2015 ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் மேற்குலகத்தால் உருவாக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் நிலை

இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பை மைத்திரி மீறிவிட்டாரா?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தம் ரத்துச் செய்யப்படும் என்கிறார்
பதிப்பு: 2019 ஜூன் 26 11:20
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 30 16:41
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Goodgovernance
#Maithripalasrisena
#Mahindarajapaksha
#Mediaorganazations
இலங்கை அரசியல் யாப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைவாக முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டுமென இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தி வரும் நிலையில், முதலில் அதிபர் தேர்தலே நடைபெறுமென இலங்கை ஒற்றையாட்சியின் அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். கொழும்பில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைவர்கள், பிரதம செய்தி ஆசிரியர்களுடனான சந்திப்பின்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதிபர் தேர்தலுக்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
மேற்குலக நாடுகளின் அனுசரணையோடு 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உருவாக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கமே 19 ஆவது திருத்தச்சட்டத்தைக் கொண்டு வந்தது.

சென்ற ஒக்டோபர் மாதம் முதல் மகிந்த ராஜபக்சவோடு மீண்டும் உறவைப் புதுப்பித்துள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளதாக சந்திப்பில் கலந்துகொண்ட ஊடக நிறுவனம் ஒன்றின் தலைவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவை ஆட்சியில் இருந்து கவிழ்த்து உருவாக்கப்பட்ட மைத்திரி - ரணில் அரசாங்கம், இலங்கைத்தீவில் புதிய அரசியல் கலாசாரத்தை தோற்றுவிக்குமென கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென நீங்களே கூறுவது நியாயமானதா என்ற தொனிப்பட தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு மைத்திரிபால சிறிசேன உரிய பதில் வழங்கவில்லை.

இலங்கை நிறைவேற்று அதிபரின் அதிகாரங்கள் சிலவற்றைக் குறைத்து, இலங்கை நாடாளுமன்றத்திடம் அந்த அதிகாரங்கள் பகிரப்பட்டமையினால், இலங்கையில் இரண்டு தலைவர்கள் இருப்பது போன்ற எண்ணக் கரு தோன்றுவதாக மைத்திரிபால சிறிசேன விபரித்துள்ளார்.

ஆகவே, இந்தப் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பின்னரான சூழலிலேதான் மைத்திரி - ரணில் மோதல் ஆம்பித்திருக்கலாமென கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

19 ஆவது திருத்தச்சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டுமென மைத்திரிபால சிறிசேன, சென்ற 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையிலும் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலும் மைத்திரிபால சிறிசேன அதனை உறுதிப்படுத்தியுள்ளார். முதலில் அதிபர் தேர்தல் நடைபெறுமெனவும் அதன் பின்னரே நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுமெனவும் மைத்திரிபால சிறிசேன உறுதியாகக் கூறியுள்ளார்.

இதனால், 19 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைவான இலங்கை சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களையே மைத்திரிபால சிறிசேன மீறியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

19 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள 104 ஏ பிரிவின் பிரகாரம் தேர்தல் நடத்துவதற்கான முடிவுகள் பற்றிய இலங்கை சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குரிய அதிகாரங்களை எவரும் கேள்விக்கு உட்படுத்த முடியாதெனக் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் முதலில் மாகாண சபைத் தேர்தல்களே நடத்தப்பட வேண்டுமென சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஏலவே கூறியுமுள்ளார். அது குறித்த கடிதங்களையும் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் அவர் அனுப்பியுமுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அந்தக் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

ஆகவே 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீறி, அதிபர் தேர்தலையே முதலில் நடத்துவேன் என்று மைத்திரிபால சிறிசேன கூறியமை அரசியலமைப்பை மீறும் செயலென சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

18 ஆவது திருத்தச் சட்டத்தின் படி ஒருவர் எத்தனை தடவையும் பதவி வகிக்கலாமெனவும், அதிபருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் அதிகமாகவும் காணப்பட்டிருந்தன.

2014 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச அதிபராகப் பதவி வகித்திருந்தபோது இந்தச் சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது.

இந்தப் 18 ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றியே 19 ஆவது திருத்தச் சட்டம் 2016 ஆம் ஆண்டு மைத்தி்ரி - ரணில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.