உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் குழறுபடி-

மைத்திரிக்கு எதிராகச் செயற்படும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு

ஆனால், இலங்கை ஜனாதிபதியும் அரசாங்கமும் குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக பகிரங்கக் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஜூலை 01 22:47
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 02 11:30
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில். தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை ஜனாதிபதியும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கமும் பாதுகாக்கத் தவறியுள்ளதாக பல்வேறுபட்ட தரப்பினரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவினால் அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு தமது அறிக்கையை கையளித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நியமித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. ஆனால் தெரிவுக்குழு விசாரணைக்கு வருமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் , அந்த விசாரணைக்குச் செல்ல முடியாதெனக் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாதென மறுத்துவிட்டார்.
 
ஆனால், ஜனாதிபதியாக இருந்தாலும் மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலமளிக்க வேண்டுமென அமைச்சர் ராஜித சேனரட்ன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

காவல் துறை அதிபர் பூஜித் ஜயசுந்தரவை கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பி, ஹேமசிறி பெர்னாண்டோவை பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து வலுக்கட்டாயமாகப் பதவி விலக வைத்து, இலங்கை முப்படைகளின் தளபதி என்ற முறையில் தான் விட்ட தவறை மைத்திரிபால சிறிசேன மூடி மறைத்துவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியும் குற்றம் சுமத்தியிருந்தது.

இந்த நிலையில் பூஜித ஜயசுந்தர, ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோரை இலங்கை உயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த, மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான இலங்கைச் சட்டமா அதிபர் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் சந்தேக நபர்களாகப் பெயரிட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்த வேண்டுமென கடந்த 27 ஆம் திகதி சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

ஆனால் அந்த ஆலோசனையை இலங்கைப் பதில் காவல்துறை மா அதிபர் இதுவரை செயற்படுத்தவில்லை. இதனால் சட்டமா அதிபர் திணைக்களம் எழுத்து மூலம் அறிக்கை கோரியுள்ளது.

பூஜித ஜயசுந்தர, ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகியோர் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக ஏலவே மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்திருந்ததாகவும் ஆனால் முப்படைகளின் தளபதி என்ற முறையில் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் சிசர மென்டிஸ் இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகப் பதவி வகித்திருந்தபோது, நாடாளுமன்றத் தெமரிவுக்குழுவுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

அதற்கு அடுத்த நாள் தனது பதவியில் இருந்து சிசர மென்டிஸ் விலகியிருந்தார். இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்க மறுப்புத் தெரிவித்தமைக்கு எதிராக இலங்கை உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு கூறியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன. தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராகவே உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கதல் செய்யவுள்ளதாகவும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர் பேராசிரியர் ஆசுமாரசிங்க கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழு அலரிமாளிகையில் இருந்து செயற்படுத்தப்படும் ஒரு நாடகக் குழு என்று மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியிருந்தார்.

ஆனால் மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக உரிய முறையில் விசாரணை நடத்தாமல் குற்றவாளிகளைப் பாதுகாப்பதாக ஜே.வி.பி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் பகிரங்கமாகவே குற்றம் சுமத்தி வருகின்றன.