உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலை-

பூகோள அரசியல் போட்டி- மைத்திரி, ரணில் மோதல் உக்கிரம்

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னரான சூழலில் இந்த நிலை இருந்ததில்லையெனத் தெரிவிப்பு
பதிப்பு: 2019 ஜூன் 13 15:27
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 14 02:59
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே உக்கிர மோதல் இடம்பெறுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நிறுத்த வேண்டுமென மைத்திரி கேட்டுக்கொண்ட போதும், தொடர்ச்சியாக அந்த அமர்வு நடைபெறுகின்றது. அதனால், அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தவிடாமல் மைத்திரிபால சிறிசேன தடுத்ததால், ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக் கூட்ட முடிவுகளை அமைச்சர்களுடன் பேசித் தீர்மானித்து வருகின்றார். இந்த நிலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தை கூடுவதற்கு மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறுகின்றது.
 
முஸ்லிம் அமைச்சர்கள் பதவி விலகியதால் அந்த இடத்திற்குப் பதில் அமைச்சர்களை மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார். எனினும், அந்த நியமனம் இலங்கை ஒறறையாட்சி அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை மீறும் செயலென்று ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஈழத் தமிழரின் ஆயுதப் போரை இல்லாதொழிப்பதற்கான உதவிகள், ஒத்துழைப்புகள். நிதியிடல் போன்றவற்றின் பயனை சிங்கள ஆட்சியாளர்கள் அமெரிக்கா போன்ற மேற்குலகத்திடமும் இந்தியா. ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடம் இருந்தும் பெற்றுக் கொண்டதால், இலங்கைத்தீவு இன்று பூகோள அரசியல் போட்டிகளுக்குள் சிக்குண்டுள்ளது

மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் முரண்படுவது இது முதற்தடவையல்ல. ஆரம்பத்தில் இருந்தே இருவரும் அதிகாரத்துக்காக முரண்படுகின்றனர். இதனாலேயே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனதாக மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் ரொஷான் ரணசிங்க இன்று புதன்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரித்துள்ளார்.

மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்பை மீறுகின்றாரென மூத்த அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவும் குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் விடயத்தில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்க தவிர்ந்த வேறொருவரை வேட்பாளராகக் களமிறக்குவதில் மைத்திரிபால சிறிசேன ஈடுபடுகின்றார். ஐக்கியதேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களோடும் கட்சியோடு நெருக்கமான பிரமுகர்களோடும் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடுகின்றார்.

இதனால் ஆத்திரமடைந்த ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபல சிறிசேனவுடன் ஜனாதிபதித் தேர்தல் குறித்து உரையாட வேண்டாமெனவும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்கப்போதில்லையென்றும், தேர்தலில் தானும் போட்டியிடவில்லையெனவும் மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார். இந்த நிலையில் அவர் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பலர், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை போட்டியிட வேண்டுமென வலியுறுத்தி மகஜர் ஒன்றையும் கடந்தவாரம் கையளித்திருந்தனர்.

ஆனாலும் மகிந்த ராஜபக்ச அணியோடு மோதுப்படுவதைவிடவும் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனிப்பட்ட முறையில், மைத்திரிபால சிறிசேன மோதுவதாக ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை, முன்கூட்டியே இரகசியத் தகவல் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறுத் தற்கொலைத் தாக்குதல்களைத் தடுப்பதற்கு முப்படைகளின் தளபதியென்ற முறையில் மைத்திரிபால சிறிசேன தவறிவிட்டாரென இலங்கை முப்படைகளின் உயர்மட்ட அதிகாரிகள் பலர் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கூறுவதால், அதிருப்தியடைந்துள்ள மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற அமர்வையே ஒத்திவைக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

ஸர்க்கான் ஹாசீமுக்கு உதவிய விடயத்தில், இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச பற்றிய தகவல்களும் வெளி வருவதால், ரணில் விக்கிரமசிங்க மீது கடும் அதிருப்பதியில் இருப்பாகவும் அரசாங்கத்தின் திட்டங்களையே முடக்கும் நிலை காணப்படுவதாகவும் கொழும்பு அரசியல் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இலங்கை ஒற்றையாட்சியின் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டால் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகளை நடத்த முடியாது.

இதேவேளை, பூகோள அரசியல் காரணிகளே மைத்திரி- ரணில் ஆகியோருக்கிடையேயான முரண்பாடுகள், குழப்பங்களை உருவாக்கியுள்ளதாக கொழும் அரசியல்கவல்கள் கூறுகின்றன. அமெரிக்கா போன்ற மேற்குலகமும் இந்தியா. ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடையேயான இலங்கை தொடர்பான ஆதிக்கப் போட்டிகள், அதற்கான தூண்டுதல்களே சிங்கள ஆட்சியாளர்களை முரண்பாட்டுக்குள் தள்ளியுள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

2009 ஆம் ஆண்டு மே மாததிற்கு முன்னரான சூழலில் இவ்வாறான பூகோள அரசியல் காரணிகள் இலங்கையில் தாக்கத்தை உருவாக்கவில்லை. ஆனால் ஈழத் தமிழரின் ஆயுதப் போரை இல்லாதொழிப்பதற்கான உதவிகள், ஒத்துழைப்புகள். நிதியிடல் போன்றவற்றின் பயனை இலங்கை அமெரிக்கா போன்ற மேற்குலகத்திடமும் இந்தியா. ஜப்பான், சீனா ஆகிய நாடுகளிடம் இருந்தும் பெற்றுக் கொண்டதால், இலங்கை இன்று பூகோள அரசியல் போட்டிகளுக்குள் சிக்குண்டுள்ளதாகவே கருதப்படுகின்றது.