வடக்கு- கிழக்குத் தாயகப் பிரதேசங்களில்-

விகாரைகள் அமைப்பதை நிறுத்த முடியாது- மனோவிடம் பிக்குமார்

இலங்கைத் தொல் பொருள் திணைக்களம் பௌத்த சமயத்துக்கு மாத்திரம் உரியதல்ல- மனோ
பதிப்பு: 2019 ஜூன் 10 23:07
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 11 03:45
main photo main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
ஈழத் தமிழரின் தாயகமான வடமாகாணம் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த விகாரை அமைக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தொடர்பான கலந்துரையாடல் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் தலைமையில் இன்று திங்கட்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி பௌத்த குருமார் சிலர் செயற்படுகின்றமை தொடர்பாக பிரதேச மக்கள் அமைச்சர் மனோ கணேசனிடம் முறையிட்டுள்ளனர். கலந்துரையாடலுக்கு முன்னர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்ற அமைச்சர் மனோ கணேசன், அங்கு நிலமைகளை அவதானித்தார். மனோ கணேசன் அங்கு சென்றதனால் பிக்குமார் சிலர் விசனம் தெரிவித்தனர்.
 
இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் இலங்கைப் படையினரின் உதவியோடு பௌத்த பிக்குமார் வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் புத்தர் சிலைகளை அமைப்பது பௌத்த விகாரை கட்டுவது போன்ற செயற்பாடுகளில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர்.

பௌத்த பிக்குமாரின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக ஏலவே இலங்கைப் பொலிஸாரிடம் முறையிட்டதாகவும் ஆனாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லையெனவும் பிரதேச மக்கள் மனோ கணேசனிடம் கூறியுள்ளனர்.

இலங்கை நீதிமன்றத் தீர்ப்பை மதித்துச் செயற்படுமாறு மனோ கணேசன் அங்கு நின்ற பௌத்த பிக்குமாரிடம் கூறியுள்ளார். ஆனால் புனிதப் பிரதேசங்களில் விகாரைகள் அமைக்கப்படுவதைத் தடுக்க முடியாதென பிக்குமார் பதிலுக்குக் கூறியுள்ளனர்.

வேறு சில பிக்குமார் சட்டத்திற்கு முரணாக விகாரகள் அமைக்க அனுமதியளிக்கமாட்டோமென மனோ கணேசனிடம் உறுதியுமளித்துள்ளனர்.

அதேவேளை, திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்று விநாயகர் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக விகாரை ஒன்றை அமைத்துள்ளார்.

ஆலயத்துக்குச் செல்லும் மக்களையும் அந்த பௌத்த பிக்கு அச்சுறுத்தி வந்தார். இன்று திங்கட்கிழமை அங்கு சென்ற அமைச்சர் மனோ கணேசன். குறித்த பிக்குவுடன் உரையாடினார்.

குறித்த ஆலய வளாகத்தில் விகாரை இருக்க்வில்லையென பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளதை அமைச்சர் மனோ கணேசன் குறித்த பிக்குவிடம் கூறினார். ஆனால் குறித்த பிக்குவின் சட்டத்தரணிகள் அதனை ஏற்றுகொள்ள மறுத்தனர்.

2013ஆம் ஆண்டு, 80 -166 இலக்க வர்த்தமானியின் மூலம், அந்த இடத்தை கொழும்பில் உள்ள இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் பொறுப்பேற்றது எனவும், அது தொல்பொருள் திணைக்களத்துக்குரிய நிலம் எனவும் பிக்குவின் சட்டத்தரணிகள் மனோ கணேசனுடன் வாதிட்டனர்.

அதனை மறுத்த மனோ கணேசன், இலங்கைத் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களம் தனியே பௌத்த சமயத்தை மாத்திரம் பாதுகாக்கும் திணைக்களம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும் விகாரைகள் அமைக்கப்படுமெனக் குறித்த பிக்குவும் அவரது சிங்களச் சட்டத்தரணிகளும் மனோ கணேசனிடம் தொடர்ந்து வலியுறுத்தினர்.