தமிழ் பேசும் தாயகம் வடக்கு- கிழக்கில்-

கடும் வறட்சி- பூநகரி, வாகரைப் பிரதேசங்களில் கூடுதல் பாதிப்பு

சுத்தமான குடிநீருக்குத் தட்டுப்பாடு, கால்நடைகள் உயிரிழப்பு-
பதிப்பு: 2019 ஜூலை 08 14:11
புதுப்பிப்பு: ஜூலை 09 02:24
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் கடும் வறட்சி நிலவுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் முறையிட்டுள்ளனர். கிளிநொச்சி. பூநகரி, மட்டக்களப்பு வாகரைப் பிரதேசங்களில் கடும் வறட்சி நிலவுவதாகக் கூறப்படுகின்றது. கிளிநொச்சி பூநகரிப்பிரதேசத்தில் வறட்சியினால் 3326 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களில் 491 விவசாயக் குடும்பங்கள் இருப்பதாகவும் பூநகரிப் பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார். கடும் வறட்சி காரணமாக குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். வடமாகாணத்தில் பூநகரி பிரதேசமே வறட்சியினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசம் எனவும் அவர் கூறியுள்ளார். நிவாரணங்களை வழங்க நிதியில்லை எனவும் அவர் கூறினார்.
 
அதேவேளை, பதுளை, மாத்தளை, நுவரெலியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் தொடரும் வறட்சியின் காரணமாக காட்டுத் தீ ஏற்படும் அபாயமும் நிலவுவதாக இலங்கை அனர்த்த மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் கடும் வறட்சியினால் கால்நடைகள் உயிரிழப்பதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் கதிரவெளி கிராமத்தில் மானா குளம் புனரமைப்பு இல்லாமல் குளத்தில் நீர் வற்றியுள்ளது.

இதனால் கால்நடைகள் குடிப்பதற்கு நீர் இல்லாமல் உயிரிழப்பதாக பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர். கால் நடைகளை நம்பி வாழும் பண்ணையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதிகளவு நீர் தேங்கி நிற்கக் கூடிய முறையில் மானா குளத்தைப் புனரமைப்பு செய்து தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேவேளை, இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பநிலையினால் வடக்கு- கிழக்கு உள்ளிட்ட பதினேழு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.