உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான இலங்கை நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணையில் வழங்கப்படும்

வாக்கு மூலங்கள் தவறுகளை வெளிப்படுத்துவதாக மைத்திரி சீற்றம்

இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களை தெரிவுக்குழு விசாரிக்க முடியதெனவும் உத்தரவு
பதிப்பு: 2019 ஜூன் 07 22:48
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 11 03:37
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களை, இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் விசாரணைக்கு அனுமதிக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பாக ஆராய்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்துள்ளது. அந்தத் தெரிவுக்குழுவின் இரண்டாம் கட்ட விசாணை நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது. இரண்டு கட்ட விசாணைகளிலும் தற்போது பதவியில் இருக்கும் இலங்கை இராணுவப் புலனாய்வாளர்கள், பாதூகாப்பு உயர் அதிகாரிகள் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் வாக்கு மூலங்களை வழங்கியுள்ளனர். மேலும் பல புலனாய்வாளர்கள் வாக்கு மூலமளிக்கவுள்ளனர்.
 
பதவியில் இருந்து விலகிய இலங்கை ஒற்றையாட்சியின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, கட்டாய விடுமுறையில் மைத்திரிபல சிறிசேனவினால் அனுப்பப்பட்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்திர ஆகியோரும் நேற்று இடம்பெற்ற அமர்வில் வாக்கு மூலங்களை வழங்கியிருந்தனர்.

பதவியில் இருக்கும் பாதுகாப்பு உயர் அதிகாரிகளும், இராணுவப் புலனாய்வு அதிகாரிகளும் தாக்குதல்களைத் தடுக்கத்தவறியது ஜனாதிபதியே என்ற தொனியில் வாக்கு மூலங்களை வழங்கி வருகின்றனர்.

குறிப்பாக, இலங்கை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிசர மென்டிஸ் வழங்கிய வாக்குமூலத்தில் ஹேமசிறி பொணாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோர் மீது குற்றம் சுமத்தவில்லை. தற்கொலைத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கான பொறுப்பை மைத்திரிபால சிறிசேனவே ஏற்க வேண்டும் என்ற கருத்தை மறைமுகமாகக் கூறியிருந்தார்.

ஹேமசிறி பொணாண்டோ, பூஜித ஜயசுந்தர ஆகியோரும் மைத்திரிபால சிறிசேன மீதே மறைமுகமாகக் குற்றம் சுமத்தியிருந்தனர். இந்த நிலையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளை வாக்குமூலம் வழங்க அனுமதிக்க முடியாதென மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதென மைத்திரிபால சிறிசேன ஏலவே கூறியிருந்த நிலையில், தற்போது இராணுவப் புலனாய்வாளர்களையும் வாக்குமூலமளிக்க அனுமதிக்க முடியாடியாதென மைத்திரி தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து தன்னைக் கட்டாய விடுமுறையில் அனுப்பியமை அநீதியான செயல் எனக் குற்றம் சுமத்தி, பூஜித ஜயசுந்தர, இலங்கை உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டு மூன்றாம் நாளே தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்த. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை அமைத்திருந்தார்.

அவ்வாறு ஆணைக்குழு அமைக்கப்பட்டமை கூடக் குற்றவியல் குற்றமான உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விடயங்களை இலங்கை உயர் நீதிமன்றத்தில் விசாரணை செய்வதைத் தடுப்பதற்காகவேயென அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளமை உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் பற்றிய விசாரணைகளைத் திசை திருப்பவேயென்றும், உயர் நீதிமன்றம் விசாரணை செய்வதைத் தடுப்பது மற்றுமொரு நோக்கமெனவும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் குற்றம் சுமத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.