உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை

சுகவீனமுற்ற மகனைப் பார்வையிடச் சென்றவர் மீதே துப்பாக்கிச் சூடு

பாடசாலைகளுக்கு முன்பாக இலங்கை இராணுவத்தைக் காவலுக்கு நிறுத்த வேண்டாமெனக் கோரிக்கை
பதிப்பு: 2019 ஜூலை 05 10:19
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 05 20:09
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Srilanka
#Galle
#Gunfire
#School
#Srilankamilitary
#Eastersundayattack
#lka
இலங்கையின் தென் மாகாணம் - காலி அக்மீமன உபானந்த வித்தியாலயத்திற்கு முன்பாக காவலுக்கு நின்ற இலங்கை இராணுவச் சிப்பாய் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர், அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனின் தந்தையெனக் காலி காவல்துறையினர் தெரிவித்தனர். மகன் சுகவீனமுற்றிருப்பதாகப் பாடசாலை அதிபரால் குறித்த நபருக்குத் தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் மகனைப் பார்வையிடச் சென்றபோதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். பாடசாலை வாசலில் நின்ற இலங்கை இராணுவச் சிப்பாய் குறித்த நபரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் வாக்குவாதப்பட்ட நிலையில் குறித்த நபர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டுள்ளார்.
 
இதனால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டிருக்கலாமென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டனர்.

நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த 39 வயதுடைய குறித்த நபர், காலி - கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டை நடத்திய இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மகன் சுகவீனமுற்றிருப்பதாகப் பாடசாலையில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஒன்றை அடுத்து மகனைப் பார்ப்பதற்காகத் தந்தை பாடசாலைக்கு வந்துள்ளார்.

ஆனால் காவலுக்கு நின்ற இராணுவச் சிப்பாய் அவரை உள்ளே செல்லவிடாது தடுத்து நிறுத்தி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக உறவினர்களும் காவல்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவத்தை அடுத்து பாடசாலைகளுக்கு முன்பாக இலங்கை இராணுவத்தைக் காவல் கடமைக்கு நிறுத்த வேண்டாமென பாடசாலை அபிவிருத்திச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை அடுத்து இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு முன்பாகவும் இலங்கை இராணுவம் காவல் கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.