இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்றத்தில் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரம் குறித்து

சம்பந்தன் உரையாற்றியபோது எவருமே சபையில் இருக்கவில்லை

மைத்திரி - ரணில் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லையெனக் கூட்டமைப்பு ஆதங்கம்
பதிப்பு: 2019 ஜூலை 25 23:27
புலம்: மட்டக்களப்பு, ஈழம்
புதுப்பிப்பு: ஜூலை 26 10:09
main photo
pencil icon
நிருபர் திருத்தியது
check icon
ஆசிரியர் திருத்தியது
i icon
உறுதிப்படுத்தப்படக்கூடியது
edit icon
ஆசிரியபீட அங்கீகாரம்
nocheck icon
மொழி திருத்திய பதிப்பு
#Constitutional
#Sampanthan
#TNA
#slparliament
#Mahindarajapaksa
#Maithripalasrisena
#Srilanka
#lka
#Ranilwickremasinghe
#tamils
இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட புதிய அரசியல் யாப்பை உடனடியாகக் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியும் சர்வதேச நாடுகளுக்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரியும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்த சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றபோது, சபையில் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே இருந்ததாக நாடாளுமன்றச் செய்தியாளர்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர். இன்று வியாழக்கிழமை முற்பகல் 11.45க்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரேரணையைச் சமர்ப்பித்து சுமார் 72 நிமிடங்கள் உரையாற்றினார். ஆனால் சபையில் அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் உள்ளிட்ட எந்தவொரு உறுப்பினர்களும் இருக்கவேயில்லை.
 
எதிர்த்தரப்பில் மூன்று உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் பதினொரு உறுப்பினர்கள் சபைக்கு சமுகமளித்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பந்தன் உரையாற்றியபோது மகிந்த ராஜபக்ச தரப்பு உறுப்பினர் ஆனந்த அழுத்கமகே பிரதி சபாநாயகர் ஆனந்தக் குமாரசிறியிடம், ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்தார்.

சபையில் அரசாங்கத் தரப்பில் உறுப்பினர்கள் எவருமே இல்லையெனவும் எதிர்த்தரப்பில் மூன்று பேரும் கூட்டமைப்பில் பதினொரு பேரும் இருப்பதால் விவாதத்தைத் தொடர்ந்து நடத்த முடியாதெனக் கூறினார்.

இதனால் பிரதி சபாநாயகர் ஐந்து நிமிடங்கள் கோரம் மணியை எழுப்பினார். அதனையடுத்து இருபது உறுப்பினர்கள் சபைக்குள் வந்து அமர்ந்தனர். பின்னர் தனது உரையைச் சம்பந்தன் தொடர்ந்தார்.

எனினும் சபைக்குள் வந்த உறுப்பினர்கள் சில நிமிடங்களில் மீண்டும் எழுந்து சென்று விட்டனர். அனைத்து ஆசனங்களும் வெறுமையாக இருந்த நிலையில் சம்பந்தன் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தும் உரையாற்றினார்.

பிற்பகல் முன்று மணி முப்பது நிமிடத்தில் சபை ஒத்திவைக்கப்படும் வரை உறுப்பினர்கள் எவருமே சபையில் இருக்கவில்லை. விவாதத்தில் உரையாற்றுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்ட உறுப்பினர்கள் மாத்திரம் சபைக்குள் வந்து உரையாற்றிவிட்டுச் சென்றனர். அமைச்சர்கள் எவருமே உரையாற்ற வரவில்லை.

நாளை வெள்ளிக்கிழமையும் குறித்த விவாதம் தொடரவுள்ளது. ஈழத் தமிழ் மக்கள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பான விவாதங்களின் போது இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் உள்ளிட்ட சிங்கள உறுப்பினர்கள் எவருமே இருப்பதில்லையென நாடாளுமன்ற மூத்த செய்தியாளர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

அதேவேளை, புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான விதப்புரைகள் எதுவுமேயில்லை என்றும் இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட புதிய அரசியல் யாப்பு எனவும் சம்மந்தன் எந்த அடிப்படையில் கூறுகிறாரென நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார்.

நல்லிணக்க அரசாங்கம் என்று சம்பந்தன் அடிக்கடி கூறுவாரெனவும், ஆனால் விவாதம் நடைபெற்றபோது அரசாங்கத்தரப்பில் எவருமே இருக்கவில்லையென்றும் குற்றம் சுமத்திய சிவசக்தி ஆனந்தன், இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புரிந்துகொள்ள வேண்டுமென்றும் கூறினார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் அரசதரப்பு, எதிர்த்தரப்பு உறுப்பினர்கள் உட்பட மொத்தமாக இருநூற்று இருபத்தைந்து உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.