ஐ.எஸ் தாக்குதலின் பின்னரான சூழலில் தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக

முஸ்லிம் பிரதேசங்களில் பொசன் தோரணங்கள்- இராணுவம் பலவந்தம்

ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பு - பௌத்தர்கள் இல்லாத இடத்தில் எதற்காக என்றும் கேள்வி
பதிப்பு: 2019 ஜூன் 15 23:40
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 17 03:29
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Batticaloa
#Muslims
#Sinhalese
#Posonfestival
#Slarmy
#Srilanka
#lka
தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை பிரதேசங்களில் பௌத்த சிங்களவர்களின் பொசன் பண்டிகைத் தோரணங்களைக் கட்டுவதற்கு இலங்கைப் படையினர் முயற்சித்து வருகின்றனர். ஐ.எஸ் இஸ்லாமியவாதிகள் சாய்ந்தமருது, சம்மாந்துறைப் பிரதேசங்களில் உள்ள சில வீடுகளில் வாடகைக்குத் தங்கியிருந்த நிலையில், குறித்த பிரதேசங்களில் பொசன் பண்டிகைத் தோரணங்களைக் கட்டுவது நல்லிணக்கத்து வழிவகுக்கும் என்றும் அதற்கான அனுமதியை பள்ளிவாசல் நிர்வாகம் வழங்க வேண்டும் எனவும் கல்முனைப் பிரதேசத்தில் உள்ள இராணுவத் தளபதி சமயத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஒவ்வொரு பள்ளிவாசல்களுக்கும் சென்று இலங்கை இராணுவம் அனுமதி கோருவதாக பிரதேச மக்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.
 
ஆனால், பௌத்த மக்கள் இல்லாத வேறு சமயத்தவர்கள் வாழும் பிரதேசங்களில் பொசன் பண்டிகைத் தோரணங்களை இலங்கை இராணுவம் பலவந்தமாகக் கட்டுவது ஆரோக்கியமானதல்ல என்று பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கூறியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சம்மாந்துறையில் முஸ்லிம்களும், சைவத் தமிழ் மக்களும் வசிக்கின்றனர். சாய்ந்தமருது பிரதேசம் நூறுவீதம் முஸ்லிம் மக்களைக் கொண்டது. ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தாக்குதலின் பின்னரான சூழலில் சாய்ந்தமருது கடற்கரையில் இலங்கை இராணுவம் முகாமொன்றை அமைத்துள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் பொசன் பண்டிகைத் தோரணங்களைக் கட்டுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

நல்லிணக்கம் என்பது திணிக்கப்படுகின்ற ஒரு விடயமல்ல. மாற்று சமூகம் தானாக முன்வந்து முன்னெடுப்பதுதான் நல்லிணக்கத்துக்கான சமிக்ஞை. முஸ்லிம்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் பௌத்த சமயத்துக்கான பொசன் பண்டிகைத் தோரணங்கள் கட்டப்பட்டு, அதனை யாராவது சேதப்படுத்தினால் அதன்மூலம் மேலும் பல பிரச்சினைகள் உருவாகும்.

இதன் ஆபத்துகள் பற்றி இலங்கை இராணுவத் தரப்புக்கு எடுத்துக் கூறியுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கல்முனை மேயர் ரஹீப் தலைமையில் மாநகர சபையில் கூட்டமொன்றும் நடைபெற்றது. இதன்போது கல்முனை நகரப் பகுதியில் மாத்திரம் தோரணம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேண்டுமானால், கிழக்கு மாகாணத்தில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையங்களில் பொசன் பண்டிகைத் தோரணங்களைக் கட்ட முடியும் எனவும் கல்முனை மாநகர சபை கூறியுள்ளது.

கல்முனையில் சைவத் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் செறிந்து வாழ்கின்றனர். பத்து சிங்கள பௌத்த குடும்பங்கள் மாத்திரமே அங்கு வசிக்கின்றன. அவர்களுக்கென கல்முனையில் விகாரையொன்றும் உள்ளது.

சம்மாந்துறையில் முஸ்லிம்களுக்கும் வைத் தமிழ் மக்களும் வசிக்கின்றனர். சாய்ந்தமருது பிரதேசம் நூறுவீதம் முஸ்லிம் மக்களைக் கொண்டது. ஐ.எஸ் இஸ்லாமியவாதிகளின் தாக்குதலின் பின்னரான சூழலில் சாய்ந்தமருது கடற்கரையில் இலங்கை இராணுவம் முகாமொன்றை அமைத்துள்ளது.

நாளை ஞாயிற்றுக்கிழமை பௌத்த சிங்கள மக்களின் பொசன் பண்டிகையாகும். இதனை முன்னிட்டு இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்களில் பொசன் பண்டிகைத் தோரணங்கள் கட்டப்படுவதில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற இஸ்லாமியவாதிகளின் தாக்குதலின் பின்னரே முதன்முறையாகப் பொசன் பண்டிகைத் தோரணங்கள் இலங்கை இராணுவத்தால் கட்டப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

வடக்கு கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இலங்கை இராணுவத்தினர் பொசன் பண்டிகைத் தோரணங்களை பலவந்தமாகக் கட்டியுள்ளனர்.