இலங்கைத் தேர்தல் களம்

மகிந்த தரப்பின் புதிய அரசியல் கூட்டணி- மைத்திரி மௌனம்

மொட்டுச் சின்னத்தை மாற்றி வேறு சின்னத்தை தெரிவு செய்யவும் தீர்மானம்
பதிப்பு: 2019 ஜூன் 28 23:37
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 30 14:57
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலா, நாடாளுமன்றத் தேர்தலா நடைபெறுமென எதிர்ப்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், எந்தத் தேர்தல் வந்தாலும் பொதுவான அரசியல் கூட்டணியாக இணைந்து வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதென மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளரென கட்சியின் மத்திய குழு சென்ற புதன்கிழமை இரவு கூடித் தீர்மானித்துள்ள நிலையில், மகிந்த தரப்பு இவ்வாறு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் யாரைக் களமிறக்குவது என்பது உள்ளிட்ட பேச்சுக்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே தொடர்ச்சியாக இடம்பெற்றன.
 
ஆறு சுற்றுப் பேச்சுக்கள் முடிவுற்ற நிலையிலும் தீர்மானங்கள் எதுவுமே எடுக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்திருந்தது.

இந்த நிலையில். எந்தத் தேர்தலிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த புதிய அரசியல் கூட்டணியை அமைத்துச் செயற்படுவதென மகிந்த தரப்பு கூறியுள்ளது. புதிய அரசியல் அணியை இலங்கைத் தேர்தல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வதென்றும் கூறப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இவ்வாறு அறிவித்ததன் மூலம், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து செயற்படுமென பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் பீரிஷ் கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் புதிய அரசியல் கூட்டணியாகச் செயற்படுவதென்ற மகிந்த தரப்பின் அறிவிப்புக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை பதில் எதுவுமே கூறவில்லை.

இதேவேளை மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்ந்து பேசவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறுகின்றது. இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கேட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஏலவே கூறியிருந்தனர்.