உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான நிலை- புத்தளம்

வென்னப்புவ பிரசேத்தில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்யத் தடை

சமூகரீதியான ஒடுக்குமறையெனக் கண்டனம்
பதிப்பு: 2019 ஜூன் 25 14:02
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 26 03:23
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து முஸ்லிம் மக்கள் மீதான கெடுபிடிகள், அடக்குமுறைகள் அதிகரித்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை, இலங்கை அரசாங்கம் மறுக்கின்றது. ஆனால் வெவ்வேறு மட்டங்களில் பல்வேறு விதமாக அடக்குமுறைகள் தொடருவதாக முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இந்த நிலையில் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பிரதேச சபைக்கு உட்பட்ட தங்கொடுவ பகுதியில் இயங்கி வரும் வாராந்த சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவித்தல் கடிதம் ஒன்று வென்னப்புவ பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேராவினால் நேற்றுத் திங்கட்கிழமை கையொப்பமிடப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
 
பிரதேசத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தலைவர் சுசந்த பெரேரா கூறியுள்ளார்.

ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமையன்று இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலையடுத்து, முஸ்லிம் மக்கள் பொதுச் சந்தைப் பகுதிக்கு வருவதை ஏனைய வர்த்தகர்கள் விரும்பவில்லையென்றும், எதிர்ப்பு வெளியிட்டதாகவும் பிரதேச சபை தலைவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் வென்னப்புவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தற்காலிகமாகத் தடை விதிப்பதாகவும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கப்படுமென்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் வென்னப்புவ பிரதேச சபை எடுத்த இந்தத் தீர்மானம் சமூகரீதியாக ஒதுக்கும் நடவடிக்கையென ரிஷரட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.

பெரும்பான்மையாக முஸ்லிம் மக்கள் வாழும் புத்தளம் மாவட்டத்தில் உள்ள வென்னப்புவ பிரதேசத்தில் முஸ்லிம்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதெனப் பகிரங்கமாக பிரதேச சபை அறிவித்துள்ளமை கண்டனத்திற்குரியதென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுவரை முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் எவரும் வெளிப்படையாக ஊடகங்களுக்குக் கண்டனங்கள் வெளியிடவில்லை.