கண்டி மாநாட்டில்

இலங்கை சிங்கள இராச்சியம் - பிக்குகள் மீண்டும் அறிவிப்பு

தமிழர்கள் கோபிக்கக் கூடாதென்கிறார் ஞானசார தேரர்- ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றம்
பதிப்பு: 2019 ஜூலை 07 22:50
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 08 01:49
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையை சிங்கள இராச்சியமாக்குவதற்கு பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென கண்டியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த பிக்குகளின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுபல சேனவின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், சிங்கள இராச்சியத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கை சிங்களவர்களின் நாடு தமிழ் மக்கள் கோபிக்கக்கூடாது என்று இந்த மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய பொதுபல சேனவின் பொதுச் செயலாளர் அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார். சிங்களவர்கள் கள்ளத் தோணியில் வந்தவர்கள் அல்ல. சிங்கள மக்களே இந்த இலங்கையின் சொந்தக்காரர்கள் என்று ஞானாசார தேரர் சூழுரைத்தார்.
 
இலங்கையில் உள்ள இஸ்லாமியத் தனிச் சட்டங்கள் உடனடியாகவே நீக்கப்பட வேண்டுமெனவும் ஞானசார தேரர் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்துக்கு உத்தரவிட்டார்.

இஸ்லாமியச் சட்டங்கள் இலங்கைத் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றும் அடிப்படைவாதங்களைப் போதிக்கும் சகல கல்வி நிலையங்களும் தாமதமின்றி தடைச்செய்ய வேண்டுமெனவும் ஞானசார தேரர் பரிந்துரை செய்துள்ளார்.

இந்தப் பரிந்துரைகள் அனைத்தும் பௌத்த பீடாதிபதிகளோடு கலந்துரையாடி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் எனவும் ஞானசார தேரர் அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் கூறினார்.

சிங்கள இராச்சியம் உருவாக்க பாரிய மாற்றங்கள் செய்யப்பட வேண்டும், ஒரு நாடு, ஒரு இனம், ஒரே நீதி, பௌத்த மத பாதுகாப்பு மற்றும் எழுச்சி பெறல், இலங்கைத் தேசிய பாதுகாப்பு, தேசிய உரிமை பாதுகாப்பு, இலங்கையின் நிலையான பொருளாதாரம்,, தேசபற்றைக் கொண்ட கல்வி முறை, .வீடமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், சனத்தொகை மதிப்பீட்டு முகாமைத்துவம், மற்றும் சுகாதாரம் ஆகிய ஒன்பது தீர்மானங்கள் இந்த மாநாட்டில் வாசிக்கப்பட்டன.

சிங்கள மக்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைக்க வேண்டுமெனவும் இலங்கை நாடாளுமன்றத்தில் சிங்களவர்கள் கோலோச்சும் நிலையை ஏற்படுத்தி, சிங்களவர்கள் முதுகெலும்புடன் இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமெனவும் ஞானசார தேரர் ஒன்பது பாிந்துரைகளையும் வாசித்த பின்னர் உரையாற்றும் போது தெரிவித்தார்.

இதேவேளை, பௌத்த பிக்குகளின் மேலாதிக்கம் இலங்கையில் வலுவடைந்து வருகின்றது என்பதன் அடிப்படையிலேயே அமெரிக்கத் தூதுவர் அலெய்னா இலங்கையுடன் செய்யவுள்ள சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக, கண்டிக்குச் சென்று மகாநாயக்கத் தேரர்களைச் சந்தித்திருந்தார்.

இலங்கையின் ஒற்றையாட்சித் தன்மைக்கும் இலங்கையின் இறைமைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் ஒப்பந்தம் அமைந்துள்ளதாகவும் அமெரிக்கத் தூதுவர் மகாநாயக்கத் தேரர்களிடம் கூறியிருந்தார்.

கண்டியில் இன்று இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை ஒற்றையாட்சியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கை காவல் துறை மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தார்.