உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

கலாசாரத்தை இழக்க முடியது- மகாநாயக்கத் தேரர்களிடம் முஸ்லிம்கள்

நீதியான விசாரணை நடத்தப்படும்வரை அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லையெனவும் தெரிவிப்பு
பதிப்பு: 2019 ஜூன் 11 22:30
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 13 00:43
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல. உலகில் இயங்குகின்ற இஸ்லாமிய இயக்கங்களோடு இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்குத் தொடர்புகள் எதுவுமேயில்லையென அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகி முஸ்லிம் அமைச்சர்கள் கண்டி மகாநாயக்கத் தேரர்களிடம் கூறியுள்ளனர். உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற பயங்கரத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக கருதப்பட்டு இலங்கைப் படையினரால் கைதாகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் முஸ்லிம் உறுப்பினர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். கண்டியில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பதவி விலகிய ஒன்பது உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகாநாயக்கத் தேரர்களுக்கு விளக்கமளித்தார். சிங்களப் பேரினவாதிகளினால் குற்றம் சுமத்தப்பட்ட ரிஷரட் பதியுதீனும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு தன்மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவையென்று கூறினார்.

முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தவும் இயலாது. ஆனால் பதவி விலகி பிரிந்து செல்வதால் தீர்வைக் காண முடியாது. இதனால் முஸ்லிம் உறுப்பினர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென மகாநாயக்கத் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்பதை வலியுறுத்திக் கூறிய முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம்களின் கலை கலாச்சாரங்களை எந்தக் காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாதெனவும் இலங்கை முஸ்லிம்களாகவே வாழ விரும்புவதாகவும் மகாநயக்கத் தேரர்களிடம் கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன.

நீதியான விசாரணை நடத்தப்பட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவியளித்த சூத்திரதாரிகள் கைது செய்யப்படும் வரை அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கப் போவதில்லையெனவும் கூட்டாகத் தெரிவித்ததாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகியமை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு இலங்கை ஜனாதிபதியும் இலங்கைப் பிரதமருமே பொறுப்புக் கூறியிருக்க வேண்டுமெனவும் இடதுசரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக ஆராயும் தெரிவுக்குழுவில் வாக்குமூலம் வழங்கிய இலங்கைப் பாதுகாப்பு உயர் அதிகாரிகள், ஜனாதிபதியே இதற்குப் பொறுப்பு என மறைமுகமாகக் கூறுகின்றனர்.

பதவி விலகிய இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிசர மென்டிஸ் தனது வாக்குமூலத்தில், ஜனாதிபதியைக் குற்றம் சுமத்தியிருந்தார். அதனையடுத்தே தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாகவும் சிசர மென்டிஸ் அறிவித்திருந்தார்.

ஸர்க்கான் ஹாசீமின் நடவடிக்கைகள் 2014 ஆம் ஆண்டில் இருந்தே இலங்கை ஆட்சியாளர்கள் பலருக்கும் தெரியுமெனவும் ஆனாலும் அதனைத் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கையெடுக்கத் தவறியதாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.