பிரதான சிங்கள அரசியல் கட்சிகளின் அணுகுமுறை

மைத்திரி அதிபர் தெரிவு வேட்பாளர்! மகிந்த தரப்புடன் முரண்பாடு

சர்வதேச ஆதரவுகளையும் தமக்கு ஏற்றவாறு சாதகமாக்க முயற்சி
பதிப்பு: 2019 ஜூன் 27 20:21
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 30 16:12
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சியின் அதிபர் தேர்தல் முதலில் நடைபெறுமென மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள நிலையில், இரண்டாவது தடவையாகவும் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் வேட்பாளராகத் தெரிவு செய்வதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு முடிவு செய்துள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. கட்சியின் மூத்த உறுப்பினர், முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு அடுத்த அதிபர் தெரிவு தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராகக் களமிறக்கும் வேலைத் திட்டங்களில் ஈடுபடவுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
 
மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சு நடத்தி வரும் ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சி, நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் தெரிவு வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது.

இது தொடர்பாக மகிந்த தரப்போடு ஆறு சுற்றுப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் மத்திய குழு, வேட்பாளாராக மைத்திரிபால சிறிசேனவை களமிறக்குவதென தன்னிச்சையாக முடிவு செய்யப்பட்டுள்ளதென கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் அதிகாரபூர்மாக ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

மைத்திரியை, அதிபர் தெரிவு வேட்பாளராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்குமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் தெரிவு வேட்பாளராக நியமிப்பதாகத் தீர்மானிக்கவில்லையென்பதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதுவரை அதிகாரபூர்வமாகக் கூறவில்லை.

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபய ராஜபக்சவை அதிபர் தெரிவு வேட்பாளராக களமிறக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. இதனால் மைத்திரிபால சிறிசேனவை அதிபர் தெரிவு வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டுமென உள்ளக அழுத்தங்கள் கட்சிக்குள் அதிகரித்துள்ளன.

மகிந்த ராஜபக்ச தரப்புடனான பேச்சுக்களில் தன்னை அதிபர் வேட்பாளராக்குவது என்ற அணுகுமுறை தவறினால், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசாவை அதிபர் தெரிவு வேட்பாளராக தெரிவு செய்து, தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்குவதென மைத்திரிபால சிறிசேன தீர்மானித்து வருவதாகவும் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலர் மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்பில் இருப்பதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. சஜித் பிரேமதாசாவும் மைத்திரியோடு தொடர்பில் உள்ளாரென கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக மைத்திரிபால சிறிசேனவுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாட வேண்டாமென ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு ஏலவே உத்தரவிட்டிருந்தார்.

எனவே, இரண்டு வகையான அணுகுமுறைகளை மைத்திரிபால சிறிசேன கையாளுகின்றாரென கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருவதாக சிங்கள ஊடகங்களில் ஏலவே செய்திகள் வெளியாகியிருந்தன.

இதேவேளை, அதிபர் தெரிவு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியுமென்ற நம்பிக்கையுடன் சர்வதேச ஆதரவுகளை தமக்கு ஏற்றவாறு சாதகமாக்கும் முயற்சியிலும் பிரதான சிங்கள அரசியல் கட்சித் தலைவர்கள் ஈடுபடுகின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதியுடன் மைத்திரியின் பதவிக் காலம் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.