மல்லாகம் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களில் முரண்பாடுகள்- மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர்

நேரில் கண்டவர்களிடமும் உறவினர்களிடமும் சாட்சியங்களை இலங்கைப் பொலிஸார் பதிவு செய்யவில்லை
பதிப்பு: 2018 ஜூன் 19 09:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 19 22:52
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் மல்லாகம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இலங்கைப் பொலிஸார் வாக்கு மூலங்களை சிங்கள மொழியில் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ் மாவட்ட கிளை பணிப்பாளர் கனகராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தமிழ்மொழியில் கூறிய வாக்குமூலங்களுக்கும் சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளை கைதான மூன்று இளைஞர்களும் குற்றவாளிகள் அல்ல என்றும், அவர்கள் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் கையளிப்பதற்காகக் கொண்டு சென்றவர்கள் எனவும் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர்.
 
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட இளைஞனின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை மனித உரிமைகள் ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.

சிங்கள மொழியில் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டமை குறித்து பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றார் இலங்கை அரச கரும மொழிகள் திணைக்களத் தலைவர் பேராசிரியர் சந்திரசேகரன்.

மல்லாகத்திற்கு நேரில் சென்று அவதானித்து தேவையான தகவல்களை பெற்றுள்ளதாக கனகராஜ் கூறினார்.

கைதான இளைஞர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரம் இலங்கைப் இலங்கைப் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதால் அந்த வாக்கு மூலங்களில் பாரிய முரண்பாடுகள் உள்ளன.

இதனால், மனித உரிமைகள் ஆணைக்குழு தமிழ் மொழியில் வாக்குலங்களை பதிவு செய்ய நேரிட்டதாகவும் கூறிய அவர், சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமும் உறவினர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆகவே. சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமும் மற்றும் உறவினர்களிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கனகராஜ் கூறினார்.

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு காரணமான, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸாரும் வெளியே சென்றபோது, துப்பாக்கிகளை எடுத்து சென்றமை குறித்து பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனரா என்பது தொடர்பாகவும் தகவல்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள். விசாரணைகள் பற்றிய நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்து வருவதாகவும் கனகராஜ் மேலும் குறிப்பிட்டார்.

அதேவேளை சிங்கள மொழியில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டமை குறித்து, கொழும்பில் உள்ள இலங்கை அரசகரும மொழிகள் திணைக்களத் தலைவர் பேராசிரியர் எஸ். சந்திரசேகரனிடம் கூர்மை செய்தித் தளம் கேட்டபோது, மல்லாககத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தால் அல்லது மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ் கிளை முறைப்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் சிங்கள மொழியில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டமை இலங்கை அரசியலமைப்புக்கு முரணானது என்றும் பேராசிரியர் சந்தரசேகரம் கூர்மை செய்தித் தளத்திற்க மேலும் குறிப்பிட்டார்.

ஆனால், அரசகரும மொழியாக தமிழ் மொழியை முழுமையாக நடைமுறைப்படுத்த இலங்கை ஒற்றயாட்சி அரசியலமைப்பு இடம்கொடுக்காதென சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய இரு பொலிஸாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளனர்.

சம்பவம் நடைபெற்றபோது வாள்களுடன் நின்ற இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய்வில்லை என்றும், வாள்களுடன் நின்ற இளைஞர்கள் பொலிஸாருடன் சேர்ந்து குற்றச் செல்களில் ஈடுபடுபவர்கள் எனவும் தமது முறைப்பபட்டில் கூறியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணிக்கு மல்லாகம் பிரதேசத்தில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில். மல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்ஸன் என்ற இளைஞன் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.