வடமாகாணம் முல்லைத்தீவில்

மைத்திரிக்கு முன்பாக இனப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரிய மக்கள்

இலங்கைப் படையினரால் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மைத்திரிக்கு எதிராகக் கோசம்
பதிப்பு: 2019 ஜூன் 08 20:39
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 08 22:01
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சென்றுலிட்ட நிலையிலும் தமிழ் இனப்படுகொலை குறித்த சர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற விசாரணைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்பதைச் சுட்டிக்காட்டி முல்லைத்தீவில் இன்று சனிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று முல்லைத்தீவுக்கு வந்தபோது எதிர்ப்பு வெளியிட்டு நடத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தின்போதே சர்வதேச நீதிகோரி மக்கள் கோசமெழுப்பினர். போரின் போதும் அதன் பின்னரான சூழலிலும் இலங்கைப் படையினரால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எண்ணூற்றி 24 நாட்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
அந்தப் போராட்டத்திற்குப் பொறுப்புக் கூறுவதை தட்டிக்கழிக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம், அபிவிருத்தியென்ற பெயரில் மக்களின் இயல்பான தமிழ்த்தேசிய எழுச்சியைத் திசைதிருப்புவதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் குற்றம் சுமத்தினர்.

போரின்போது இலங்கை இராணுவத்திடம் கைளிக்கப்பட்ட தமது பிள்ளைகள் எங்கே என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மைத்திரிபால சிறிசேனவிடம் கேள்வி தொடுத்தனர். வீதியால் வாகனத்தில் சென்ற மைத்திரிபால சிறிசேன மக்களின் போராட்டத்தைப் பார்த்துக் கொண்டு சென்றதாகவும் அவர் மக்களைச் சந்திக்கவில்லையென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

இலங்கைப் படையினரும், இலங்கைப் புலனாய்வுப் பிரிவினரும், இலங்கைப் பொலிஸாரும் போராட்டம் நடைபெற்ற இடத்தில் மக்களைச் சுற்றி நின்றனர். சிவில் உடையில் நின்ற இலங்கைப் புலனாய்வாளர்கள் சிலா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைப் படம் எடுத்தாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியிலும் மக்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பதாதைகளையும் கைகளில் ஏந்தி அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதியால் வாகனத்தில் சென்ற மைத்திரிபால சிறிசேனவைப் பார்த்து, தமிழ் இனப் படுகொலைக்கு நீதி எங்கேயெனக் கேட்டதாக ஏற்பாட்டாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.