தமிழ் பேசும் மக்களின் தாயகம் கிழக்கு மாகாணம் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை

சீருடையணிந்தவர்கள் காரணமாயிருக்கலாம் என உடலகம ஆணைக்குழு 2008 ஆம் ஆண்டிலேயே கருதியது

ஆனால் 2015இல் தான் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது
பதிப்பு: 2019 ஜூலை 04 17:29
புலம்: திருகோணமலை, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 06 15:57
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Trincomalee
#TrincomaleeMassacre
#Students
#Srilankamilitary
#Udalagamacommission
#Paranagamacommission
திருகோணமலைக் கடற்கரைப் பிரதேசத்தில் இலங்கை விசேட அதிரடிப்படையினரால் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு ஆதாரங்கள் இல்லையெனக் குறிப்பிட்டு குற்றவாளிகள் பதின்மூன்று பேரையும் திருகோணமலை பிரதான நீதவான் நீதிமன்றம் நேற்றுப் புதன்கிழமை விடுதலை செய்திருந்தது. ஆனால் இந்த மாணவர்களின் படுகொலை உள்ளிட்ட பதினைந்து விடயங்களை ஆராய்வதற்காக 2006 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட முன்னாள் நீதியரசர் உடலகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், இலங்கை விசேட அதிரடிப்படையினர் இந்தப் படுகொலைகளைச் செய்துள்ளமை குறித்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாட்சியமளித்தவர்களின் பெயர் விபரங்கள் அந்த அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி காண்டீபன் கூர்மைச் செய்தித் தளத்திடம் கூறியுள்ளார்.
 
ஐந்து மாணவர்களும் இலங்கை விசேட அதிரடிப்படையினர் பதின்மூன்று பேரினால் மைதானத்தில் வைத்துச் சுடப்பட்டமை தொடர்பாக இலங்கை காவல்துறை பொறுப்பதிகாரி ஒருவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளார்.

இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் தருஸ்மனும் இந்தக் குழுவில் உள்ளடங்கியிருந்தார். தருஸ்மன் என்ற முன்னாள் சட்டமா அதிபரே 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நியமித்த நிபுணர் குழுவின் தலைவராகவும் செயற்பட்டார்

சம்பவத்தை கேள்வியுற்று இரவு எட்டு மணி பத்து நிமிடமளவில் அங்கு சென்றபோது மாணவர்களின் உடல்களைத் தான் கண்டதாகவும் விசேட அதிரப்படையினர் 13 பேர் அங்கு நின்றதாகவும் காவல்துறை பொறுப்பதிகாரி யவாகிர் (Zavahir) வழங்கிய சாட்சியத்தில் கூறியுள்ளார்.

அத்துடன் இலங்கை காவல்துறை சார் பரிசோதகர் வாஸ் பெரேராவும் பதின்மூன்று விசேட அதிரடிப்படையினருடன் நின்றதாகவும் யவாகிர் சாட்சியமளிக்கையில் கூறியிருந்தார்.

அதேவேளை, இலங்கைப்படை அதிகாரிகள் உள்ளிட்ட முப்பதிற்கும் அதிகமானவர்கள், உடலகம ஆணைக்குழு முன்னிலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்து சாட்சியமளித்துள்ளனர்.

இந்த விபரங்கள் அனைத்தும் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கை விசேட அதிரடிப்படையினர் இந்தப் படுகொலைகளைச் செய்தமைக்கான போதிய ஆதாரங்கள் இல்லையெனக் கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

எனவே, உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டிய காண்டீபன், இலங்கை விசேட அதிரடிப்படையினர் இந்தப் படுகொலையுடன் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவருவதாகவும் கூறினார்.

ஆனால் அவர்களின் ஆலோசனைகள் தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டதால், 2008 ஆம் ஆண்டு சித்திரை மாதம் உடலகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதில் இருந்து பகவதி தலைமையிலான பதினொரு பிரதிநிதிகளும் வெளியேறினர்

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது, ஐந்து மாணவர்கள் படுகொலை உள்ளிட்ட பதினைந்து விடயங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இலங்கை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் உடலகம தலைமையில் ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைத்ததாக 2006 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் மூன்றாம் திகதி மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க கையொப்பமிட்ட ஆணைப்பத்திரம் ஒன்றில் வெளியிடப்பட்டிருந்தது.

இதன்படி அந்த உடலகம ஆணைக்குழு 2007 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் செயற்பட ஆரம்பித்தது. அப்போது சர்வதேசத் தரத்தில் ஆணைக்குழுவின் விசாரணைகள் அமைய வேண்டுமென சர்வதேச அமைப்புகள் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்திருந்தன.

இதனால் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமைப் பிரதம நீதியரசர் பகவதி தலைமையில் பதினொரு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்த உடலகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் அவர்களின் ஆலோசனைகள் தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டதால், 2008 ஆம் ஆண்டு சித்திரை மாதம் உடலகம ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதில் இருந்து பகவதி தலைமையிலான பதினொரு பிரதிநிதிகளும் வெளியேறினர்.

வெளிநாட்டுப் பிரதிநிதி்கள் இல்லாத நிலையில் உடலகம ஆணைக்குழு தமது விசாரணைகளை நீதியாக நடத்தாதென்று தமிழ் அரசியல் பிரதிநிதிகள் இலங்கை நாடாளுமன்றத்தில் அப்போது குற்றம் சுமத்தியிருந்தனர்.

எனினும் உடலகம ஆணைக்குழு தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்தது. இந்த ஆணைக்குழு 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது அறிக்கையை கையளித்தது. ஐப்பசி மாதம் 20 ஆம் திகதி இந்த அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

அவுஸ்திரேலியா, இந்தோனேசிய, ஜப்பான், பிரித்தானியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முன்னாள் நீதியரசர்கள், சட்டத்துறை நிபுணர்கள் உடலகம ஆணைக்குழுவுக்கு ஆலாசனை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்தோனேசியாவின் முன்னாள் சட்டமா அதிபர் தருஸ்மனும் இந்தக் குழுவில் உள்ளடங்கியிருந்தார். தருஸ்மன் என்ற முன்னாள் சட்டமா அதிபரே 2010 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நியமித்த நிபுணர்குழுவின் தலைவராகவும் செயற்பட்டார்.

ஈழத் தமிழர்களின் அரசியல் போராட்டம் உள்ளிட்ட, 2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம் இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள், தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக அப்போதைய ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் தருஸ்மன் தலைமையில் நிபுணர் குழுவை நியமித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.