வடமாகாணம்

முல்லைத்தீவுச் சாலைக் கடலில் சிங்கள மீனவர்கள் அத்துமீறல்

மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் வடமராட்சிக் கிழக்கு மீனவர்கள் முறைப்பாடு
பதிப்பு: 2019 ஜூன் 26 23:34
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 28 01:45
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலைப் பிரதேசத்தில் சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்கள் சட்டவிரேதமாகத் தங்கியிருந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் தமது மீனவத் தொழில் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் முல்லைத்தீவுச் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். வடமராட்சிக் கிழக்கு சுண்டிக்குளம் கடற்தொழிலாளர்களே இவ்வாறு இன்று புதன்கிழமை முறைப்பாடு செய்துள்ளனர். முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சாலைப் பிரதேசத்தில் தங்கியுள்ள சிங்கள மீனவர்கள் சட்டத்திற்கு முரணாக கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
 
கடலட்டை பிடிப்பதற்கு மாத்திரம் அனுமதியைப் பெற்றுள்ள சிங்களத் தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக ஈடுபடுவதாக தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

குறிப்பாக நாற்பது குதிரைவலுக் கொண்ட இயந்திரங்களைப் பாவித்து இரவு பகலாக முல்லைத்தீவு சாலைக் கடற்பகுதியில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறைவரை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதால், தமது கடல் வளம் அழிக்கப்படுவதாகவும் தமது முறைப்பாட்டில் கூறியுள்ளனர்.

இதனால் முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் வடமராட்சிக்கிழக்கு கடற்தொழிலாளர்கள் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

கடற்தொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரி, பிரதேச செயலாளர், வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசம், முன்னாள் வட. மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவன இயக்குநர் உள்ளிட்டவர்களுக்கும் முறைப்பாட்டின் பிரதிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

சிங்கள மீனவர்களின் அத்துமீறல் செயற்பாடுகள் தடுக்கப்படவில்லையானால் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.