வடமாகாணம்

மன்னாரில் முஸ்லிம்களின் வீட்டுத் திட்டத்தில் தலையிடும் இலங்கை இராணுவம்

பயனாளிகள் மிரட்டப்படுவதாகவும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே மோதலைத் தூண்டுவதாகவும் குற்றச்சாட்டு
பதிப்பு: 2019 ஜூலை 10 09:36
புலம்: மன்னார், ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 11 02:23
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
மன்னார் மாவட்டத்தில் கடந்த கால யுத்த நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய தமிழ்பேசும் மக்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளில் இலங்கை ராணுவம் தலையிடுவதாக முறையிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு, முசலி மற்றும் மடு பிரதேச செயலகப் பிரிவுகளில் இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, புனர்வாழ்வு மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் சர்வதேச தன்னார்வ அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இடம்பெயர்ந்தவர்களுக்கான புதிய வீட்டுத்திட்டத்திலேயே இலங்கை இராணுவம் தலையிட்டு பல்வேறு குளறுபடிகளை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கூளாங்குளம் கிராமசேவையாளர் பகுதியில் உள்ள குனைஷ் நகர் பகுதியில் இடம்பெயர்ந்து மீள் குடியேறிய மக்களுக்கு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் புதிய வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வீட்டுத்திட்டத்திற்கு தெரிவான பயனாளிகள் தமது காணிகளை குறித்த நிர்மாணப் பணிகளுக்குத் தயார்படுத்தியபோது அப்பகுதிக்கு வந்த இராணுவச் சிப்பாய்கள் சிலர் பயனாளிகளை மிரட்டியதுடன் அவர்களின் பணிகளை தடுத்தி நிறுத்தியுள்ளனர்.

மேலும் ராணுவத்தினரின் அனுமதியின்றி எவ்வித வீட்டுத்திட்ட நிர்மாணப் பணிகளையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க வேண்டாமென தாம் ராணுவ உயர்மட்டத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கமைவாகவே வீட்டுத்திட்டப் பணிகளை தாம் இடைநிறுத்துவதாகவும் குறித்த இராணுவச் சிப்பாய்கள் வீட்டுத்திட்ட பயனாளிகளிடம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகளுக்கும், பிரதேச செயலக உயர் அதிகாரிகளுக்கும் இவ்விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வீட்டுத்திட்ட பயனாளிகள் முறையிட்டுள்ளனர்.

அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக குறித்த வீட்டுத்திட்ட விவகாரத்தில் இலங்கை ராணுவத்தின் மன்னார் மாவட்ட கட்டளை தளபதியே தமது அனுமதியின்றி எவ்வித வீட்டுத்திட்டத்தினையும் கூளாங்குளம் குனைஷ் நகர் பகுதியில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்தப் பகுதியில் சுமார் 150க்கு அதிகமான புதிய வீடுகளை யூஅன் ஹபிட்டட் ஏலவே நிர்மாணித்து கொடுத்தும் உரிமையாளர்கள் அவ்வீடுகளில் வசிக்காத நிலையில் குறித்த வீடுகள் நீண்டகாலமாக கைவிடப்பட்டநிலையில் காணப்படுகின்றன.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இதுவரை ஆயிரக்கணக்கான வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் முஸ்லீம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீடுகளில் பெரும்பாலானவை பயனாளிகளினால் பயன்படுத்தப்படாமல் வெறுமனே மூடப்பட்டுள்ளன.

மீண்டும் மீண்டும் ஒரே சாராருக்கே இலங்கை அரசாங்கமும், சர்வதேச தன்னார்வு அமைப்புகளினாலும் வீடுகள் வழங்கப்படுகின்றன. ஆனால் யுத்தத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் அரசியல் காரணங்களுக்காக வீட்டுத்திட்ட தெரிவுகளில் புறக்கணிக்கப்படுவதாகக் கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே புதிய வீடுகளை நிர்மாணிப்பது தொடர்பாக தாம் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் தடுத்து நிறுத்த முற்பட்டதாகவும் இலங்கை இராணுவ அதிகாரிகள் சிவில் அதிகாரியிடம் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம் மக்களுக்காக அரபு நாடுகளினாலும் சர்வதேச தொண்டு நிறுவனங்களினாலும் கட்டிக் கொடுக்கப்பட்ட பல வீடுகளும் பாவனையின்றி மூடிக் கிடக்கின்றன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் பாதுகாப்புப் பிரச்சினையுள்ளதால் அவ்வாறு பயன்படுத்தப்படாமல் உள்ள வீடுகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை இராணுவம் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வாறான செயற்பாடுகள் மூலம் குறித்த பிரதேசங்களில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களை இலங்கை இராணுவம் முரண்பட வைப்பதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

சிவில் அதிகாாிகளின் கடமைகளில் இலங்கை இராணுவம் தலையிடுவதை ஏற்க முடியாதெனவும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.