சிங்களப் பெண்களுக்குக் கருத்தடை சத்திரசிகிச்சை செய்த குற்றச்சாட்டில் கைதான

வைத்தியர் ஷாபி குற்றம் செய்யவில்லை- நீதிமன்றில் அறிக்கை

ஐநூறு பெண்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் தெரிவிப்பு
பதிப்பு: 2019 ஜூன் 27 23:17
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 30 15:29
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கைது செய்யப்பட்ட குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவு வைத்தியர் சேகு ஷpயாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த கருத்தடைச் சிகிச்சை தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லையென இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவு குருணாகல் நீதவான் நீதிமன்றத்திடம் கூறியுள்ளது. இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளோடு தொடர்புள்ளதாக வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் எந்தவிதமான ஆதரங்களும் இல்லையெனவும் காவல் துறை உயர்மட்டக்குழு நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
 
வைத்தியர் ஷாபிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை இரகசிய காவல் துறை பிரிவின் சமூகக் கொள்ளை தொடர்பான விசாரணைப்பிரிவின் உதவி காவல் துறை அத்தியட்சகர் பி.எஸ்.திசேரா, அந்தப் பிரிவின் பொறுப்பதிகாரி காவல் துறை பரிசோதகர் நிஷாந்த சில்வா, காவல் துறை பரிசோதகர் இலங்கசிங்க உள்ளிட்ட குழுவினர் முன்னெடுக்கும் விசாரணைகளில் பெறப்பட்ட சாட்சியங்களின் சுருக்கம் பீ அறிக்கையாக குருணாகல் பிரதான நீதிவான் சம்பத் காரியவசம் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை இரகசிய காவல் துறை அத்தியட்சர் அசங்க தலைமையில் உதவி காவல் துறை அத்தியட்சர் திசேரா, காவல் துறை சார் பரிசோதகர் இலங்கசிங்க, சாஜன் ராஜபக்ச, ஆகிய காவல் துறையின் உயர்மட்டக்குழு நீதிமன்றத்தில் முன்னிலையாகி இந்த அறிக்கையை சமர்பித்து நீதிவான் சம்பத் காரியவசவிடம் விளக்கமளித்தனர்.

அதேவேளை, தனது வருமானத்தை மீறிச் சொத்து சேர்த்தமை தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதாகவும்; அரச சார்பற்ற நிறுவனமொன்றிடம் நிதி பெற்றமை குறித்து இரண்டு தனியார் வங்கிகளிடம் மேலதிக விசாரணைகளை நடத்த நீதிமன்றத்திடம் அனுமதியும் கோரப்பட்டுள்ளது.

இலங்கைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபி சார்ப்பில் மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்தினின் தலைமையில் சிகாஸ் ஹிஸ்புல்லா, பிரேமரத்ன தென்னகோன், எரங்க குணவர்தன, செனாப் மொஹமட் உள்ளிட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர். எனினும் வைத்தியர் ஷாபி இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படவில்லை.

கருத்தடை சத்திரசிகிச்சையினால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிங்களப் பெண்கள் சார்பில் டெனி பெர்னான்டோ, சானக அபேவிக்கிரம, பிரியங்க டயஸ் நிலூசி ஆகிய சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

சென்ற மே 24 ஆம் வைத்தியர் ஷாபி கைது செய்யப்பட்டிருந்தார். மே மாதம் 23 ஆம் திகதி கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள நாளேடு ஒன்றில் வெளியான செய்தியையடுத்து வைத்தியர் ஷாபி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டிலேயே வைத்தியர் ஷாபி முதலில் கைது செய்யப்பட்டிருந்தார். அதன் பின்னரே கருத்தடை சத்திரசிகிச்சை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

பாதிக்கப்படதாகக் கூறப்படும் சுமார் ஐந்நூறு சிங்களப் பெண்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.