இலங்கையில் ஏப்பிரல் 21 ஆம் நடத்தப்பட்ட

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணை- மைத்திரி- ரணில் இழுபறி

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாகக் கேள்வி
பதிப்பு: 2019 ஜூன் 21 23:04
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 23 15:47
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்த மூன்று பேர்கொண்ட குழு இதுவரை நாடாளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவில்லையென இலங்கை நாடாளுமன்றப் பிரதி சபாநாயகர்,ஆனந்த குமாரசிறி இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் நிமல் லான்சா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே பிரதி சபாநாயகர் இவ்வாறு கூறினார். ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறுத் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய ஆணைக்குழுவின் அறிக்கை மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையின் பிரதி நாடாளுமன்றத்துக்கு கிடைத்ததா என்று நிமல் லான்சா கேள்வி தொடுத்தார். தாக்குதல் நடத்தப்பட்டு இரண்டு மாதங்கள் சென்றுவிட்ட நிலையில், இதுவரையும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஏன் நாடாளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனவும் அவர் கேட்டார்.

அத்துடன் இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பதற்காக புதிய சட்டங்கள் ஏதுவும் உருவாக்கப்பட்டுள்ளதா எனவும் அவர் பிரதி சபாநாயகரிடம் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதி சபாநாயகர்,ஆனந்த குமாரசிறி, அறிக்கையின் பிரதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையென ஒரே வார்த்தையில் கூறினார்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நியமித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்த விசாரணைகளை நிறுத்துமாறு மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் கேட்டிருந்தார். ஆனால் விசாரணையை நிறுத்த முடியாதென ரணில் விக்கிரமசிங்க கூறியிருந்தார்.

இதன் காரணத்தினாலேயே ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லையென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணை முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

ஆனால் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முடைவடைந்த பின்னரே ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பிரதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.