உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நிலை-

ரிசாட் பதியுதீனுக்கு மீண்டும் அமைச்சுப் பதவி வழங்க எதிர்ப்பு

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் ரணிலுக்கு அழுத்தம்
பதிப்பு: 2019 ஜூலை 13 23:55
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 14 02:41
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் கண்டி மகாநாயக்கத் தேரர்கள். பௌத்த குருமார் ஆகியோரின் கடும் அழுத்தங்கள் காரணமாக தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகிய முஸ்லிம் உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கவுள்ளனர். ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிசாட் பதியுதீன் மீண்டும் அமைச்சராகப் பதவியேற்க அனுமதிக்கக் கூடாதென்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கோரியுள்ளனர். இலங்கை நாடாளுமன்றத்தில் அரசாங்கத் தரப்பின் பின்வரிசை ஆசனங்களில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் ரிசாட் பதியுதீனுக்கு எதிராக கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
 
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் சம்மதத்தோடு மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறியிருந்தது.

ரிசாட் பதியுதீனும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்பாரென்றும் காங்கிரஸ் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இன்று சனிக்கிழமை எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

ரிசாட் பதியுதீனுக்கு அமைச்சுப் பதவியை வழங்கக் கூடாதென ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டாகக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேவேளை, ரிசாட் பதியுதீன் மீது உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக குற்றங்கள் எதுவுமே நிரூபிக்கப்படவில்லையென்று இலங்கைப் பொலிஸ் திணைக்களம் கூறியிருந்தது.

கொழும்பு நீதிமன்றத்திலும் இலங்கைக் குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுடன் ரிசாட் பதியுதீனுக்குத் தொடர்புகள் இல்லையென இலங்கை காவல் துறை திணைக்களம் தெரிவித்துள்ளது.