இலங்கையின் தலைநகர் கொழும்பில், ஐந்து தமிழ்

மாணவர்கள் கடத்தல்- படைத்தளபதிகளிடம் விசாரணை தாமதம்

விசாரணைகளில் நம்பிக்கையில்லையென உறவினர்கள் கூறுகின்றனர்
பதிப்பு: 2019 ஜூலை 09 11:27
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 09 17:30
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையின் தலைநகர் கொழும்பு தெகிவளை, கொட்டாஞ்சேனைப் பிரதேசங்களில் இருந்து ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொருபேரை திருகோணமலைக்குக் கடத்திச் சென்று, பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடத்த வேண்டுமெனக் கோரி, இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இலங்கைக் குற்றத் தடுப்புப் பிரிவின் அப்போதைய பணிப்பாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அனுர சேனநாயக்கா உண்மைகளை மூடி மறைத்த குற்றச்சாட்டின் பின்னணியில் சட்டத்தரணி சவேந்திர பெர்ணாண்டோ செயற்பட்டுள்ளதாகவும் அவர் மீது விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
 
இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட, விசாரணைகளின் போது வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில் குறித்த சட்டத்தரணியிடம் விசாரணை நடத்த வேண்டுமெனவும் அது குறித்து சட்டத்தரணிக்கு அறிவித்துள்ளதாகவும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் கூறியுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் கடற்படை கட்டளைத் தளபதி ஓய்வுபெற்ற ரியர் அட்மிரால் துஷித் வீரசேகர, ரியர் அட்மிரல் ஆனந்த குருகே, கொமாண்டர் பண்டார, கொமாண்டர் சேனக ஹங்வெல்ல, கொமாண்டர் ஜே.ஜே. ரணசிங்க ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த அறிக்கையை தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சமூகக் கொள்ளை தொடர்பான விசாரணைப் பொறுப்பதிகாரி காவல் துறை சார் பரிசோதகர் நிசந்த சில்வாவின் கையொப்பத்துடன் இந்த அறிக்கை நேற்றுத் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரும் கட்டத்தப்பட்டமை தொடர்பாக வசந்த கரண்ணாகொட அறிந்திருந்தார் என்றும் ஆனால் உண்மைகளை அவர் வெளிப்படுத்தத் தவறியுள்ளதாகவும் இலங்கைக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏலவே கூறியிருந்தது. நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அது மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விசாரணைகளில் நம்பிக்கையில்லையெனவும், இலங்கைப் படைத் தரப்புக்கு நேரடியாகத் தொடர்புகள் இருப்பதாகத் தெரிந்துள்ள நிலையிலும் விசாரணைகள் இழுத்தடிக்கப்படுவதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.

இந்த விசாரணைகள் வேண்டுமென்றே இலங்கைப் படையினரால் தாமதிக்கப்படுவதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

திருகோணமலை கடற்பரப்பில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து மாணவா்கள் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடா்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை விசேட அதிரடிப்படையினர் பதின்மூன்றுபேரும் நீதிமன்றத்தினால் கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.