அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னரான நிலை

முஸ்லிம் உறுப்பினர்களுக்கு மகாநாயகத் தேரர்கள் அழைப்பு!

ரிஷாட் தவிர்ந்த ஏனையவர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்க வேண்டுமெனக் கோரிக்கை
பதிப்பு: 2019 ஜூன் 06 00:07
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 04:35
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#AthuraliyeRathanaThero
#Srilanka
#Parliament
#MuslimMinisters
#President
#Maithripalasrisena
#Ranilwickramasinghe
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல்வாதிகள் உள்ளிட்ட அமைச்சர்கள், முஸ்லிம் அதிகாரிகள் ஆகியோர் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் நான்கு நாட்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தினால் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளில் இருந்து சென்ற திங்கட்கிழமை விலக நேரிட்டது. ஆனாலும் தற்போது பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புகளை ஏற்க வேண்டுமென கண்டி மகாநாயக்கத் தேரர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கேட்டுள்ளதாக அமைச்சரவைத் தகவல்கள் கூறுகின்றன.
 
ஆனால் ரிஷாட் பதியுதீன் மாத்திரம் மீண்டும் அமைச்சுப் பொறுப்பை ஏற்கக் கூடாதென்றும் மகாநாயக தேரர்கள் கேட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது. எனினும் இது தொடர்பாக ஜனாதிபதி செயலகமோ பிரதமர் அலுவலகமோ கருத்துக்கள் எதனையும் கூறவில்லை.

ஆனாலும் மகாநாயக தேரர்கள் அவ்வாறு கேட்டுக்கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதால் சவூதி அரேபியா உள்ளிட்ட அரேபிய நாடுகள் மற்றும் ஈரான் போன்ற நாடுகளிடம் இருந்து நிதி கிடைக்காதென மூத்த அமைச்சர்கள் சிலர் மகாநாயக்கத் தேரர்களிடம் எடுத்துக் கூறியதை அடுத்து இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவோடும் மகாநாயக்கத் தேரர்கள் உரையாடிய பின்னர் இவ்வாறு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் மகாநாயகத் தேரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பதை நேற்றுப் புதன்கிழமை நள்ளிரவு வரை ஜனாதிபதி செயலகமோ, பிரதமர் செயலகமோ உறுதிப்படுத்தவில்லை.

புதவி விலகினாலும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் முஸ்லிம் உறுப்பினர்கள் முன்வரிசையில் அமர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.