இன அழிப்பு போரின் பின்னர் தமிழர்களின் கல்வி நிலை

கிளிநொச்சி மாவட்டத்தில் 332 ஆசிரியர் வெற்றிடங்கள் - வலயக் கல்வி அலுவலகம் தகவல்

வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 829 ஆசிரியர்கள் கிளிநொச்சியில் கடமையாற்றுகின்றனர்
பதிப்பு: 2019 ஜூன் 14 10:46
புலம்: கிளிநொச்சி, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 14 22:00
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Tamils
#Education
#Kilinochchi
#Srilanka
#lka
#Teachers
#Zonaleducationkilinochchi
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு போரின் பின்னர் தமிழர்களது கல்வி மட்டம் அதிகரிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 77 ஆசிரியர்கள் கடமையாற்றிவரும் நிலையில், தற்போது 332 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதாக கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. அதேவேளை 2010 - 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர் நியமனங்கள் தொடர்பாக தம்மிடம் ஆவணங்கள் எவையும் இல்லையென கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி கூர்மை செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகம் வழங்கிய பதிலில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 623 ஆசிரியர்களும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 104 ஆசிரியர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 60 ஆசிரியர்களும், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 42 ஆசிரியர்களுமாக வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 829 ஆசிரியர்கள் கிளிநொச்சியில் கடமையாற்றுகின்றனர்.

இதேவேளை, 2010 - 2018 ஆண்டு வரையான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் வழங்கப்பட்ட புதிய ஆசிரியர் நியமனங்கள் தொடர்பான செய்திகளைக் கோரிய போது, 2010 - 2013 வரையான தகவல்கள் தம்மிடம் இல்லையென கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகம் வழங்கிய பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் 2014 ஆம் ஆண்டு 02 பட்டதாரி ஆசிரியர்களும், 2015 ஆம் ஆண்டு 66 பட்டதாரி ஆசிரியர்களும், 2016 ஆம் ஆண்டு 65 பட்டதாரி ஆசிரியர்களும், 2017 ஆம் ஆண்டு 138 பட்டதாரி ஆசிரியர்களும், 2018 ஆம் ஆண்டு 150 பட்டதாரி ஆசிரியர்களுமாக மொத்தம் 221 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, கிளிநொச்சி மாவட்டத்தில் கடமையாற்றும் தொண்டர் ஆசிரியர் நிமயனங்கள் தொடர்பான தகவல்களைக் கோரியபோது, 2010 - 2016 ஆம் ஆண்டு வரையான தகவல்கள் தம்மிடம் இல்லை என பதில் வழங்கப்பட்டதுடன், 2017 – 2018 வரையான காலப்பகுதியில் 156 ஆசிரியர்கள் கடமையாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 332 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவுவதுடன் கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பிரதேசங்களில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 433 ஆசிரியர்கள் கடமையாற்றுவதுடன், 225 வெளிமாவட்ட ஆசிரியர்கள் கடமையாற்றுவதாக வலயக் கல்வித் திணைக்களம் வழங்கிய புள்ளிவிபர தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.