இலங்கை-

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பை மைத்திரி வெளியிட வேண்டும்!

இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு தகவல்
பதிப்பு: 2019 ஜூலை 15 09:54
புலம்: வவுனியா, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 15 22:47
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பில் 2016 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படுவதை மேலும் தாமதிக்க முடியாதென இலங்கை சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு ஏலவே தெரிவித்திருந்தது. ஆனாலும் அது பற்றிய அறிவிப்புகள் எதுவும் இல்லாத நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈடுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் இன்னமும் ஒன்றரை மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும் என்றும், இல்லையேல் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவே வெளியிடுமெனவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
 
ஏதிர்வரும் நவம்பர் பதினைந்தாம் திகதி அல்லது டிசம்பர் ஒன்பதாம் திகதிக்கிடையில் தேர்தல் பற்றிய அறிவிப்பை மைத்திரிபால சிறிசேன வெளியிட வேண்டும். தவறினால் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய அறிவிப்பை வெளியிடும் உரிமை இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உண்டு என்றும் ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன.

மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒன்பதாம் திகதியோடு முடிவடைகின்றது. நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவிக்கும் உரிமை ஜனாதிபதிக்கு உண்டு.

ஆனால் மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதை தாமதிக்கின்றார் என்றும் இன்னமும் ஒன்றரை மாதத்திற்குப் பின்னர் அதற்கு அனுமதிக்க முடியாதெனவும் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

தனது பதவிக்காலம் எப்போது முடிவடையும் என்பது குறித்து இலங்கை உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன தனக்கு நெருக்கமான மூத்த அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் விளக்கம் கோரவேண்டிய அவசியம் இல்லையென்றும் 19 ஆவது திருத்தச் சட்டத்தில் தெளிவான பொருள்கோடல் இருப்பதாகவும் எனினும் இலங்கை உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் கோருவதற்கான உரிமை ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் இலங்கைச் சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, இந்த ஆண்டின் இறுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லையானால் இலங்கை நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து நிறைவேற்றிய பின்னரே மாகாண சபைத் தேர்தல்களை நடத்த முடியுமென இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கைச் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய மைத்தரிபால சிறிசேனவுக்கு ஏலவே கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.