அத்துரலியே ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் பின்னரான நிலை

மகாநாயக்கத் தேரர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் முஸ்லிம்கள்

தமிழ் மக்களோடு முஸ்லிம்கள் சேர்ந்துவிடக் கூடாதென்பதில் அவதானமாக செயற்படும் பிக்குமார்
பதிப்பு: 2019 ஜூன் 06 22:34
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 07 04:34
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#AthuraliyeRathanaThero
#Srilanka
#BasheerSeguDawood
#Muslims
#Political
#lka
#Tamils
#RauffHakeem
மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளுமாறு பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களுக்குப் பௌத்த மகாநாயக்கத் தேரர்கள் விடுத்துள்ள அழைப்பை பரிசீலனை செய்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இலங்கை நாடாளுமன்றக் கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களோடும் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படாத உறுப்பினர்கள் மாத்திரமே அமைச்சுப் பொறுப்பை ஏற்க வேண்டுமென மகாநாயக்கத் தேரர்கள் கூறியமை தொடர்பாக ஆராயப்பட்டதென்றும் விரைவில் மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்துப் பேசவுள்ளதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
 
பதவி விலகிய ஒன்பது முஸ்லிம் உறுப்பினர்களும் அவர்களின் கட்சி உறுப்பினர்களும் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்குபற்றினர். அதேவேளை, குற்றம் சுமத்தப்பட்ட உறுப்பினர்களைத் தவிர்த்து ஏனைய முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கக் கூடாதென முஸ்லிம் கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் கூறியதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகாநாயகத் தேரர்களின் சதி வலைக்குள் முஸ்லிம் கட்சிகள் விழுந்துவிடக் கூடாதென்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத்

இன்று இடம்பெற்ற சந்திப்பில் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பௌத்த மகாநாயக தேரர்களின் அழைப்பை ஏற்று ஏனைய உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றால், அது முஸ்லிம் சமூகத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்துமெனவும் கூறப்பட்டுள்ளதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, பௌத்த குருமாரும் மகாநாயக்கத் தேரர்களும் ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து எதிர்ப்பு வெளியிட்டால், தற்போதைய சூழலில் அனைத்து முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களுடன் சேர்ந்து அரசியலில் ஈடுபடும் நிலை ஏற்படலாமென பொதுபல சேனா தேரர் அத்தே ஞானசார மகாநாயக்கத் தேரர்களுக்கு ஆலோசனை கூறியதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழர் தேச அங்கீகாரம், தன்னாட்சி அதிகாரம் என்ற அரசியல் நிலைப்பாட்டை முன்நிறுத்தித் தொடர்ந்து போராடிவரும் ஈழத் தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்கள் மீண்டும் இணைந்து பயணிப்பதை பௌத்த பேரினவாதம் தொடர்ச்சியாகத் தடுத்து வந்துள்ளது

தமிழ் மக்களுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதத்துடன் இல்லாதொழிக்கப்பட்டாலும், அதன் பின்னரான சூழலிலும் ஈழத் தமிழர்கள் தங்கள் தமிழ்த் தேசியக் கோட்பாட்டை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனரென்றும் ஆகவே இலங்கைத் தீவில் வாழும் முஸ்லிம் மக்களை தற்போதைக்கு ஓதுக்க முடியாதெனவும் ஞானசார தேரர் கூறியதாக பொதுபல சேனாத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழர் தேச அங்கீகாரம், தன்னாட்சி அதிகாரம் என்ற அரசியல் நிலைப்பாட்டை முன்நிறுத்தித்தித் தொடர்ந்து போராடிவரும் ஈழத் தமிழ் மக்களோடு முஸ்லிம் மக்கள் மீண்டும் இணைந்து பயணிப்பதை பௌத்த பேரினவாதம் தொடர்ச்சியாகத் தடுத்து வந்துள்ளதுதாக இடதுசாரி முன்னணியின் செயற்பாட்டாளர் ஜனகன் தெரிவித்துள்ளார்.

சலுகை, நிவாரண அரசியலுக்குள் முஸ்லிம் மக்களை மட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கு ஏற்ப, ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரை பௌத்த பேரினவாதம் காலம் காலமாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

அதேவேளை, மகாநாயக்கத் தேரர்களின் அழைப்பை ஏற்று குற்றம் சுமத்தப்படாத ஏனைய முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கக் கூடாதென கொழும்பு மற்றும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய முஸ்லிம் வர்த்தகர்கள், முஸ்லிம் கட்சிகளிடம் கோரியுள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

மகாநாயகத் தேரர்களின் சதி வலைக்குள் விழுந்துவிடக் கூடாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத் முஸ்லிம் கட்சிகளிடம் கேட்டுள்ளார்.

முஸ்லிம்களையும் இலங்கைத் தீவில் இருந்து ஒதுக்குவதே திட்டம். ஆனாலும் தற்போதைக்கு அந்தத் திட்டத்தை ஒட்டுமொத்தமாக முன்னெடுக்கக் கூடாதென ஞானசார தேரர் அத்துரலியே ரத்ன தேரரிடம் கூறியதாகவும் இதனால் இருவருக்குதிடையே மனக் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, அத்துரலியே ரத்ன தேரருக்கு தமது தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்கியிருந்தது.

ஜாதிக ஹெல உறுமயவின் ஸ்தாபக உறுப்பினரான அத்துரலியே ரத்ன தேரர், ஹெல உறுமயவின் மற்றுமொரு ஸ்தாபக உறுப்பினரும் தற்போதைய அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்கவோடு முஸ்லிம்கள் விடயத்தில் முரண்பட்டுக் கட்சியில் இருந்து 2014 ஆம் ஆண்டு வெளியேறியிருந்தார்.

எனினும் அத்துரலியே ரத்ன தேரர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கண்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது சென்று பார்வையிட்டிருந்தார். ஞானசார தேரரும் சென்று பார்வையிட்டிருந்தார்.