண்டுமென பெற்றோர் கோரிக்கை
பதிப்பு: 2018 ஜூன் 18 11:09
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 19 11:53
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
யாழ்ப்பாணம், மல்லாகம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்ற சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். அதேவேளை, தெல்லிப்பழை வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சம்பவ இடத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் கிளை அதிகாரிகள் சென்று, பொது மக்களிடம் விசாரணை நடத்துகின்றனர்.
 
அதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்கள், பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட மறுத்துள்ளனர். பொலிஸார் விசாரணையை நீதியாக நடத்தமாட்டார்கள் என்று கூறி வைத்தியசாலை வளகத்தில் நின்று அவர்கள் சத்தமிட்டனர். வேறு குழப்பங்களிலும் ஈடுபட்டனர்.

இதனால் வைத்தியசாலை நிவர்வாகம் வழங்கிய முறைப்பபட்டின் அடிப்படையில் மூன்று இளைஞர்களையும் கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதும் சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாகம் நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன் மக்களிடம் விசாரணை நடத்தினார்.

இதன்போது நீதிபதிக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொலிஸாரின் செயற்பாட்டை நீதிபதி நியாயப்படுத்தியதாக குறித்த இடத்தில் நின்ற ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இரு குழுக்கள் வாள்கள் பொல்லுகளுடன் சகாயமாத கோவிலுக்கு அருகில் உள்ள ஒழங்கையில் நின்று மோதியதாகவும் நீதிபதி கூறினார். அந்த மோதலில் ஒருவர் காயமடைந்ததாகவும் நீதிபதி கூறினார்.

ஆனால், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் வாள்வெட்டுக் குழுவுக்கும் தொடர்புகள் இல்லை என்றும் மக்கள் குறிப்பிட்டனர். உயிரிழந்த இளைஞன் கோவில் திருவிழாவுக்கு வந்ததாகவும் மக்கள் கூறினார்.

அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால் காலுக்கு கீழே சுட்டிருக்கலாமே என்றும் பொதுமகன் ஒருவர் நிதிபதியிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், நீதிபதி அதற்கு பதில் கூறவில்லை.

தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் பொலிஸாரே கஞ்சா போன்ற போதைப் பொருட்களை சில இளைஞர்களுக்குக்கு கொடுத்து, பின்னர் அவர்களிடையே வன்முறைகளைத் தூண்டி விடுவதாகவும் மக்கள் ஆவேசமாகக் கூறினார்.

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரு பொலிஸாரும் மதுபோதையில் இருக்கவில்லை என்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு முன்னர். வேறு மரணம் தொடர்பான விசாரணைக்காக குறித்த இரு பொலிஸாரும் தன்னுடைய வீட்டுக்கு வந்ததாகவும், அவ்வாறு வந்து விட்டுச் சென்றபோதுதான், இளைஞர்கள் வாள்களுடன் மோதுப்படுவதைக் கண்டு துப்பாகிப் பிரயோகம் செய்தார்கள் எனவும் நீதிபதி விளக்கமளித்தார்.

இதனால், பொதுமக்களுக்கும் நீதிபதிக்கும் இடையே மேலும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இது முன்னுக்குப் பின் முரணான தகவல் எனவும் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார், நீதிபதிக்குப் பொய்யான வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் கூறிய மக்கள், கோவில் திருவிழாவுக்கு வாள்களுடன் எவரும் வரவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், துர்ப்பாக்கிப் பிரயோகம் நடத்திய பொலிஸார் இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மல்லாகம் குளமங்கால் பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியராச சுதர்ஸன் என்ற 32 வயதுடைய இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.