உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

கிஸ்புல்லா, அசாத்சாலி பதவி விலகல் - உண்ணாவிரதம் நிறுத்தம்

ரிஷாட் பதியுதீனுடன் சேர்ந்து முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலக முடிவு?
பதிப்பு: 2019 ஜூன் 03 14:57
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 05 15:46
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#AthuraliyeRathanaThero
#Eastersundayattack
#lka
#ISIS
#ThowheedJamaath
#AsathSali
#Muslims
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கொழும்பை மையப்படுத்திய மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிகளில் இருந்து விலகுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடிதங்களைக் கையளித்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவும் இன்று திங்கட்கிழமை காலையும் மைத்திரியுடன் நடத்தப்பட்ட பேச்சின் பின்னர் தமது பதவி விலகல் கடிதங்களைக் கையளித்தாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இதுவரை அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகவில்லை. ஆனாலும் மைத்திரியின் ஒற்றையாட்சி அதிகாரத்தின் கீழ் பதவி வகித்த இரண்டு ஆளுநர்களும் பதவி விலகியுள்ளனர்.
 
இந்த நிலையில் நான்காவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரத்ன தேரர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று பிற்பகல் 2.30க்கு கைவிட்டார்.

பௌத்த குருமார் அவருக்கு பானம் கொடுத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். பெருமளவு மக்கள் கண்டி நகரில் ஒன்று கூடி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

அத்துடன் இலங்கையின் பல பாகங்களிலும் அத்துரலியே ரத்ன தேரருக்கு ஆதரவாக இன்று ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் இடம்பெற்றன. ஆனாலும் இரண்டு ஆளுநர்கள் பதவி விலகியதால் போரட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, ரிஷாட் பதியுதீனுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் கூட்டாகப் பதவி விலகவுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று பிற்பகல் பிரதமரின் அலரிமாளிகையில் நடத்திய சந்திப்பின் பின்னர் இந்த முடிவை எடுத்ததாக ரிஷாட் பதியுதீன் ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

ஆனாலும் அமைச்சுப் பொறுப்புக்களில் இருந்து விலக ஏனைய முஸ்லிம் அமைச்சர்கள் உடன்படவில்லையென்றும் மற்றுமொரு தகவல் தெரிவிக்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மூத்த உறுப்பினர்கள் ரிஷாட் பதியுதீன் அமைச்சுப் பதவியில் இருந்து விலக வேண்டுமென அழுத்தம் கொடுத்திருந்தனர்.

இதேவேளை, குற்றங்கள் இல்லாத நிலையில் பதவியில் இருந்து விலகியுள்ளதாக மேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்திருந்த அசாத்சாலி ஊடகங்களுக்குக் கூறியுள்ளார்.

இது பெரும் அநீதியென்றும் அசாத்சாலி தெரிவித்துள்ளார். ஆனால் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் நடத்திய தேசிய தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்புடன் கிஸ்புல்லா, அசாத்சாலி, ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்குத் தொடர்புள்ளதாக ஏனைய சிங்கள அமைச்சர்கள் சிலரும் மகிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். சிங்கள நாளேடுகளில் செய்திகள் வெளியிடப்பட்டும் வருகின்றன.

ஆனால் போர்க்காலத்தில் தேசிய தௌஹீத் ஜமா-அத் அமைப்பை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே சம்பளம் கொடுத்து இலங்கை இராணுவப் புலனாய்வுடன் இணைத்து வைத்திருந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் கிறித்தவ அமைச்சர்கள் ஏலவே குற்றம் சுமத்தியிருந்தனர்.

இந்த நிலையில், இலங்கைக் கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் இன்று திங்கட்கிழமை காலை கண்டிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அத்துரலியே ரத்ன தேரரைப் பார்வையிட்டிருந்தார்.