தமிழர் தாயகத்தில்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாயார் முல்லைத்தீவில் உயிரிழப்பு

முல்லைத்தீவில் 869 ஆவது நாளாக இன்றும் போராட்டம்
பதிப்பு: 2019 ஜூலை 24 23:24
புலம்: முல்லைத்தீவு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 26 04:00
main photo main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#tamil
#mullaitivu
#lka
#ompsl
#slnavy
#enforceddisappearances
இலங்கையில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற போர் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், போரின் இறுதி நாட்களில் அரச படையினரிடம் சரணடைந்த ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படாத நிலையில் இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டுள்ள தனது மகனைத் தேடி அலைந்த மற்றுமொரு தாயார் உயிரிழந்துள்ளார். கடந்த 1 வருடத்துக்கும் மேலாக முன்னெடுக்கப்பட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் போராட்டத்தில் பங்கேற்று வந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலையைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்பவரே மாரடைப்புக் காணமாக இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
 
சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் உட்பட பல வழிகளிலும் உறவுகளைத் தேடிப் போராட்டம் நடத்திவரும் வயதான பெற்றோர் பலர் எவ்வித முடிவுமின்றி உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆடி மாதம் 1 ஆம் திகதி மன்னாரில் வைத்து இலங்கைக் கடற்படையினரிடம் கையளித்துக் காணாமல் ஆக்கப்பட்டுள்ள செபமாலைமுத்து ஜெயபிரகாஸ் என்ற மகனைத் தேடி அலைந்த தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழர் தாயகப் பிரதேசங்களான வடக்கு கிழக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியை முன்வைத்து கடந்த 1 வருடத்துக்கும் மேலாக கண்டனப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று 869 ஆவது நாளாக போராட்டம் இடம்பெறுகின்றது.

இலங்கை இராணுவத்திடம் நேரடியாக கையளிக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட தமது உறவுகளை மீட்டுத்தருமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்ற போதிலும் குறித்த போராட்டத்திற்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படாத நிலையில் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதையாவது தெரிவிக்குமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் இதற்கு இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கம் எந்தவித பதிலையும் வழங்கவில்லை.

விடுதலைப் புலிகளால் ஆயுதப் போராட்டம் உயிர்ப்புடன் முன்னெடுக்கப்பட்ட மூன்று தசாப்த காலத்தின் போதும் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் போராட்டம் மிலேச்சத்தனமாக முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னதான மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்திலும் இலங்கை இராணுவத்தின் உத்தரவுக்கு அமைய இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் பலவந்தமாக பலர் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர்.

என்றாலும் உண்மையிலேயே எத்தனை பேர் காணாமல்போகச் செய்யப்பட்டனர் என்பது இன்னமும் விவாதத்திற்கு உரியதாகவே இருந்துவருகின்றது. இந்த நிலையில் அரசாங்கத்திடம் கையளித்த தமது உறவுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாக உறவுகள் குற்றம்சாட்டுகின்றனர்.

எது எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளைப் போன்று இலங்கை ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியும், கானல் நீராகிப் போயுள்ள நிலையில், காணாமற் போனோர் தொடர்பிலான விடயங்களை ஆராயும் அலுவலகத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். ஆகவே காணாமற்போனோர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுக்கொடுக்கப்போவது யார்? என்ற கேள்வி பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.