தமிழர் தாயகம் வட மாகாணத்தல் நிலவுரிமையை நிலைநாட்டி

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் விழா

பௌத்த மயமாக்கலுக்கு எதிராக ஒன்று கூடிய மக்கள்
பதிப்பு: 2019 ஜூலை 06 22:54
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 07 14:27
main photo main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை முற்று முழுதாக பௌத்த மயமாக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் திட்டத்திற்கு மத்தியிலும், குறித்த ஆலயத்தில் ஈழத்தமிழர்களின் நிலவுரிமையை நிலைநாட்டும் நோக்கில் மாபெரும் பொங்கல் விழா நடைபெற்றுள்ளது. நூற்றியெட்டுப் பானைகளில் பொங்கல் பொங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. திருகோணமலை தென்கையிலை ஆதின சுவாமி தவத்திரு அகத்தியர் அடிகளார், யாழ் சிதகாசனந்தக் குருக்கள், உள்ளிட்ட சைவ சமயப் பெரியார்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக நிகழ்வில் பங்குபற்றிய ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
 
இலங்கை காவல் துறையினர் ஆலயத்தைச் சுற்றிக் குவிக்கப்பட்டிருந்தபோதும், மக்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். வடக்கு- கிழக்கு தமிழர் தாயக பகுதிகளில் இருந்து விசேட பேருந்துகளில் முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குப் பொதுமக்கள் வருகை தந்தனர்.

சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பொங்கல் நிகழ்வுகளிலும் கலந்துகொண்டனர். ஆலய வளாகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் பாரம்பரியக் காணிக்குள் இலங்கை இராணுவத்தின் உதவியோடு பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டு வருகின்றது.

இன்று இடம்பெற்ற நிகழ்வின்போது அந்த விகாரைக்குள் பௌத்த பிக்கு ஒருவர் இலங்கை காவல் துறையினரின் உதவியோடு இருந்துள்ளார். எனினும் குழப்பங்கள் எதுவும் இடம்பெறவில்லை. புதிதாகக் கட்டப்பட்டு வரும் விகாரை இடிக்கப்பட வேண்டுமெனவும். விகாரை கட்டப்படும் நிலம் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்குரியது என்றும் பிரதேச மக்கள் கூறி வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதத்திற்குப் பின்னரான சூழலில், வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன.

இதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் கொழும்பில் உள்ள சிங்கள உயர் அதிகாரிகளும் குறிப்பாக இலங்கை தொல்பொருள் ஆராய்சித் திணைக்களமும் பௌத்த விகாரைகளை அமைப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளன.

ஆயிரம் விகாரைகளை அமைக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சித தேர்தல் விஞ்ஞாபனத்தில கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.